கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை தொடரும்: உக்ரைன் திட்டவட்டம்

533
கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் வரையில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் முக்கிய அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை மீட்டெடுப்பதற்காக உக்ரைன் படையினர் அங்கு தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

ஆனால் அந்த இரு மாகாணங்களிலும் கடந்த 11-ந்தேதி கிளர்ச்சியாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். அந்த வாக்கெடுப்பில் கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கு அமோக வெற்றி கிடைத்தது. இதையடுத்து அவ்விரு மாகாணங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன. ஆனால் அதை உக்ரைனும், அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளும் ஏற்கவில்லை.

இந்த நிலையில் சமீப காலமாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே பலத்த சண்டை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் டன்ட்ஸ்க் நகர் விமான நிலையத்தைக் கைப்பற்ற முயன்ற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது உக்ரைன் படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் கிளர்ச்சியாளர்கள் 40 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், ரஷிய எல்லையில் அமைந்துள்ள ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தினர். இதில் ஒரு ராணுவ ஜெனரல் உள்பட 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், உக்ரைன் ராணுவ மந்திரி மைக்காய்லோ கோவால், கீவ் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கிழக்கு உக்ரைனில் அமைதியையும், ஒழுங்கையும் ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். கிழக்கு உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் வரையில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதல் தொடரும்” என அறிவித்தார். கிழக்கு உக்ரைனின் அமைதியற்ற நிலையின் பின்னணியில் ரஷியா உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படையினர் தங்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி உள்ளது.

டன்ட்ஸ்க் மக்கள் ஜனநாயகக் குடியரசின் தலைவர் என்று தன்னை அறிவித்துக்கொண்ட கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போரோடய், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், முதலில் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் துருப்புக்களை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

SHARE