இலங்கைத் தீவில் இந்தியாவின் இரகசியத் திட்டம்

558

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு காலத்திற்குக்காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இயைபாக வேறுபட்டு வந்தேயிருக்கின்றது. 1958இல் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரமானது இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் கல்வி பயின்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அவர்களினாலும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களி னாலும் இலங்கையின் சிங்கள – தமிழ் இனக்குரோதமும், பகைமையும் அரும்பினிலே கிள்ளியெறியப்பட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தமையின் பெறுபேறாக உருவான ஓர் அனர்த்தமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தமானது பௌத்த மத குருமார்களினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு பண்டாரநாயக்க அவர்கள் செல்வநாயகம் அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களை விற்றுவிட்டார் என்னும் கருத்தற்ற விஷமப் பிரச்சாரம் சிங்கள மக்களுக்குள் மிகவும் ஆவேசமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்பௌத்த மத குருமார்கள் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்து வந்த ஆரிய எதிர்ப்பை பிரதான மையக்கருவாகக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியையும், அதன் தலைவர் சி.என்.அண்ணாதுரை அவர்களையும் பிரதான எடுகோள்களாக முன்வைத்து சிங்கள மக்களுக்குள் இனவாதத் தீயைப் பற்றியெரியவைத்ததோடு தமிழ்நாட்டின் சனத்தொகைப் பரம்பலையும், அதன் கலை கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சியின் பரிணாமத்தையும் சினி மாவின் அபாரமான தாக்கத்தையும் சிங்கள மக்களிடம் எடுத்துவிளக்கி அர்த்தமற்ற ஒரு பயப்பிராந்தியையும் அவர்களுக்குள் கிளப்பிவிட்டிருந்தார்கள். இதன் விளைவாக வெகுண்டெழுந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களைப் பகைமையுடன் நோக்கிக் குரோதம்மிக்க தாக்குதல்களை மேற்கொண்டதுடன் அம்மக்களுக்குள் இடம்பெற்ற வன்செயல் உணர்வுள்ளவர்கள் தமிழ் மக்களைப் பல இடங்களிலும் வெட்டிக்கொலை செய்தும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடியும் பெரும் களேபரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இக்கலவரத்தினால் கலக்கமடைந்த தமிழ் மக்கள் தமது உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தம்முடைய சொந்த ஊர்களைச் சென்றடைந்தார்கள். இக்கலவரத்தின்போது இலங்கைப் பொருளாதாரத்துக்குள் 95மூமான வருமானத்தை ஈட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த மலையக உழைக்கும் வர்க்கக் கண்ணின் மணிகள் அவர்களிடம் இருந்த ஒரேயொரு சொத்தான உயி ரைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழர் பிரதேசங்களை நாடி அபலைகளாக ஓடிவந்து அப்பிரதேசங்களையே தமது வாழிடங்களாக்கிக் கொண்டமையும் தெரிந்ததே. இவ்வாறான களே பரங்களுக்கு மத்தியில் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் கொழும்பு வாசஸ்தலத்துக்குப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இக் களேபரங்களை அறிந்த தி.மு.க.தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக வும் ஆவேசமடைந்து இலங்கையில் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான அனர்த்தங்கள் தொடர்பில் தனக்கேயுரிய பாணியில் கருத்துவெளியிட்டு இந்திய மத்திய அரசினதும், உலகத்தினதும் கவனத்திற்கு இலங்கைத் தமிழ் மக்களின் அவலநிலையை உட்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே சத்தியாக்கிரகப் போராட்டங்களினாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளினாலும் இலங்கைத் தமிழ் மக்களின் விமோசனம் தொடர்பில் எதுவித பயனும் பெறமுடியாத நிலையினால் மிகவும் களைப்படைந்து மனச்சோர்வுக்கு ஆளான தந்தை செல்வா அவர்களின் பின்னாளில் தன்னுடைய ஆற்றாமையின்பாற்பட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமரர் அமிர்தலிங்கம், அவரது துனைவியார் மங்கையர்க்கரசி, அக்கட்சியின் கொள்கைப் பிரச்சார பத்திரிகையான சுதந்திரனில் ஆசிரி யராகப் பணியாற்றியவருமான அமரர்.கோவை மகேசன் ஆகியோர் சகிதம் தன்னால் துடைக்கமுடியாமல் இருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்களின் அவலநிலை தொடர்பில் தமிழக அரசியல் தலைவர்களிடம் எடுத்துரைப்பதற்காகத் தமிழகம் சென்றிருந்தார். இலங்கைத் தமிழ் மக்களின் இழிநிலை தொடர்பில் 1950களி லேயே மிகவும் வேதனையடைந்திருந்த அண்ணா அவர்கள் 1969இலேயே அமரராகிவிட்டதனால் செல்வா அவர்கள் இலங்கைத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் அவரிடம் எடுத்துரைக்கும் வாய்ப்புத் துரதிட்டவசமாக அற்றுப்போயிருந்த போதுங்கூட திராவிட மரபுசார் அரசியலின் முன்னோடியான தந்தை ஈ.வெ.ரா.பெரி யார் அன்று தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதி, சுதந்திரக்கட்சித் தலைவர் முதறிஞர் இராஜாஜி, தமிழரசுக்கழகத் தலைவர் சிலம்புச்செல்வர், ம.பொ.சிவஞான கிராமணியார், கர்மவீரர் காமராஜர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரிடம் இலங்கைத் தமிழ் மக்களின் இழிநிலையை விலாவாரியாக எடுத்தியம்பியிருந்தார். இவ்வாறான அரசி யல் நகர்வின் பின்புலத்தில் இந்திய மத்திய அரசானது செல்வா அவர்களினால் தொடர்புகொள்ளப்பட்ட தமிழர் அரசியல் தலைவர்களின் அழுத்தத்துக்கு ஆட்பட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவண செய்யுமா? என வினவின் ஒருபோதும் செய்யாது என்பதே உறுதிபட்டதும், நிரந்தரமானதுமான பதி லாக இருக்க முடியும்.

இவ்விடத்தில் மத்தியில் ஆரிய ஆதிக்கத்தைத் தன்னகத்தேகொண்ட இந்திய அரசின் ஹிந்திமொழித் திணிப்பையும், ஹிந்தி மயமாக்கலையும் விரும்பாமல் இருந்தபோதுங்கூட காங்கிரசின் தமிழ்நாட்டு முக்கியஸ்தர்களான காமராஜர், கக்கன், பக்வத்சலம் ஆகியோர் வாளாவிருந்தபோது தி.மு.க தலைவர் அண்ணா அவர்கள் மிகவும் ஆவேசத்துடன் வெகுண்டெழுந்து சென்னை ஆட்சிப்பிரிவு முழுவதும் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக பல மக்கள் போராட்டங்களையும், இளைஞர் எழுச்சிகளையும், மாணவர் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துச் சிறைசென்றமையுந் தெரிந்ததே. நிலைமை இவ்வாறு இருக்கத் தமிழக அரசி யல் தலைவர்களின் அழுத்தத்தினால் கொழும்பு அரசாங்கத்துக்கு மாறாக இந்திய மத்திய அரசானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பது என்பது வெறும் பகற்கனவாகவே இருக்கமுடியும்.

இதற்குப்பதிலாக இந்திய மத்திய அரசானது கொழும்பின் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கும் நயவஞ்சக நடவடிக்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுத்துவருவது மட்டுமல்ல. இதன் பின்னணியில் கொழும்பு அரசாங்கத்துக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லபிள்ளையாக நடித்து அக்கொழும்பு அரசாங்கங்கள் தொடர்பிலேயே காதிலே பூ சுற்றும் கயமைத்தனங்களைக் கையாண்டு இலங்கைத் தீவைத் தமிழ் மக்களின் பிரச்சினையைச் சாதகமாக வைத்து தனது மேலாதிக்க வெறிக்கு இரையாக்குவதற்கும், நிலவிஸ்தரிப்புக்குப் பலியாக்குவதற்கும் முழுமூச்சாக முயன்று வருகின்றதென்பதே பேருண்மையாகும். இந்நோக்கத்துக்காக இந்திய அரசா னது பொதுவாக வடக்கின் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நலன் விரும்பும் அரசி யல் தலைவர்களையும் சிறப்பாக மலையகத்தின் இத்தன்மைவாய்ந்த தலைவர்களையுங்கூடத் தந்திரமாகப் பயன்படுத்தியும் வருகின்றது. இந்திய நிலவிஸ்தரிப்பு விடயத்தில் மலையகத்தின் ஏகாதிபத்திய முதலாளித்துவ நலன் விரும்பும் அரசியலாளர்களை இந்திய அரசானது அதிகளவு பயன்படுத்தியும் வருகின்றது. இவ்வரசியல்வாதிகள் மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு தேச விரோத உணர்வுகொண்டு உழைப்பாளர், தமிழர் நலன் என்னும் முகமூடிகளைப் பாதுகாப்புக் கவசங்களாகக்கொண்டு அரசியல் பணிகளை ஆற்றிவரும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நலன்விரும்பிகளாகவிருப்பதால் இவர் களை இந்தியாவின் மத்திய அரசானது தனது நில விஸ்தரிப்புக்குச் சாதகமாக மிக அதிகளவில் பயன்படுத்தியும் வருகின்றது.

இலங்கைத் தீவைத் தனது மேலாதிக்கத்துக்கும், நில விஸ்தரிப்பு வாதத்துக்கும் ஆட்படுத்துவதற்கு அத்தீவின் தமிழர் பிரச்சினையை அன்று தொடக்கம் இன்றுவரை கச்சிதமாகப் பயன்படுத்திவரும் இந்திய அரசின் இரகசியத் திட்டத்தின் அங்கங்களிலொன்று அந்நாளில் இந்திராகாந்தி அம்மையார் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலை ஞர் கருணாநிதி அவர்களினால் வெளியிடப்பட்ட ”இந்தியா இந்தியர்க்கே தமிழ்நாடு தமிழர்க்கே’ என்னும் புதிருக்கு அவசர அவசரமாக விளக்கம் கேட்க முற்பட்டமையாகும். அதுமட்டுமல்லாமல் கலைஞர் அவர்கள் வெளிவிவகாரங்களில் தலையிடும் அதிகாரம், படையினரைக் கையாளும் அதிகாரம் ஆகியன உள்ளடங்கலான மாநில சுயாட்சியைத் தமிழகத் தமிழர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும், உலகத் தமிழர்களினதும் நலன்களுக்காக இந்திரா அம்மையார் அவர்களைக் கோரி நின்றபோது அவ்வம்மையார் அக்கோரிக்கையை முற்றாக நிராகரித்திருந்தார்.

கலைஞர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட மாநில சுயாட்சி என்னுங்கோரிக்கையை இந்திரா ஏற்றுக்கொண்டிருந்தால் இலங்கைத் தமிழ் மக்களும் எப்போதோ விமோ சனம் அடைந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலையே. ஆனால் இந்தியாவின் மத்திய புதுடில்லியில் எவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தமிழகம் வாழ் தமிழர்கள் பூரண சுயாட்சி பெறவும் அதன் வாயிலாக இலங்கைத் தமிழர்கள் விமோசனம் பெறவும் ஒருபோதும் ஒத்துவரமாட்டார்கள். அவர்கள் இதற்கு இணங்கினால் இந்தியாவின் உலக மேலாதிக்கக் கோட்பாடும், நில விஸ்தரிப்புவாதமும் புஷ்வாணமாகிவிடும்.

இதற்குப் பதிலாகக் கலைஞர் அவர்களின் இந்தியா இந்தியாவுக்கே, தமிழ்நாடு தமிழர்க்கே என்னும் எண்ணக்கருவுக்கு இந்திராகாந்தி அவர்கள் அவசர அவசரமாக விளக்கங்கேட்டு நின்றமையும் போர் என்றால் போர் சமாதானமென்றால் சமாதானம் என இனவெறிபிடித்துக் கர்ச்சனை செய்த குள்ளநரியரான ஜே.ஆர்.அவர்களோடு அவ்வம்மையாரின் புதல்வர் இலங்கையில் தனித்தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்களின் மீது பிரிவு கொண்டுள்ளதாகப் பாசாங்குசெய்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தின் முதுகின் மீது மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தியதோடு, அமைதிகாக்கும் படை யினர் என்னும் பெயரில் தனது படையி னரை இலங்கைக்கு அனுப்பிவைத்துத் தமிழர் விரோத இந்திய மத்திய அரசின் அரசியல் சுபாவத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதோடு இலங்கைத் தீவைக் கபளீகரம் செய்யும் தனது இரகசியத் திட்டத்தையும் பகிரங்கமாகப் பறைசாற்ற ஆரம்பித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த மோடி, மன்மோகன்சிங் போன்ற தலைவர்களும் இவ்விரகசியத் திட்டத்தின்பாற்பட்டே இலங்கை இனப்பிரச்சினையையும், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத் தையும் அணுகி வந்தார்கள்.
முள்ளிவாய்க்கால் அளவுக்கு நகர்த்தித் தமிழ் மக்களின் அருமருந்தன்ன ஆயுதப்போராட்டத்தைக் கொழும்பின் மஹிந்த அவர்களோடு இனிமையாக இணைந்து நசுக்கிய இந்திய மேலாதிக்கவாதிகளும், நிலவிஸ்தரிப்புவாதிகளும் இலங்கைத் தீவைக் கபளீகரம் செய்யும் இரகசியத் திட்டத்தைப் பாரெல்லாம் பகிரங்கப்படுத்துவது இன்றைய காலத்தின் மிக இன்றியமையாத தேவையாக இருப்பது மட்டுமல்ல.

தேசங்காத்துத் தமிழர் நலன் பேணத் தேசாபிமானிகளும், தமிழ் உணர்வாளர்களும், ஏனைய சிறுபான்மையின மக்கள் குழுமங்களுக்குள் உள்ள முகமூடியற்ற முற்போக்காளர்களும் அணி அணியா கத் திரண்டு தேசத்தையும், தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையின மக்கள் குழுமங்களையும் பாதுகாத்து நிற்பதோடு உலகளாவியளவிலும் இந்தியாவின் இவ்விரகசியத் திட்டத்தை அம்பலப்படுத்தி அத்திட்டமானது கிளைவிட்டுப் பரம்பமுதலே தடுத்து நிறுத்தவும் முன்வரவேண்டும். எண்ணெய்க் குதங்கள் உட்பட இந்தியாவின் பல நிறுவனங்கள் இலங்கையில் இயங்கிக்கொண்டிருப்பதும் அதுவே இலங்கை தொடர்பான பொருளா தார விஸ்தரிப்புக்குச் சிறந்த சான்றாகும்.

வீரப்பதி விநோதன்

SHARE