மேலே நீங்கள் பார்க்கும் படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இந்த விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவர் 2015 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் இரவாக இருக்கின்ற நேரம் பார்த்து இப்படத்தை எடுத்துள்ளார்.
படத்தில் சென்னை நகரம் இல்லை என்றாலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி முதலிய நகரங்கள் காணப்படுகின்றன. கோவை பெரிய நகரம் என்பதால் அது அதிகம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. படம் எடுக்கப்பட்ட சமயத்தில் தமிழகம் மீது அதிக மேகங்கள் இல்லை என்பதால் (குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேகங்கள் உள்ளன) நகரங்களின் இரவு நேர ஒளி தெளிவாக விழுந்துள்ளது.
நகரங்களை இணைக்கும் சாலைகளும் வாகனங்களின் ஒளி காரணமாக நீண்ட கோடுகளாகத் தென்படுகின்றன. படத்தில் நீண்டு கருமையாகக் காணப்படும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையாகும்.படத்தில் கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களையும் காண முடிகிறது.
நாஸாவின் ஜெமினி விண்கலம் பகலில் எடுத்த படம். நன்றி:NASA/earthsky |
மேலே உள்ள படம் பகல் நேரத்தில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். 1966 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாஸாவினால் உயரே செலுத்தப்பட்ட ஜெமினி -11 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் இப்படத்தை எடுத்தனர். ஜெமினி விண்கலம் மூலம் இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயரே சென்றனர்.
விண்கலம் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இப்படம் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. பூமியின் வளைவையும் படத்தில் காண முடிகிறது.
நிலப் பகுதி மீது அங்குமிங்கும் மேகங்கள் இருப்பதைக் காணலாம். படத்தில் நீண்ட தண்டு போன்று காணப்படுவது ஜெமினி விண்கலத்துடன் இணைந்த ஒரு பகுதியாகும்.