நாட்டின் தேசியப் பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு இராணுவத்தினர் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும், அவர்களுடைய காணி களிலும் தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்துவதன் ஊடாக மக்கள் பல்வேறு அசௌ கரியமான நிலைமைகளை எதிர் நோக்குகின்றனர். அண்மையில் வவுனியா, செட்டிக்குளம், அடம்பன்குளம், குருசை சந்தி விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறு கோரி பிரதேசவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம், குருசை சந்தியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் வேலிக்கு இரவு நேரத்தில் விநியோகிக்கப்பட்ட மின்சாரம் ஆனது விடியற்காலையும் நிறுத்தப்படாது இருந்த நிலையில், அருகில் இருந்த வீட்டுக் குடும்பப் பெண்ணான கந்தசாமி இராஜேஸ்வரி (வயது 55) என்பவர் வேலி யில் உள்ள மரங்களில் இலைகளை பறித்தபோது மின்சாரம் தாக்கியதில் அவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.
இதனையடுத்து இறுதிக்கிரியை கள் அவரது இல்லத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் அப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள இவ் விசேட அதிரடிப்படை முகாமை உடன டியாக அகற்ற வேண்டும் எனவும், குறித்த பெண்ணின் மரணத்திற்கு பாரபட்சமின்றி நீதி வழங்கப்படவேண்டும் எனவும் அதிரடிப்படை முகாம் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விசேட அதிரடிப்படை முகாமானது எமது பகுதி நெற்களஞ்சியசாலை, கமநலசேவை நிலையம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல பொதுத் தேவைகளுக்குரிய காணிகளை உள்ளடக்கியுள்ளது. இதனை அகற்றுமாறு பல தடவை கோரிக்கைவிடுத்தும் உரிய தீர்வுகள் இதுவரையில் எமக்குப் பெற்றுத்தரப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இவ் இராணுவ முகாமின் பொறுப்பற்ற செயற்பாட்டால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த இராணுவ முகாமை இவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு ஒரு உயிர் இழப்புக்கு காரணமான இச்செயற்பாட்டுக்கு சட்டரீதியில் பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வருகை தந்த வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகா தார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.பி. நடராஜா, இ.இந்திரராசா ஆகியோரிடம் மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த வவுனியா மாவட்ட நீதிமன்றம், குறித்த பகுதி அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்துமாறு செட்டிக்குளம் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
நிலைமைகள் இவ்வாறிருக்க தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பதன் ஊடாக சிங்கள அரசு எதனை சாதித்திருக்கிறது. இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் ஊடாக மக்கள் மத்தியில் இவர்கள் எதிர்ப்பினையே சம்பாதித்துக்கொள்கின்றார்கள். விடு தலைப்புலிகளது யுத்தம் பின்னடைவைக் கண்ட நிலையில் இன்னமும் மக்களது பிரதேசங்களில் இவர்கள் முகாமிட்டுள்ளமைக்கான காரணம் என்ன? மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தமிழ் மக்களை உட்படுத்துவது இதன் நோக்கமா? என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
மக்களது பொதுத்தேவைக்கான காணிகளையே இவர்கள் அபகரித்துள்ளார்கள். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையினரை வெளியேறிச்செல்லுமாறு மக்கள் கோரியபோதிலும் ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை. நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நல்லாட்சி இடம்பெறுகிறது எனக்கூறிக்கொள்ளும் இவர்கள் இன்னமும் ஏன் தமிழர் பிரதேசங்களில் தமது இராணுவ நிலைகளை பலப்படுத்த வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் மரணமான பெண்ணின் வீட்டின் முன்பதாக கிளைமோர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக அக்குடும்பத்தினர் விசேட அதிரடிப்படையினரால் வன்மையாகத் தாக்கப்பட்டு இடம்பெயர்ந்து புகையிரதத் திணைக்கள விடுதியில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் சுமுகமான நிலைமைகள் திரும்பியவுடன் மீண்டும் அவ்வீட்டில் குடியமர்ந்து வசித்துக் கொண்டிருக்கும்போதே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்டு அவர்களின் பாதுகாப்பினைக் காரணங்காட்டி மிலேச்சத்தனமாக செயற்பட்டதன் விளைவாகவே இம் மரணம் சம்பவித்திருக்கின்றது. இவ்விடயம் பிரதேசவாழ் மக்களை பெரிதும் பாதிப்புக் குள்ளாக்கியிருக்கின்றது. இதனை தவிர்க்கும் நோக்கில் மக்கள் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியபோதும் அதனால் இதுவரை பயன் இல்லை. இவ்வாறான நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில் தேர்தல் காலங்களில் மாத்திரமே அவர்கள் மக்கள் முன் பிரசன்னமாகின்றார்கள். ஏனைய காலங்களில் மௌனித்தவர்களாக தமிழ் மக்களின் பிரச்சினையில் அக்கறையற்று செயற்படுவதன் காரண மாகவுமே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகின்றன. வன்னி பெரு நிலப்பரப்பில் மாத்திரம் 125இற்கும் அதி கமான மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் இராணுவ மற்றும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலைகளானது குறிப்பாக புலம்பெயர்ந்துவாழும் மக்களின் காணி களை தங்களின் இருப்பிடங்களுக்காக அபகரித்திருக்கின்றார்கள். எனி னும் தற்போது இலங்கையில் சுமு கமான நிலைமை ஏற்பட்டுள்ள நிலை யில் தமது சொந்தக் காணிகளைப் பார்வையிட வரும்பொழுது பல்வேறான சிரமங்கள் ஏற்படுகின்றது. தங்களுடைய நிலப்பரப்புகளை விடுதலைசெய்து தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றபெபாழுது அச்சுறுத்தப்படுவதும், வேறு இடங்களில் மாற்றுக் காணிகளை வழங்குவோம் எனக்கூறுவதும் வழமை. இதனைக் கேட்பதற்கு யாருமில்லை.
குறிப்பாக சிங்களப்பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் மக்கள் குடியிருக்கும் பகுதி களை அண்மித்தோ அல்லது அவர்களது சொந்த நிலங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா? இவற்றை அரசியல்வாதிகள் கேட்கவேண்டிய தேவை இருக்கின்றதல்லவா? வவுனியா அரச அதிபரது செயற்பாடுகள் முரண்பட்டவை எனத்தெரிந்தும் தொடர்ந்தும் அவர் இங்கு கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். இவ ரது மாற்றத்திற்காக வடமாகா ணசபையும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அவ்விடயம் வெற்றியளிக்கவில்லை. இவ்வாறு எமது அரசியல்வாதிகள் நடந்துகொள்ளாமல் இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய இராணுவ நிலையத்தினை அப்புறப்படுத்தித்தருமாறு இப்பிரதேச வாழ் மக்கள் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றனர்.
வவுனியா நகரப்புறங்களை அண்டிய பகுதிகளிலும் இராணுவத்தினர் மக்களின் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ளனர். ஆனால் அவர்;கள் வசிக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இது அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதொரு விடயம். வடகிழக்கினைப் பொறுத்தவரையில் குறிப்பாக இராணுவ நிலைகள் அதி கமாக மக்கள் பிரதேசங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. எந்தெந்த முகாம்கள் எந்தெந்தப் பகுதிகளில் இருக்கின்றது என்கின்ற தரவுகள் எம்மிடம் இருக்கின்றது. எனினும் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு அவற்றை வெளியிட முடியவில்லை.
தேசியப்பாதுகாப்பு எனக்கூறிக்கொண்டு மக்கள் பிரதேசங்களில் நிலை களை அமைத்துக்கொண்டிருப்பது வீண்விரயமாகும். ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் வாய்ந்ததாகும். ஆனால் அதற்கு ஒரு எல்லையுண்டு. அதனையே ஆசிய மத்திய ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுவருகின்றன. ஒரு நாட்டில் யுத்தம் நிறைவடைந்தால் அல்லது நடைபெற்றால் அதனது புலனாய்வு கட்டமைப்புக்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமது இராணுவ நிலைக ளையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியுமே தவிர, மக்கள் செறிந்துவாழக்கூடிய பிரதேசங்களில் இராணுவத்தினர் அத்துமீறி முகாம்களை அமைப்பதனால் எதனையும் சாதித்துவிடமுடியாது.
அப்பகுதிவாழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்த செட்டிக்குள பிரதேசத்தில் இருக்கும் இராணுவ முகாமை அகற்றுவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரிடமும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதேவேளை வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் இருவரிடமும் இச்சம்பவம் தொடர்பாக வினவியபொழுது, உரியவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியிருக்கின்றோம் எனவும் விரைவில் அப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றுவதாகக் கூறியிருக்கின்றனர். இதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம் எனவும் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்தும் இராணுவ நிலைகள் பொதுமக்களுடைய நிலங்களில் இருப்பதனால் அப்பகுதிவாழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுபோன்றே வடகிழக்குப்பகுதிகளிலும் இருக்கக்கூடிய இராணுவ நிலைகளும் முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதும் மக்களதும் எதிர்பார்ப்பாகும்.
சுழியோடி