தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பான அணுகுமுறைகள்

420

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னும் அணியானது யாழ்ப்பாணத்தை 1996ஆம் ஆண்டளவில் இழந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அவ்வமைப்பின் அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும் இடம்பெயர்ந்தபின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கால நகர்வினை பின்னரும் தமிழ் ஈழம் என்னும் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தின் இதயப் பகுதியான யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றும் விடயத்தில் ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் எதிர்கொண்டதனால் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்துக்குத் தனதும், தன்னுடைய அமைப்பினதும் சார்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி களாக ஒரு சாராரை அனுப்பிவைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தமிழ் ஈழத்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆளானார். இதன் பெறுபேறா கத் சம்பந்தன் அவர்களின் தலைமை யிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னும் அரசியல் அமைப்பை உருவாக்கிய பிரபா கரன் அவர்கள் அவ்வமைப்பின் சார்பில் ஒரு சாராரைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்து ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கும்படி வினயமுடன் வேண்டி நின்றார். இவ்வேண்டுதல் சார்ந்த நிகழ்வின்போது சம்பந்தன் அவர்களோடு ஆனந்தசங்கரி அவர்கள் முரண்பட்டு நின்றமையும் அதன் பின்னணியாகச் சங்கரி அவர்களும், சம்பந்தன் அவர்களும் தமி ழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்ப் பதவி விடயத்தில் நீதிமன்றம் சென்று வழக்காடியமையும் நீதிமன்றமானது தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலை வராக ஆனந்தசங்கரி அவர்கள்தான் தலைமைவகிக்க முடியுமெனத் தீர்ப்பு வழங்கியமையும் அதன் விளைவாகச் சங்கரி அவர்கள் தனி அணியொன்றை அமைத்துச் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தமையுந் தெரிந்ததே. இத்தேர்தலின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் அவர்களின் வேண்டுதலையேற்றுத் தமிழ் மக்கள் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து அவ்வமைப்பினரைச் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியும் வைத்திருந்தார்கள்.

பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்னும் அமைப்பைச்சார்ந்த வேட்பாளர்களாகப் போட்டியிட்டு அன்னாரின் அனுசரணையுடன் நாடாளுமன்றம் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முதிர்ந்த அரசியல் தலை வருமான சம்பந்தன் அவர்கள் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையில் கண்ணியத்துடன் வெளியிட்ட பெரும்போக்கான கருத்து உடனடியாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அமுலுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் நாடு பிரியும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது போய்விடும் என்பதேயாகும். சம்பந்தன் அவர்கள் இக் கனவான் கருத்தைச் சிறிதளவேனும் மனக்கூச்சமில்லாமல் வெளியிட்டுப் பிரபா கரன் அவர்களின் ஆத்மதாகத்தையும், பல்லாயிரக்கணக்கான மாவீரச் செல்வங்களின் உயிர்த்தியாகத்தையும் மிகத் திமிர்த்தனத்துடன் கொச்சைப் படுத்தியுமிருந்தார்.

இதன் பின்னர் இறுதியாகச் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் விடுதலைப் புலிகளுக்கெதிரான வன்னி நடவடிக்கையின்போது அவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களையும் அவ்வமைப்பினர் முள்ளிவாய்க்கால் அழிவில் பின்வாங்கி இழந்தமையும், ஸ்ரீலங்கா அரச தரப்பினர் வெற்றி மம தையினால் ஆர்ப்பரித்தமையுந் தெரிந் ததே.
இவ்வாறான நிலைமையின் பின்னணியில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தமிழ்மக்களிடம் அதிகளவு வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டி வருவதுந் தெரிந்ததே. துரதிட்டவசமாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் இவ்வமைப்பானது யாழ்ப்பாண மாநகர சபையையும் நீலக்கட்சியின் ஆட்சிக்குச் சார்பான சோற்றுப்பிண்டங்களும், தசைப்பிண்டங்களுமான இரு பெண்மணிகளிடம் பறிகொடுத்திருந்தது.

மாகாணசபைத் தேர்தலின்போது வடமாகாண சபையை இவ்வமைப்பானது கைப்பற்றியிருந்தமையோடு அம்மாகாண சபையின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் என்பார் முதலமைச்சராகப் பதவியேற்றும் இருந்ததோடு தற்போதும் அவரே வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவி வகித்தும் வருகின்றார். துரதிட்டவசமாகக் கிழக்கு மாகாண சபையில் அதிகளவு ஆசனங்களைத் த.தே.கூட்டமைப்பார் பெற்றுக் கொண்டபோதுங் கூட அம்மாகாணத்தில் இஸ்லாமிய மக்கள் சார்பில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் என்னும் அரசியல் கட்சியும் கணிசமான அளவில் வெற்றியீட்டியதாலும் அக்கட்சியானது மிகுந்த மனப் போராட்டத்தின் பின் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தமையாலும் த.தே.கூட்டமைப்பால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டது. மாறாக அம்மாகாண சபையின் முதல்வராக ஆளுங்கட்சியின் அனுசரணையுடன் ஓர் இஸ்லாமியப் பிரமுகர் வரக்கூடியதாய் இருந்தது.
ஆனால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் என்பவர் நியமிக்கப்படும் போது இலங்கை அரசியல் கள அமைவிலும், தமிழர் அரசியல் உரி மைகள் தொடர்பிலானதும், சீவனோ பாயம் சம்பந்தப்பட்டதிலானதுமான போராட்ட நகர்வில் எந்தளவுக்கு அன்னார் தமிழ் மக்களுக்குள்ளுஞ் சரி, இலங்கை அரசியலுக்குள்ளுஞ்சரி அறியப்பட்டிருந்தார் என்பது ஆய்வுக் குரியதே.

இவ்விக்னேஸ்வரன் என்னும் ஓய்வுபெற்ற நீதியரசரான கொழும்புக் கனவானுக்குத் தமிழர் உரிமை தொடர்பிலான சம்பந்தத்தைவிட நீலக் கட்சியின் உறவின் பாற்பட்ட சம்பந்தமே அதிகளவில் இடம்பெற்றிருந்தது என்பதே உண்மையாகும். தமிழர் சுயமரி யாதை, உரிமைகள் தொடர்பில் ஒரு காலத்தில் தென்னிலங்கையின் சிங்கள மக்களுக்குள் ஆதரவுக் குரலெழுப்பி வந்த செந்தோழர்கள் தடம்புரண்டு செல்லாமல் நேர்மைகாத்து எஞ்சிநின்ற செந்தோழர் வாசுதேவ நாணயக்கார அவர்களும் பின்னாளில் தனது முன்னைய சகாக்களைப்போலவே தானும் தடம்புரண்டு தாய் மாமனார் ரத்வத்தை ஐயாவின் வெறித்தனமான வழிகாட்டலின்கீழ் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொடூரமான வழியில் யுத்தத்தை முன்னெடுத்த சந்திரிகா அம்மையாரோடு இணைந்திருந்தமையும், யுத்தத்தின் பின்னரும் ஆட்சிக்கு வந்த யுத்தத்தை வென்றெடுத்து நாட்டைப் பாதுகாத்த வீர தீரக் கதாநாயகனெனப் பெயரெடுத்த மஹிந்த அவர்களின் ஆட்சியிலே அமைச்சராக இணைந்திருந்தமையுங் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பின்னணியைத் தன்னகத்தேகொண்ட வாசுதேவ நாணயக்கார அவர்களின் சம்பந்தி தான் இவ்விக்னேஸ்வரன் ஆவார். அதாவது வாசுதேவ நாணயக்கார அவர்களின் புதல்வியை விக்னேஸ்வரன் அவர்களின் புதல்வன் மணம் முடித்துள்ளார். இவ்வேடிக்கையான விடயம் எவ்வாறு இடம்பெற்றது? இதன் பின்னணி என்ன? என விளங்குவது பயன்தரத்தக்க ஒன்றாக இருக்கும்.

ஆரம்பத்தில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நீண்டகாலத் தமிழர் உரிமைசார் கொள்கைவாதியாக விளங்கிய மாவை சேனாதிராஜா அவர்கள் நியமிக்கப்படவிருப்பதாகச் செய்திகள் கசிந்திருந்தன. இவ்விடயத்தில் அன்னாரின் அரசியல் வாழ்வின் நெறி யைத் தெளிவாக விளக்குவது சாலவும் பயனுள்ள ஒன்றாகவிருக்கும்.

மாவையார் அவர்கள் தந்தை செல்வா அவர்களின் தேர்தல் தொகுதி யான மாவிட்டபுரத்தைச் சொந்த இடமாகக்கொண்டவர். அன்னார் தமிழர் உரிமைகள் சார்ந்த அந்தரங்க சுத்தியுடன் இயைந்ததான உள்ளத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொண்டராகத் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்து அக்கட்சி சார்ந்த இளைஞர் அணியான தமிழ் இளைஞர் பேரவையிலும் அங்கம் வகித்தார். தமிழ்த்தேசிய உடையில் தமிழர் வாழிடங்களுக்கெல்லாம் சென்று தமிழர் உரிமை தொடர்பான எழுச்சியைத் தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக வீச்சுடன் உருவாக்கினார். இதனால் அந்நாளில் ஆட்சியிலிருந்த ஸ்ரீமாவோ அம்மையாரின் காவற்றுறையின் புலனாய்வுப்பிரிவினர் அவ்வம்மையாரின் உத்தரவுக்கியைபாக மாவையாரின் நடவடிக்கைகளை அவரைப் பின்தொடர்ந்து கண் காணிக்க ஆரம்பித்தனர். அவருடைய நடவடிக்கைகள் தொடர்பில் அச்சமடைந்த ஸ்ரீமாவோ அரசாங்கம் அவரைக் கைதுசெய்து கொழும்புக்குக் கொண்டுசென்று விசாரணை செய்த பின்னர் விடுவித்தும் இருந்தது. இந்நேரத்தில் மிகுந்த பணமுடையினால் அல்லற்பட்டுக்கொண்டிருந்த மாவையார் அவர்களில் புலனாய்வுப் பொலிசாரே இரக்கங்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான புகையிரதக் கட்டணத்தைக்கொடுத்து உதவி யமை குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் தான் அன்னார் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நல்லோரால் நடுநிலையாளர்களால் வரவேற்கத்தக்கதான அரசியல் பின்னணியைக்கொண்ட மாவையார் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளருக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவராக இருந்தபோதுங்கூட அரசியல் சூனியங்கள், பூச்சியங்கள் சிலரின் எதிர்ப்பினாலும், பசைப்பிடிப்பு ஒன்றை மட்டுமே சாதகமாக்கிக்கொண்டு தம்மை மிகக்குறுகிய காலத்திலேயே அரசியல் பிரபல்யங்களாக்கிக்கொண்ட குறுமதி படைத்த சில புதுமுகங்களின் காழ்ப்புணர்வினாலும் அன்னார் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவது தடுத்து நிறுத்தப் பட்டிருந்தது. இதன் பின்னணியில் உருவான விக்னேஸ்வரன் நியமனமும் அவரின் பதவியேற்பும் ஏற்படுத்திய தாக்கம் யாதென்பதை இனி நோக்குவோம்.

மாவையாரின் முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்துக்கான தெரிவின்போது ஏற்பட்ட இழுபறியையும் அதன் காரணமாகச் சம்பந்தன் அவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்பதையும் அறிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தன் அவர்களோடு இரகசியமாகக் கலந்துரையாடித் தனது அரசில் அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயக்கார அவர்களின் சம்பந்தியான விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கலாமெனவும், சம் பந்தன் அவர்களின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பான இடர்ப்பாடு இதன் மூலம் அகன்றிருக்கலாம் என நம்புவதற்கும் ஏதுநிலையுண்டு.
எது எப்படியிருந்தபோதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பான அணுகுமுறைகளுக்குள் ஆரம்பகாலத்தில் அம்மக்களுக்குள் செல்வாக்குப் பெற்றிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும் அதன் பின்னர் அம்மக்களுக்குள் வெகுஜன மயப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் சிங்கள மேட்டுக்குடியினரதும், சர்வதேசம் தழுவிய மேட்டுக்குடியினரதும் நலனின் பாற்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படை இயல்பு தற்போது மிகத் துல்லியமாகத் தெரிகின்ற ஒன்றாகவுள்ளது. தற்போதைய இவ்வணுகுமுறைகளின் ஆரம்ப கர்த்தாவாகச் சம்பந்தன் அவர்கள் விளங்கியமையோடு பிரபாகரன் அவர்களின் அணுசரணையுடன் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்துக்கு மிகவும் ஆரவாரத்துடனும், குதூகலத்துடனும் தனது சகாக்களுடன் சென்ற திருமலை இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் அம்மன்றுக்குள் தெரிவித்த கயமைத்தனமான கன்னிக்கருத்து இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு இலங்கைத் தேசத்தில் உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் நாடு பிரியும் ஆபத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதாகும்.

இவ்வாறான ஓர் அபத்தமான கருத்துக்குரிய அரசியல் உள்ளக்கிடக்கைதான் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும் இருந்துவந்தது. சம்பந்தனின் இவ்வுள்ளக் கிடக்கையின்பாற்பட்ட அணுகுமுறைகள் அவருடைய அரசியல் சகாக்களுக்கும் படிப்படியாகத் தொற்றிக்கொண்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்தும் வந்திருக்கின்றது. அப்போதிருந்த நாடாளுமன்றக் குழுவுக்குள் நீண்டகாலத் தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பிலான கொள்கைவாதியும், மத்திய வங்கியில் வகித்துவந்த உத்தியோகத்தையே உதறியெறிந்துவிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளையின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து அக்கட்சிக்காகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அந்தரங்க சுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் அயராது உழைத்து வந்த ஈழவேந்தன் அவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்குச் சமுகமளிக்காமல்விட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தானே வலிந்து வேண்டுமென்றே இழந்தமையும் சம்பந்தன் தலை மையிலான இந்நாடாளுமன்றக் குழுவின் இச்சாபக்கேடான தமிழர் தொடர்பான அணுகுமுறைகளை இயல்பான தமிழர் விடுதலை தொடர்பான கொள்கைவாதியான ஈழவேந்தன் அவர்களினால் சாதித்துக் கொள்ளமுடியாமல் இருந்தமையேயாகும்.

சம்பந்தனின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் அமுலாக் கமும், நாட்டுப்பிரிவிணை தொடர்பான எச்சரிக்கையும் என்பதிலிருந்து ஆரம்பமான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பிலான அணுகுமுறைகள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகளின் தமிழர் தொடர்பிலான சிங்கள வர்க்க நலனின் பாற்பட்ட அணுகுமுறைக ளாகவே தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவ்வளர்ச்சியானது கொழும்புக்கனவானும், இளைப்பாறிய நீதியரசருமான விக்னேஸ்வரன் அவர்களின் பிரசன்னத்துடன் மேலும் பரிணாமம்பெற்றதோடு தற்போது எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியைச் சம்பந்தன் அவர்கள் ஏற்றுக்கொண்டமையோடு அப்பரிணாமம் ஆனது அதி உச்சக்கட்டத்தையும் எய்தியுள்ளது.

எனவே தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பான அணுகுமுறைகள் காலங்காலமாக வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களுக்குள் வெகுஜன மயப்பட்டிருந்த அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகளின் அப்பட்டமான, அம்மணமான வர்க்க நலன் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. இக்கட்டமைப்புக்குள் உள்ள Pடுழுவு, வுநுடுழு, நுPசுடுகு ஆகிய கட்சிகள் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அழுத்தத்தின் பாற்பட்ட இவ்வர்க்க நலன்சார்ந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அணுகு முறைகளை அம்பலப்படுத்தித் தமிழ் எளியோரைக் காக்க முன்வருவார்களாக.

கருணைக்கண்ணன்

 

SHARE