இந்தியாவின் புகையிலை இல்லாத கரிபெமா கிராமம்

591

நாகாலாந்தில் உள்ள கரிபெமா கிராமம், நாட்டிலேயே புகையிலை பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்தாத முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கரிபெமா கிராம சபை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பான அறிவிப்பை மாநில முதன்மைச் செயலாளர் ஆர்.பென்சிலோதாங் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், கரிபெமா கிராம சபை, கிராம தொலைநோக்கு பிரிவு மற்றும் கிராம மாணவர்கள் சங்கம் ஆகியவை மேற்கொண்ட முயற்சியின் பலனாக அந்த கிராமம் புகையிலையில்லா கிராமமாக உருவெடுத்துள்ளது.

நாகாலாந்தில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்குமே சிறந்த முன்னுதாரணமாக கரிபெமா கிராமம் விளங்குகிறது என தாங் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்ட துணை இயக்குநர் எம்.சி. லொங்கை, நாகாலாந்தில் உள்ள ஆண்களில் 67.9 சதவீதத்தினரும் பெண்களில் 28 சதவீதத்தினரும் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், புகையிலை தொடர்பான நோய் காரணமாக இந்தியாவில் நாளொன்றுக்கு 2,200 பேர் உயிரிழக்கிறார்கள்.

புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை பொருட்களே 40 சதவீதம் காரணமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மது, புகையிலை பொருட்களை விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும், பொது இடங்களில் பீடி பிடிப்பவர்கள், பான் பராக் மற்றும் வெற்றிலை போடுபவர்கள், புகையில்லா புகையிலை பயன்படுத்து வோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE