விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை!
சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் “சிறுவர் போராளிகள்” விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர். இவ்வாறான சில நஞ்சுத் தமிழர்களினால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சர்வதேச அரங்கினில் தடைகளும் உருவாகி எமக்கான ஒரு தேசம் உருவாகமல் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை வந்து எமக்கான பேரவலங்களை உருவாக்கி பெரும் துன்பங்களாக முடிந்து போனது. இதை யாரும் மறுக்க முடியாது!
சிறுவர் போராளிகள் விடயம் சிலருக்கு சாதாரணமான விடயமாக இருக்கலாம், ஆனால், அதன் தாக்கங்கள் புற்று நோயைப் போல் பாரதூரமானது!
விடுதலைப்புலிகளை மனிதாபிமானம் அற்றவர்களாகவும், இரக்கம் இல்லாதவர்களாகவும் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சர்வதேச அளவில் முத்திரை குத்தி விட இப்படியான போலியான அர்த்தமற்ற, உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள் காரணங்களாக அமைந்து விடுகின்றன.
உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பில் “சிறுவர் போராளிகள்” இருந்தார்களா? இருந்தார்கள் என்று சொல்பவர்களிடம் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.
எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையின மக்கள் மீது அந்நாட்டு ஆளும் வர்க்கம் அதீதமான அழுத்தங்களை பல வடிவங்களில் பிரயோகிக்கும் போது… அந்த ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களில் இருந்துதான் ஆயுதப் புரட்சி வெடிக்கின்றது!
அந்த ஆயதப் புரட்சியானது தமக்குரிய உரிமைகளையும், நீதிகளையும் பெற்றுக் கொள்வதற்கே! அப்படிப்பட்ட அந்தப் புரட்சியாளர்களைத்தான் இன்று வரையும் சர்வதேச சமூகம் பயங்கரவாதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் குற்றம் சுமத்தி அடக்கி ஒடுக்கி வருகிறது! (இதில் சில இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களை சேர்த்துக் கொள்ள முடியாது)
இதே போல்தான் ஈழத்தமிழர் போராட்டமும்! ஒரு குறுகிய தேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களை துன்புறுத்தி அவர்களின் உரிமைகளைப் பறித்து, உணர்வுகளை நசுக்கி ஒடுக்கி வருவதுடன் அந்த மக்கள் மீது பொருளாதாரத் தடைகள், மருத்துவத் தடைகள் என பல தடைகளை விதித்து… கடல், தரை, வான் பகுதியில் இருந்து தினமும் தாக்கி அழித்து பாரிய உயிர்ச்சேதங்களையும், உடமைச் சேதங்களையும் உருவாக்கி விடுகிறது சிங்கள அரசு!
அந்த யுத்த தேசத்தில்தான் பெற்றோர்களை இழந்த குழந்தைகளானவர்கள் தங்குமிட வசதி, உறங்குமிட வசதி, உணவு வசதி ஏதுமின்றி தவித்துப் போய் விடுகிறார்கள்; தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது உறவினர்களுடன் போய் தங்கிக் கொள்ளலாமென்றால் அதுவும் சாத்தியமாகாது! காரணம், அந்த உறவினர்கள் கூட யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் ஏதுமில்லாமல் இடப்பெயர்வுகளுடன் அடுத்த நிமிடம் என்னவாகுமோ எனத் திகிலோடு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருப்பவர்களாவார்கள்! தம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள், எவ்வாறு அடுத்தவர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்?
பாடசாலை போனால்… பாடசாலை அகதி முகாம்களாகவும் சில வேளை பாடசாலை யுத்தத்தினால் அழிவுற்றதாகவும், கோவில்கள் போனால் கடவுளே இல்லாமலும், கோவில்கள் சேதமடைந்தும் ஒரு சூனியநிலையினை உருவாக்கி மனதில் விரக்தியினை ஏற்படுத்தி விடும்.
நேரடி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளானவர்கள் பெற்றோர்களை இழந்து ஒரு இடத்தில் நின்று அழக்கூட முடியாத அவல நிலையில் அகதியாக… அனாதையாக உணவின்றி, உறையுளின்றி ஓடியோடி தம்மைத் தாக்கி… தமது பெற்றோர்களை அழித்த எதிரிகளை பழி தீர்க்க வேண்டும் என்ற குரோத எண்ணமானது அந்த வலி நிறைந்த குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகிறது.
அந்த வேளையில் தமக்குப் பாதுகாப்பாகவும், தமது உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உறவினர்கள் மறுத்த வேளையிலும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பே அவர்களின் கண் முன் வந்து நின்றது!
இன்று பாரதூரமான குற்றச்சாட்டினை முன் வைக்கின்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது (UNICEF) அந்தக் குழந்தைகள் அனாதரவான நிலையில் நின்ற போது திரும்பிக்கூடப் பார்த்தில்லை! இனவெறி பிடித்த இலங்கை அரசு கூட இரக்கம் காட்டாமல் அவர்களை மேலும் மேலும் தாக்கி அவர்களுக்குள் விரோதப் போக்கினையே உருவாக்கியது!
மேற்குறிப்பிட்ட அனாதரவான சிறுவர்கள்தான் தமது முக்கிய தேவையான உணவிற்கும், இருப்பிடத்திற்கும் வேறு சிறுவர்களோ தமது பெற்றோர்களை கொலை செய்த எதிரியை பழி தீர்க்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய முன் வந்தார்கள்.
இதில்தான் சிலர் முக்கியமாக ஒன்றினைக் கருத வேண்டும்; திரைப்படங்களில் கதாநாயகன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்ற போது தனது பெற்றோரை வில்லன் கொலை செய்தால் அந்த நாயகன் பெரியவனாக வளர்ந்து அந்த வில்லனுடைய சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவான். இதைத்தான் திரைப்பட பார்வையாளர்களும், ரசிகர்களும் விரும்புகின்றார்கள்.
திரைப்படத்தில் வருகின்ற ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தையே இருக்கைகளின் நுனியில் இருந்து கதாநாயகன் கொலை செய்ய வேண்டும் என துடிக்கும் நீங்கள்… நிஜ வலிகளோடு தனது குடும்பம், தனது இருப்பிடம், தனது ஊர், தனது முகவரி அனைத்தையும் இழந்தவன், பல துயர வலிகளோடு தானும் போராளியாகி எதிரியை பழி வாங்கத் துடித்தால்… ஏன் அவர்கள் மட்டும் உங்கள் கண்களுக்கு எந்த வலிகளும் இல்லாத “சிறுவர் போராளியாகத் தெரிகின்றார்கள்??
உடனே நீங்கள் கேட்பீர்கள் “திரைப்படத்தில் கதாநாயகன் வளர்ந்துதானே பழி வாங்குகிறான்” என்று? உண்மைதான்! நீங்கள் நினைப்பது போல் ஒற்றைப் பாடலில் வளர்ந்து பெரியவனாக வளர இதுவொன்றும் திரைப்படம் இல்லை!
அவர்கள் விடுதலைப்புலிகளோடு இணையாவிட்டால் உணவின்றி பட்டினியாலும், உறவின்றி பாதுகாப்பில்லாமலும் இறந்தே போய் விடுவார்கள்!
இங்குதான் அனைவரும் ஒன்றினைக் கருத வேண்டும்; விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் போய் இணைந்தவுடன் அவர்களைப் போராட விடுதலைப்புலிகள் ஒருபோதும் அனுமதித்ததில்லை! இதை உறுதிப்படுத்த வேண்டுமெனில் விடுதலைப் புலிகளின் வீரர்கள் இறந்ததற்கான மாவீரர்கள் பட்டியலில் பல ஆயிரம் மாவீரர்களின் விபரம் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான முழு விபரமும் இருக்கின்றது. அதில் பெயர் விபரம், பிறந்த ஊர், பிறந்த ஆண்டு என அனைத்து விபரமும் இருக்கின்றது. அந்த மாவீரர்கள் பட்டியலை சோதித்துப் பார்த்தால் தெரியும். அந்தப் பட்டியலில் சிறுவர் போராளிகள் இறந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது!
விடுதலைப் புலிகள் அவர்களை தத்தெடுக்கா விட்டால் அந்த அனாதரவான குழந்தைகள் அந்த யுத்த சூழ்நிலையில் இறப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை!
விடுதலைப்புலிகளும் தத்தெடுத்தவுடன் அவர்களை ஒரு போதும் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதில்லை… அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினைக் கருத்திற் கொண்டு அவர்களுக்காகவே 90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெற்றோர்களை இழந்த அனாதரவான குழந்தைகளுக்கென “செஞ்சோலை” எனும் சிறுவர் இல்லத்தினை உருவாக்கினார்கள். ஆரம்ப காலப்பகுதியில் சில மாதங்களேயான கைக் குழந்தைகளில் இருந்து ஆண், பெண் என இரு பாலர்களையும் உள்வாங்கினார்கள்.
உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் எந்தநேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு தேசத்தில் பெற்றோர்களை இழந்து அனாதரவான குழந்தைகளை பாதுகாக்க காப்பகங்களை உருவாக்கியதில்லை!
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் “போரினால் பெற்றோர்களை இழந்து தான் அனாதையாகியது போல் தமிழீழத்தில் எந்தக் குழந்தையும் அனாதையாகக் கூடாதெனவும், அவ்வாறான அந்தக் குழந்தைகள் அனைவரையும் தத்தெடுத்து நீங்கள்தான் அவர்கள் அனைவருக்கும் தாயாக வேண்டும்” எனவும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் “காந்தரூபன் அறிவுச்சோலையான” ஆண் குழந்தைகளுக்கான ஒரு குழந்தைகள் காப்பகத்தை உருவாக்கினார்.
செஞ்சோலையில் வளர்ந்து வந்த ஆண் குழந்தைகள் அனைவரையும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இணைக்கப்பட்டு கல்வி போதிக்கப்பட்டது. செஞ்சோலை பெண் குழந்தைகளுக்காக மட்டுமென மாற்றப்பட்டது.
பெற்றோரிடமிருந்து இருந்து கல்வி பயின்ற மாணவர்களை விட செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையில் கல்வி பயின்ற மாணவர்களே சிறந்த ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சகல தொழில் நுட்பங்களையும் கற்று தலை சிறந்த மாணவர்களாக உயர்ந்தார்கள். இவையாவும் தமிழீழத்தில் வாழ்ந்த அனைத்து மக்களோடு புலம்பெயர் தமிழர்களும் நன்கறிவார்கள்.
18 வயது தாண்டிய படித்து முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகம் சென்று படிக்கவும், வேறு வேலைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். வேறு சிலருக்கோ… திருமண வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் மகிழ்வுடன் வாழ்வதற்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு, தொழில்வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. போராட விரும்பியவர்கள் மட்டுமே விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்வாங்கப்பட்டார்கள். அதுவும் அவர்களின் படிப்பின் தராதரத்தை வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பணி நிமிர்த்தம் செய்யப்பட்டார்கள்.
செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலையோடு கண் தெரியாத… காது கேளாத… வாய் பேசாதவர்களுக்கென “இனிய வாழ்வு இல்லமும்”, வேறாக “பாரதி சிறுவர் இல்லமும்”, “செந்தளிர் இல்லமும்”, “புனிதபூமி இளையோர் இல்லமும்” சகல வசதிகளோடும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள், கட்டாயப்படுத்தி சிறுவர்களை தமது அமைப்பில் இணைத்தார்கள் என்றால்…. எதற்கு காலத்தையும், நேரத்தையும் வீண் விரயமாக்கி எந்த நேரமும் யுத்தம் நடக்கின்ற ஒரு குறுகிய தேசத்தில் தேவையில்லாமல் பல குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும்??
இவைகள் ஒரு புறமிருக்க…. பல இணையத் தளங்களிலும், முகநூல்களிலும் (Facebook) சில விஷமிகள், வரிப்புலி சீருடை அணிந்த குழந்தைகள், சிறுவர்கள் படத்தினை பதிவு செய்து… விடுதலைப்புலிகள் அமைப்பில் “சிறுவர் போராளிகள்” இருந்தார்கள் என முட்டாள்தனமான கருத்துக்களைப் பதித்துப் பரப்பி வருகிறார்கள்.
இதில் மிகவும் வேதனை என்னவென்றால், எனது மகள் துவாரகாவையும் சிறுவர் போராளியாக்கி விட்டார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரேதேசத்திற்குள் வாழ்ந்த அனைத்துத் தமிழர்களும் விடுதலைப்புலிகளை கதாநாயகர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் வணங்கி வந்தார்கள். அத்துடன் தமது குழந்தைகளுக்கும் விடுதலைப் புலிகளின் சீருடைகளை அணிவித்து அழகு பார்த்தார்கள். தாயும் தந்தையும் போராளியாக இருந்தால், நிச்சயமாக தமது குழந்தைகளுக்கும் சீருடை அணிவித்தே நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிவதனை வீரமாகவும், கௌரவமாகவும் கருதினார்கள்.
பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டி வந்தால் அதிகமான குழந்தைகள் விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிந்தே நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களாக வேடமணிந்து முதல் பரிசினையும் பெற்றுக் கொண்டு விடுவார்கள்.
இதேபோல்தான் எனது மூத்த மகளுக்கு அவரது மூன்று வயதில் வரிப்புலிச் சீருடையினை அணிவித்து அழகு பார்த்தேன்… இப்போது அந்தப் படத்தினையும் பதிவிட்டு “சிறுவர் போராளி” என சொல்லி பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
உண்மையிலேயே… மனசாட்சி இல்லாமலும், சிந்திக்கும் ஆற்றல் இல்லாமலும் இருப்பவர்களிடம் நான் சிலவற்றைக் கேட்க விரும்புகின்றேன்?
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிலர் என் முகநூல் தனிச்செய்தியில் வந்து என் மகளின் படத்தினை வைத்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள் அவர்களிடமும் சில கேள்விகள்?
◆ உங்கள் நாட்டுப் பாடசாலை நிகழ்வுகளில் வினோத உடைப் போட்டிகளில்… கடவுள்களாக, திருவள்ளுவராக, பாரதியாராக, ஔவையாராக, ஆசிரியர்களாக அல்லது வேறு தலைவர்களாக ஏன் உங்கள் நாட்டுக் காவல் துறையாக, தேசத்தையே பாதுகாக்கும் இராணுவ வீரர்களாக வேடம் போடச் சொன்னால்… நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு கோவணத்தைக் கட்டி விட்டா பாடசாலை நிகழ்வுகளுக்கு அனுப்புவீர்கள்?? இல்லைத்தானே?
◆ நீங்கள் மட்டும் இராணுவ வீரராக அல்லது வேறு எப்படியும் உங்கள் குழந்தைகளுக்கு உடை அணிவித்து வினோத உடைப் போட்டிகளுக்கு அனுப்பலாம்… ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் நாட்டு இராணுவ உடை அணிந்து அனுப்பினால்… உங்கள் குருட்டுக் கண்களுக்கு அவர்கள் சிறுவர் போராளிகளா??
◆ உங்கள் ஊர் சிவகாசிப் படங்களில் (Poster) அதிகமான படங்களில் குழந்தைகள் இராணுவ வீரனாக, மருத்துவராக வேறு பல தலைவர்களாக காட்சி அளிப்பார்கள். (ஈழத்திலும் சிவகாசி மாதிரி ஓர் ஊர் இருந்திருந்தால் இன்னும் பெரிய படங்களாக வெளி வந்திருக்கும். அவ்வாறானதொரு ஊர் இல்லாமல் இருந்தமையால்தான்… இது போன்ற சிறிய படங்கள் வந்திருக்கின்றது.) சிவகாசி படங்களில் வருகின்ற இந்தியா இராணுவ சீருடை அணிந்த குழந்தைகளைப் பார்த்து விட்டு “அட இந்திய இராணுவத்தில் குழந்தைகளும் இருக்கின்றார்கள்” என்று எந்தவொரு ஈழத்தமிழர்ளும், தமிழ் உணர்வாளர்களும் சொல்லுவார்களா?
◆ உலகத்தில் எந்த நாட்டிலாவது துப்பாக்கியை விட சிறியதாக இருக்கும் மூன்று வயதுக் குழந்தை துப்பாக்கி தூக்கி போராடிய சரித்திரம் உண்டா??
மூளையில்லாத விசக்கிருமிகள் சொன்னதைக் கேட்டு உங்களை, நீங்களே முட்டாள்களாக ஆக்காதீர்கள்!!
◆ உங்கள் நாட்டில் ஈழத்தில் நடந்த யுத்தம் மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதனால், நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். உங்கள் நாட்டிலும் முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சிறுபான்மை இனத்தை கடுமையான யுத்தத்தினால் நசுக்கி எல்லா வளங்களையும் முடக்கி தாய், தந்தை உறவுகளை கொலை செய்து குழந்தைகளை அனாதையாக்கினால்… உங்களால் அக் குழந்தைகளை காப்பாற்றியிருக்க முடியுமா?
தமிழீழத்தில் இறுதி யுத்தம் நடப்பதற்கு முன்னரான காலப்பகுதியில் அங்கு அனாதைக் குழந்தைகளே கிடையாது!
◆ போரினிலே பெற்றோரை இழந்த சுமார் நான்காயிரம் குழந்தைகளுக்கு தலைவர் பிரபாகரன் அவர்களே தாயும் தந்தையுமானார். அவர் அந்தக் குழந்தைகளுடன் இருக்கின்ற சுமார் ஆயிரக்கணக்கான படங்கள் இணையங்களில் இருக்கின்றது. அதைவிட்டு அடுத்தவர் குழந்தைகளின் வினோத உடைப் போட்டிக்கு எடுத்துக் கொண்ட ஒரு சில படங்கள்தான் உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா?
◆ சிறுவர் போராளிகளாக இருந்திருந்தால் எதற்கு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை, இனியவாழ்வு இல்லம், செந்தளிர் இல்லம், பாரதி சிறுவர் இல்லம், புனிதபூமி இளையோர் இல்லம் போன்றவைகளை உருவாக்க வேண்டும்? இவைகள் தேவையற்ற ஒன்றுதானே? இக்காப்பகங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி குழந்தைகளை பராமரித்து வந்தது உலகிற்கே தெரியும். ஏன், இது சம்பந்தமான பதிவுகள் கூட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தில் (UNICEF) இருக்கின்றதே! இந்தக் காப்பகங்களால்தான் ஈழத்துக் குழந்தைகள் எவரும் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் அனாதையாகவில்லை!
◆ உங்கள் நாட்டில் ஈழத்தில் ஏற்பட்ட போர் போன்று ஒன்று ஏற்பட்டிருந்தால்… இவ்வாறான அனாதைக் குழந்தைகளை நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? போர் இல்லாமல் இருந்தே… இப்பொழுதும் பேரூந்து நிலையங்களிலும், கோவில்களிலும் வேறு இடங்களிலும் குழந்தைகள் பிச்சை எடுத்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். வேறு பல குழந்தைத் தொழிலாளர்களை தேனீர்க்கடைகளில் அடிமைகளாக வேலை செய்வதையும் பார்க்கலாம்!!
◆ நீங்கள் பன்னிரண்டு வயது சிறுவர்களாக இருக்கும் போது, உங்கள் வீடுகளில் ஒரே ஒரு திருடன் புகுந்து உங்கள் கண்முன்னாலேயே உங்கள் குடும்பத்து அங்கத்தவர்களை துன்புறுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினால்… அங்கே அந்தக் கோரமான கேவலமான காட்சிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பீர்களா? அல்லது எதிர்க்கத் துணிவீர்களா?
◆ அங்கே பத்து வயதிற்குட்பட்ட பாலகனாக இருந்தாலும் அந்தக் காமூகத் திருடனை, அந்தப் பாலகனானவன் கொலை செய்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் எந்தத் தாயும் விரும்புவாள்! இது அவரவர்களுக்கு வந்தால்தான் புரியும்! உங்களைப் போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது?
90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல ஊர்களுக்குள் புகுந்த காட்டுமிராண்டி சிங்களப் படைகள், பல தமிழ் குடும்பங்களை கைது செய்து குழந்தைகளுக்கு முன்னாலேயே தந்தை, ஆண் சகோதரர்களைக் கட்டிப் போட்டு… தாய், சகோதரிகளை நிர்வாணமாக்கி கூட்டம் கூட்டங்களாகக் கதறக் கதற கற்பழித்துக் கொலை செய்து விட்டு பின் கட்டி வைக்கப்பட உறவுகளையும் கொலை செய்து விட்டுச் சென்று விடுவார்கள். அங்கிருந்து பழி வாங்க வேண்டும் என்ற வெறியோடு வரும் குழந்தைகளைத்தான்… விடுதலைப்புலிகள் தமது அன்புக் கரங்களால் அணைத்து செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற காப்பகங்கள் மூலம் அரவணைத்தார்கள்.
◆ உங்கள் தமிழ்த்திரைப்படங்களில் உங்கள் நட்சத்திரத் தலைவர்கள் சிறுவர்களாக எது செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள்… உங்கள் இதயத்தோடு தொங்கிக் கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவுகளின் நீதியான, நியாயமான விடுதலைப் போராட்டத்தினை இவ்வாறுதான் விமர்சித்து அறுத்து விடுவீர்களா?
“விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள்” என வாய் கிழிய கத்தி ஓலமிடும் ஓநாய்களே..!
2009 ஆம் ஆண்டின் பின் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் பெற்றோர், உறவினர்களை இழந்த பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, அடிமைகளாக தெருத்தெருவாக பிச்சை எடுத்து அலைகிறார்கள்! பல சிறுமிகள் துன்புறுத்தி கற்பழிக்கப்பட்டு கட்டாய விபச்சாரிகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள்! இன்றும் கூட வவுனியா தெருக்களில் பல பெண் குழந்தைகள் விபச்சாரிகளாக எதிர்காலத்தினை தொலைத்து இருளோடு உறவுகளின்றி, முகவரி இழந்து தெருத் தெருவாக அலைகிறார்கள்! இக் குழந்தைகளை ஏன் உங்களால் காப்பாற்ற முடியவில்லை?
◆ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இக் குழந்தைகள் அனாதைகளாகி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள்! சிறுமிகள் கசங்கி இரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள்! செஞ்சோலையில் அழகிய வண்ணப் பூக்களாக பூத்திருப்பார்கள்! இன்று இக்குழந்தைகள் பூப்பதற்கு செஞ்சோலையும் இல்லை! கூடுகட்டி வாழ்வதற்கு காந்தரூபன் அறிவுச் சோலையும் இல்லை!!
சிறுவர் போராளிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் என்பது முழுத்தவறு! சிறுவர் போராளிகள் இலங்கை அரசின் இனவெறி பிடித்த யுத்தத்தினால் உருவாக்கப்பட்டார்கள்!!!
◆ பெற்றோரைக் கொலை செய்து தங்குமிடத்தை அடியோடு அழித்து, ஊரை விட்டுத் துரத்தி, முகவரிகளே இல்லாமல் செய்து குரோத மனப்பாங்கினை உருவாக்கி பல ஆறாத வலிகளைக் கொடுத்து அவர்களையும் போராளியாகி போராடத் தூண்டியமைக்கான முதல் குற்றவாளி… இனவெறி பிடித்த இலங்கை அரசே!
◆ அதே குழந்தைகள் உணவில்லாமல் அலைந்து உடையுடுத்தி, உறையுள் கொள்ள ஏதும் இல்லாமல் உள்ளத்து வலிகளோடு… உடல் காயங்களோடு தெருத்தெருவாக அலையும் போது கண்டு கொள்ளாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமே… இரண்டாவது குற்றவாளி!
◆ ஆயுதங்கள் வழங்கியது மட்டுமல்ல போரினையும் ஊக்குவித்து மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைகட்டி நின்ற சர்வதேசமே… முன்றாவது குற்றவாளி!
இறுதியாக…
◆ இன்றும் கூட அதே குழந்தைகள் யாருமே இல்லாமல் ஆதரவற்று அனாதைகளாக அலையும் போதும்… விபச்சாரிகளாக்கப்பட்டு துன்பறுத்தப்படுவதையும் செய்திகள் ஊடாகக் கண்டும் காணாமல் இருந்து வாய்கூசாமல்… மனச்சாட்சியே இல்லாமல் விமர்சிக்கும் நீங்கள் நான்காவது குற்றவாளியல்ல..! மிகவும் மோசமான கேவலங்கெட்ட ஈனப்பிறவிகள்!
புலிகள் விதைகளை பூக்களாக்கினார்கள்!
நீங்கள் அந்தப் பூக்களின் இதழ்களை புடுங்கி கருக்கி மண்ணிற்குள் புதைக்கின்றீர்கள்!!
பூக்களை மறுபடியும் பூக்கவிடுங்கள்! அவர்கள் அழகாகப் பூத்து தேசத்தை அலங்கரித்து அவர்களால் அழகிய தேசம் உருவாகட்டும்!