அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்பில் அணுகுண்டை வைத்து அனுப்ப முடியும். ஆகவே தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதால் சீனா தனது ஏவுகணைகளைக் கொண்டு இந்தியாவை மிரட்டத் துணியாது. அணுகுண்டு அல்லது அணுகுண்டுகளைச் சுமந்து நீண்ட தொலைவு பறந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஒரு நாட்டுக்கு சிறந்த தற்காப்புக் கேடயமாகும்.
போர் ஆயுதமான நீண்ட தூர ஏவுகணைக்கும் ஆக்கப் பணிகளுக்கான செயறகைக்கோள்களைச் செலுத்தும் ராக்கெட்டுக்கும் உயரே பாய்கின்ற விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. மற்றபடி இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்ப்தற்காகவே பல சமயங்களிலும் செயற்கைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளை செயற்கைக்கோள் செலுத்து சாதனம் (Satellite Launch Vehicle) என்று குறிப்பிடுவர்.
ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்திய பிறகு ராக்கெட்டின் வேலை முடிந்து விடுகிறது. ஆனால் ஏவுகணையானது மிக உயரே சென்று விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து, மறுபடி காற்று மண்டலத்துக்குள் நுழைந்து கீழ நோக்கி இறங்கி, ஏற்கெனவே திட்டமிட்டபடி எதிரி நாட்டின் இலக்கைக் குறி தவறாமல் தாக்கியாக வேண்டும்.
ஏவுகணை இவ்விதம் காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் இறங்கும் போது அதன் முகப்பு சுமார் 3000 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு சூடேறும். ஆகவே முகப்பில் வைக்கப்பட்டுள்ள அணுகுண்டை அந்த வெப்பம் தாக்காதபடி தக்க பாதுகாப்புக் கவசம்இருக்க வேண்டும். தவிர, கீழே உள்ள இலக்கை அடைகின்ற வகையில் வழியறிவு ஏற்பாடு இருக்க வேண்டும். அந்த ஏவுகணை உயரே கிளம்பியதிலிருந்து கீழே இறங்கும் வரையிலான நேரத்தில் பூமி தனது அச்சில் சற்று சுழன்று விட்டிருக்கும். இதையும் கணக்கில் கொண்டால் தான் ஏவுகணை குறி தவறாமல் தாக்க முடியும்.
அக்னி -2 ஏவுகணை |
தவிர, எதிரி நாட்டின் முக்கிய இலக்குகளைப் பற்றி துல்லியமான அட்சரேகை தீர்க்கரேகை விவரங்களுடன் நம்பகமான மேப்புகள் தேவை. ஏவுகணையின் அணுகுண்டு அடங்கிய முகப்பு கீழ் நோக்கி இறங்கும் போது குறிப்பிட்ட அட்சரேகையும் குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் சந்திக்கிற இடத்தைத் தான் தேடிச் செல்கிறது. ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த விவரங்கள் இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கொசாவோ (Kosovo) போரின் போது அமெரிக்காவின் சாதாரண ஏவுகணை ஒன்று சீனத் தூதரகத்தைத் தவறுதலாகத் தாக்கியது. அந்த ஏவுகணையில் துல்லியமற்ற பழைய மேப் இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.
செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் போன்ற எரிபொருளைப் பயன்படுத்த இயலும். கடைசி நேரத்தில் தான் இவற்றை நிரப்புவர். இதற்கு நிறைய நேரம் பிடிக்கும். ஆனால் ஏவுகணைகளில் இம்மாதிரியான எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஏவுகணை எந்த வினாடியிலும் உயரே கிளம்ப ஆயத்த நிலையில் இருந்தாக வேண்டும். பொதுவில் ஏவுகணைகளில் திட எரிபொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கென நிரந்தர ராக்கெட் தளம் இருக்கும். ஆனால் ஏவுகணைகள் எங்கே உள்ளன என்பது யாருக்கும் தெரியக்கூடாத விஷயம். பொதுவில் ஏவுகணைகளை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்த முடியும். சில ஏவுகணைகளை விசேஷ டிரக்கிலிருந்து செலுத்த முடியும். வேறு சில ஏவுகணைகளை தண்டவாளத்திலிருந்து தான் செலுத்த இயலும்.
இந்தியாவின் அக்னி வகை ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை சென்று தாக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. |
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் அக்னி-1 (தொலைவுத் திறன் 700 கி.மீ முதல் 900 கி.மீ) அக்னி-2 ( 2000 கி.மீ முதல் 2500 கி.மீ.) அக்னி-3 (3500 கி.மீ) ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. அக்னி-2 ஏவுகணைக்கும் அக்னி-3 ஏவுகணைக்கும் இடைப்பட்ட திறன் கொண்டதாக அக்னி-4 உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதை உருவாக்கும் திட்டத்தின் டைரக்டர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பெண் விஞ்ஞானியின் பெயர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ். இந்த விஞ்ஞானியை அக்னி புத்திரி என்றும் குறிப்பிடுவதுண்டு.
விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் |
அக்னி-4 ஏவுகணைக்கு முதலில் அக்னி-2 பிரைம் என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்போது அதற்கு அக்னி-4 என்று புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 2010 டிசம்பரில் முதல் தடவையாக சோதித்த போது வெற்றி கிட்டவில்லை. இந்தத் தடவை வெற்றி கிட்டியுள்ளது. அடுத்ததாக இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணை முதல் தடவையாக 2012 பிப்ரவரி மாதம் வானில் செலுத்தி சோதிக்கப்பட இருக்கிறது.
இந்த ஏவுகணை 5000 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஏவுகணையை விசேஷ உருக்கினால் ஆன உறைக்குள் வைத்து சாலை வழியே எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். இதுவும் அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
அக்னி-5 ஏவுகணையை அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு மாநிலத்திலிருந்து செலுத்தினால் சீனாவின் வட எல்லையில் உள்ள நகரங்களையும் எட்ட முடியும். தவிர, வருகிற ஆண்டுகளில் அக்னி-5 ஏவுகணையில் மூன்று முதல் பத்து அணுகுண்டுகளை வைத்துச் செலுத்தும் வகையில் அது மேம்படுத்தப்படும். அக்னி-5 ஏவுகணை உயரே சென்று விட்டு கீழே இறங்குகையில் இந்த அணுகுண்டுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே பிரிந்து எதிரி நாட்டின் வெவேறு இலக்குகளைத் தாக்கும்.
இந்தியாவின் ஏவுகணைகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள சோதனைத் தளத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன. அது சோதனைத் தளமே தவிர, ஏவுகணைத் தளம் அல்ல. வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
அக்னி வரிசையிலான ஏவுகணைகள் முக்கியமாக சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய ஆபத்தை சமாளிப்பதற்கானவையே. பாகிஸ்தானைப் பொருத்தவரையில் இந்தியாவின் பிருத்வி-1 ஏவுகணை, பிருத்வி-2 ஏவுகணை ஆகியவை போதும்.
பிருத்வி ஏவுகணை |
மேலே வருணிக்கப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் தரையிலிருந்து கிளம்பி எதிரி நாட்டின் தரை இலக்குகளைத் தாக்குவதற்கானவை. கப்பலிலிருந்து அல்லது விமானத்திலிருந்து செலுத்துவதற்கான ஏவுகணைகள் வேறு வகையானவை. இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இடம் பெறுவதற்கான ஏவுகணையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது அணுகுண்டைச் சுமந்து செல்லும் திறன் படைத்ததாகும்.
இந்தியா நவீன ஏவுகணைகளை உருவாக்கி விடக்கூடாது என்பதற்கான் இந்தியாவுக்கு எந்த நாடும் ஏவுக்ணை தொடர்பான எந்தப் பொருளையும் எந்தக் கருவியையும் விற்கலாகாது என்று அமெரிக்கா தலைமையில் வல்லரசு நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தன. அதைச் சமாளித்து இந்தியா சொந்தமாகத் தொழில் நுட்பங்களையும் பொருட்களையும் தயாரித்து நவீன ஏவுகணைகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது.