இராணுவ இரகசிய வதைமுகாமில் தடுத்துவைத்துக் கொலைசெய்யப்பட்ட இருபது தளபதிகள்!

451

திருகோணமலைப் பகுதியில் இரகசிய வதைமுகாம் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோதிலும், அதைவிடவும் 12 வதைமுகாங்கள் வடக்கு கிழக்கு, தென்மாகாணம் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விடுதலைப்புலிகளுடைய இடைநிலைத் தளபதிகள் கொழும்பு கடத்தப்படுகின்றனர். இளங்குமரன், வே.பலகுமார், யோகி, கரிகாலன், பரா, புதுவைரத்தினதுரை, எழிலன், சஞ்சையன், சோ.தங்கன், வீமன், லோறன்ஸ், ரேகா, வேலவன், மணியரசன், வீரன் புலனாய்வுத்துறையின் அடுத்த தளபதி துரோனர் ஆகியோரும் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்கள். இதில் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, மற்றும் இளம்பருதி ஆகியோர் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பாட்டார்கள் என்று கூறப்பட்ட போதிலும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இவர்களுடைய உறவினர்கள் பலரும் வெவ்வேறு வேறு இடங்களில் வசித்து வருகின்றார்கள். இந்த இடைநிலைத் தளபதிகளை கருணாவின் உத்தரவின் பேரிலேயே சித்திரவதைக்கு உற்படுத்தப்பட்டதாகவும், பின்னர் இவர்கள் வெளியில் வந்தால் இவர்களுக்கு ஆபத்து என்று கருதிய இலங்கை அரசு இவர்களை மறைமுகமாகக் கொலை செய்து விட்டதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயுதப் போராட்டம் இவர்களினால் மீள் எழுச்சி பெறும் என்ற காரணத்தினாலேயே இவர்கள் வெட்டியும், சுட்டும், சித்திவதை செய்தும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். சித்திரவதை முகாம்களில் சிலர் மூன்று வருடங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் இவர்களிடமிருந்து இரகசியங்கள் எடுக்கப்பட்ட பின்னரே சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள் என்பதே உண்மையான விடயம்.

இடைநிலைத் தளபதிகள் என்கின்ற பொழுது இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்டவர்களாகவே இவர்கள் இருக்கின்றார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருவர் தளபதியாக வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. பல்வேறு களங்களை, பல்வேறு சாதனைகளை படைத்திருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் குறிப்பாக விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த பாலகுமாரன் இராணுவத்தினரின் வசம் இருப்பதை வீடியோப் படக்காட்சியின் ஊடாகக் காணமுடிந்தது. அதன் பின்னர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது அக்காலகட்டத்தில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கே தெரியும். இரகசிய முகாம் சித்திரவதை என்பது அவர்கள் தற்சமயமேனும் விடுதலையாக்கப் படுவார்களாகவிருந்தாலும் ஐந்து வருடத்திற்குள் அவர்கள் மரணித்துவிடுவார்கள். அது போன்ற சித்திரவதைகளே அவர்களுக்குச் செய்யப்பட்டிருந்தது. திருகோணமலையில் வதைமுகாம் இருந்தது என்று சர்வதேசம் கண்டு பிடித்து விட்டதாக கூறிக்கொள்ளும் அதேநேரம் சர்வதேசத்தின் பார்வையை அங்கு திசை திருப்புவதற்காகவும், வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளினுடைய போராளிகள் இருப்பிடத்தை மூடிமறைப்பதற்காகவே பாதுகாப்பு அமைச்சு முயற்சித்து வருகிறது.

சர்வதேச விசாரணை என்பது அதனுடைய செயற்பாடு என்பது மந்தகெதியை அடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையிலும் சர்வதேசங்களுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. காலத்தின் தேவைகருதி சர்வதேச நாடுகள் வதைமுகாம்கள் இருப்பதாகக் கூறி இந்நாட்டுக்குள் நுழைந்து தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதே தவிர மாற்று நடவடிக்கைகளுக்கான வழிகள் திறக்கப்படுவதாக இல்லை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த அக்ஷன் (f)பாம் நிறுவனத்தின் தொண்டர்கள் 17 பேர் கதறக்கதற படுகொலை செய்யப்பட்ட சம்பத்தை நாம் அனைவரும் அறிந்ததே, இக்கொலைகள் தொடர்பாக உலக அரங்கில் செய்திகளை வழங்கிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஏனையவர்கள் தேடப்பட்டும் வந்தனர்.

இந்நிலையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த அக்ஷன் (f)பாம் கொலையானது, இலங்கையில் இடம்பெற்ற போரின் போது திருகோணமலை மூதூரிலுள்ள தமது பணியகத்தில் வைத்து தமது பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென பிரெஞ் தொண்டு நிறுவனமான அக்ஷன் (க)பாம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்ஷன் (க)பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர் போலின் செற்கியூற்றி அளித்துள்ள செவ்வியில், பணியாளர், படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது.

இலங்கையில் எமக்கு உண்மையான அமைதி, நல்லிணக்கம், நீதி தேவையென்றால், எந்தவொரு விசாரணைகளும் வெளிப்படையானதாக இருக்கவேண்டும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அக்ஷன் (f)பாம் வரவேற்கின்றது. ஆனால் இத்துடன் இது முடிந்து விடாது. ஏனென்றால் தீர்மானத்தின் வாசகங்கள் கடுமையானவை அல்ல.

சிலவற்றைச் செய்வதற்கு இது இலங்கைக்கு உறுதியான அழுத்தம் கொடுக்கவில்லை. போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் இராணுவமே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இலங்கையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது முரணானது.
மூதூர் படுகொலைகள் குறித்து இலங்கையின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம். ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான சர்வதேச விசாரணையை முன்வைக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை வரவேற்பதாக பிரான்ஸின் பட்டிணிக்கு எதிரான அமைப்பு அக்ஷன் (f)பாம் தெரிவித்துள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையின் மூதூரில் தமது தன்னார்வுத் தொண்டர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற நிறுவனமான அக்ஷன் (f)பாம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதே போன்று தமது அமைப்பும் அடைந்த வெற்றியென அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரேய்சி தெரிவித்துள்ளார்.

நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாகச் செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையொன்று கிடைத்துள்ளது. அதன் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தண்டணை வழங்கப்படும் என்பதே அதுவென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூதூரில் கொல்லப்பட்ட பட்டினிக்கெதிரான அமைப்பின் (அக்ஷன் (f)பாம்) 17 பணியாளர்களும் இராணுவத்தினரால் முழங்காலிட வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் கொலையாளிகளான இராணுவத்தை இலங்கை அரசு இன்னமும் பாதுகாத்து வருகின்றது என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் நேரில் கண்டவர்களிடமிருந்தும், இராஜதந்திர வட்டாரங்களிலிருந்தும் கிடைக்கப்பெற்றதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை இதுவரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதூரில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒழுங்குவிதிகளுக்கு புறம்பானவையெனவும், அர்த்தமற்றவையெனவும், கூறி சிவில் சமூக அமைப்பும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சிவில் சமூக அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடடிக்கைகளை அக்கறையுடன் கவனித்து வந்த சிவில் சமூக அமைப்பு படையினர் சார்பாகவும், அதிரடிப்படை சார்பாகவும், ஆஜரான தனிப்பட்ட வழக்கறிஞர்களால் சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அலட்சியப்போக்குகள் தொடர்பாக நாம் பெரிதும் ஆச்சரியப்பட்டோம். மேலும் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம், ஆகியவை பற்றிய பாரதூரமான சந்தேகங்கள் எழுந்து அதன் நம்பகத் தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செய்மதி மூலமான சாட்சியமளித்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடைநிறுத்தியதன் மூலம் ஆணைக்குழுவின் அடிப்படை விதியான சுதந்திரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சகல சாட்சிகளையும், ஆதாரங்களையும் விசாரணை செய்யும் வாய்ப்பு இல்லாமையால் விசாரணையை மேலும் முன்னெடுத்தல் அர்த்தமற்றதாகிவிட்டது. மேலும், சாட்சியங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை தடுப்பதற்கும் ஆணைக்குழு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

இதனால் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி ஒருவர் சுதந்திரமாகவும், ஆக்கபூர்வமாகவும் சாட்சியமளிப்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வழக்கறிஞர்களாக செயலாற்றுவது சுதந்திரத் தன்மை பற்றியும், பக்கச் சார்பின்மை பற்றியும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அத்துடன் மனித உரிமை மீறல்கள் குறித்து அரசின் மீது குற்றம் சுமத்தப்படும்பொழுது சட்டமா அதிபர் திணைக்களம் அரசினைப் பாதுகாக்க எத்தனிக்கின்றது.

அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தை விசாரணைகளிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதி எத்தனித்தமை இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கை கடற்படை லெப்டினன்ற் ஒருவர் சாட்சியமளிக்கும் போது, ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு பிரதியை முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது. மேலும், ஆணைக்குழுவில் அங்கம் வகித்த ஆணையாளர் ஒருவரை பதவி விலகச் செய்வதற்கு ஜனாதிபதி முறையற்ற ரீதியில் செல்வாக்;கினைப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்குப் பின்னர் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்த எட்டு ஆணையாளர்களில் மூவர் தொடர்ச்சியாக பதவி விலகினர். ஆனால், இப்பதவி விலகல்கள் தொடர்பாக பகிரங்கமாக விளம்பரப்படுத்தவோ அல்லது அவைபற்றி விளக்கம் கொடுக்கப்படவோ இல்லை. ஆணைக்குழு மீதான இவ்வாறான நேரடித் தலையீடு மற்றும் மாறுபட்ட கொள்கைகளால் அதன் நம்பகத்தன்மையும், சட்ட பூர்வத்தன்மையும் எதிர்மறையாகவே பாதிக்கின்றது.
இச் சிவில் சமூக அமைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மனித உரிமைகள் இல்லம், இன்போம், சட்டம் மற்றும் சமூக நிதியம், இலங்கையின் தாய்மாரும் மகள்களும் அமைப்பு, இலங்கைச் சட்டவல்லுநர் தேசிய ஆணைக்குழு, ரைற்ஸ் லெக்டிவ் டெமோ குறசி ஆகிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. அத்துடன் இவ்வமைப்பின் சார்பில் சட்டத்தரணிகளான ஷெல்றின் அகிலன், வி.எஸ்.கணேசலிங்கம் பவானி பொன்சேகா, நிமல்டா பெர்னாண்டோ, வனிற்றா ஞானராஸ் மற்றும் சுதர்சன் கமகே, பியந்த கமகே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் சாட்சிகள் தடுப்புப் பிரிவின் குறைபாடுகள், சர்வதேச விசாரணைகள், கயாதீன விற்பன்னர்கள் குழுவினரின் வெளியேற்றம், செய்மதி மூலமான சாட்சியமளிப்பு இரத்துச் செய்யப்பட்டமை, சட்டமா அதிபரின் எதிர்மறையான செயற்பாடுகள் மற்றும் ஆணையாளர்களின் இராஜிநாமா போன்ற விடயங்கள் குறித்து தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்புகள் மற்றும் சாட்சிகள் சார்பாக சட்டத்தரணிகள் கே.எஸ்.இரட்ணவேல் மற்றும் எஸ்.எஸ்.எம் சம்கதீன் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன், தாமும் இவ்விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். இது இவ்வாறிருக்க முள்ளிவாய்க்கால் விவகாரம் என்பது, அக்ஷன் (f)பாம் கொலையைவிட பன்மடங்கானது. திட்டமிட்டபடி பெண்கள், ஆண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கையிருப்பில் இருக்கும் பொழுதும் பொய் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசு, உண்மையில் இந்த தொண்டு நிறுவனத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் விடயத்தில் அக்கறைகொண்டு தீர்வு வழங்குமா?
இவ்விடயம் தொடர்பில் மூக்கை நுழைத்தவர்கள் அல்லது அதற்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் நிலை எவ்வாறு என்று பார்க்கின்றபொழுது, கடத்தல், அச்சுறுத்தல் என பட்டியல் நீண்டு செல்கின்றது. இதனைவிடவும் இலங்கையில் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றது, அந்த விவகாரங்கள் பற்றியும் ஜெனிவாவில் எடுத்துரைக்கப்பட்ட போதும் தீர்வு கிடைக்கவில்லை. போலி வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி என்ற ஒருவர் கொல்லப்பட்டதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களையும் பழிவாங்கியது காங்கிரஸ் அரசு.

இப்பொழுது மோடி அரசு வந்துவிட்டது. தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்திற்கும் மேல் தீர்வுகள் வழங்கப்படும். முள்ளிவாய்க்கால் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறி வருவது வேடிக்கைக்குரியதொன்று. இந்தியாவிற்கு பாரிய பிரச்சினை இல்லை. ஆகவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஆரம்ப கட்ட அரசியல்வாதிகளும் கூட பிரபாகரனுக்கு தமிழீழத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அதனை இந்தியப் பிரதமர் மோடியும் கடைப்பிடிப்பார். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்றைய பிரச்சினை என்னவென்றால், அக்ஷன் (f)பாம் நிறுவனமானது பல்வேறு விதமான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தது.

இவர்களுடைய விசாரணையை வேகமாக முன்னெடுத்திருந்தபோதிலும், தற்பொழுது ஒன்றும் நடக்கவில்லை என்று சமாளிக்க முனையும் அரசின் விடயத்தில், சர்வதேச சமூகம் இன்னும் மௌனித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இதேபோல இலங்கையரசு செயற்பட்டு வருகின்றது. திருகோணமலை அக்ஷன் (f)பாம் தொண்டு நிறுவனத்தின் மீதான தாக்குதல் விடயத்தில் சர்வதேசம் எவ்வாறு செயற்பட்டதோ அது போலவே ஈழத்தமிழர்களினுடைய தீர்வு விடயத்திலும் பின் நின்று செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இதுவே இலங்கையின் தற்போதைய நிலைப்பாடாகும்.

நெற்றிப்பொறியன்

Action Contre la Faim

SHARE