இவ்வாண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆட்சி பீடமேறிய அரசாங்கத்துக்குத் தலைநகர் கொழும்பு உள்ளடங்கலாகத் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர்களில் 2ஃ3 பங்கிற்கும் அதிக மானோர் வாக்களித்திருந்தனர். மஹிந்த தரப்பினரை முறியடித்து மைத்திரி-ரணில் பிரிவினர் ஆட்சிக்கு வருவதற்கு நாடு முழுவதும் பரந்துவாழும் இஸ்லாமிய மக்களும், வடக்கு கிழக்கில் வதியும் தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களுமே பிர தான காரணகர்த்தாக்களாக விளங்கினர் என்பது தெரிந்ததே.
இஸ்லாமிய மக்களில் மிகப் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று அவ்வாக்குப் பலத்தினால் ஆட்சி அமைத்த தற்போதைய ஐ.தே.க.கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமெரிக்காவோடும் இஸ்ரேலினோடு மான உறவுகள் அம் மக்களை மிகுந்த வேதனையடைய வைத்துள்ளது.
இஸ்லாமிய மக்களின் அசாதாரணமான ஆதரவோடு ஆட்சியமைத்த தற்போதைய அரசா னது இஸ்ரேலியத் தூதுக்குழுவினருக்கு நன்றி கெட்டத்தனமாகச் செங்கம்பள வரவேற்பு அளிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய இலங்கை அரசின் இவ்விரு நாடுகளுக்கிடையிலுமான இத்தொடர்பானது முஸ்லீம்கள் தவிர்ந்த சில உயர்வர்த்தக நோக்கங்களைக் கொண்டவர்களையே திருப்தியடைய வைப்பதோடு நன்மை பெறுவதற்கும் வழிவகுக்கும். தாம் எங்கெங்கெல்லாம் செல்கின்றார்களோ அங்கங்கெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டிவிட்டு அவர்களைக் கொன்றொழிப்பதே உலக முஸ்லீம்களுக்கு எதிரான முக்கிய சியோனிஷக் கொள்கையாகும்.
இச் சியோனிஷக் கொள்கையைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ள இஸ்ரேலுக்குத் தற்போதைய அரசானது மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்பளிப்பது இத்தேசத்து முஸ்லீம்களையும் இஸ்ரேலிய சியோனிஷவாதிகளுக்குப் பலியிடுவதற்கே வழிவகுக்கும்.
இவ்விஸ்ரேலானது புனித இறை இல்லமான ஜெருசலம் நகரிலுள்ள ‘மஸ்ஜிதுல்’ அக்காவுக்குள் பிரவேசித்து அட்டூழியம் புரிந்துவரும்போது இஸ்லாமி யரின் அதிகளவான வாக்குப் பலத்தினால் ஆட்சியமைத்த மைத்திரி, ரணில் தரப்பு ஆட்சியினர் அந்நாட்டுக்கு இத்தீவில் வதியும் மூன்றாவது இனமான இஸ்லாமி யரைக் காட்டிக்கொடுப்பதானது. கடைந்தெடுத்த கயமைத்தனமேயொழிய வேறல்ல.
இலங்கை போன்ற ஒரு நாடு பாலஸ்தீனர்களின் பூமியை ஆக்கிரமித்து அவர்களின் அடிப்படை உரிமைகளைத் துச்சமென மதித்து அவர்களைத் தமது சொந்த நாட்டிலேயே அடக்கியாள முற்படும் இஸ்ரேல் போன்ற ஒரு நவ பாஸிஸ போக்குடைய நாட்டுடன் பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதானது மிக வும் அபத்தமான விடயமாகும்.
அரசாங்கம் தனது தேசத்தில் தனக்கு வாக்களித்த முஸ்லீம் மக்களைச் சிறிதளவேனும் கருத்துக் கெடுக்காமல் அவர்களை முற்று முழுதாகப் புறக்கணித்துச் சியோனிஷ இஸ்ரேலுக்குத் தனது கதவுகளை அகலத் திறந்துவிட்டுள்ளது.
2015 ஓகஸ்ட் 17 தேர்தலுக்குச் சில தினங்களின் முன் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் இலங்கைக்குக் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் இலங்கையின் முன்னாள் இந்நாள் தலைவர்களைச் சந்தித்ததுடன் ‘லக்ஷ்மன் கதிர்காமர்’ நிலையத்தில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரேலிய நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வந்துமுள்ளது.
இப்போது சில வாரங்கள் கழிந்துள்ள நிலையில், 15 நபர்களைக் கொண்ட யூதத் தூதுக்குழுவொன்று அமெரிக்காவில் இலங்கை சர்வதேச யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இவ்வாண்டு ஐப்பசி 20இல் இச் சங்கம் திறக்கப்பட்டிருக்கின்றது. இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து வருகின்றது. இவர்களுக்கு மேற்படி அமைச்சர்கள் மிகுந்த வரவேற்புமளித்துள்ளனர்.
அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான அரசின் இத்தகைய உறவுகள் பகிரங்கப்படுத்தப்படாமல் இரகசியமாகவே பேணப்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைத் தீவுக்குத் தேவைப்படுவதைவிட அத்தேசங்களுக்கே இலங்கைத் தீவானது அதிகமாகத் தேவைப்படுகின்றது. மேலும் முன்னைய ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைப் போலல்லாது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அமெரிக்கா சார்பான போக்கை அதிகளவு கொண்டுள்ளமையாலும், அதில் அமைச்சர்களாகவுள்ள வடக்கின் அமைச்சர்களாகவிருந்தாலுஞ் சரி, எதிர்க்கட்சியினராகவுள்ள தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினராக இருந்தாலுஞ் சரி, மலையக அரசியல்வாதிகளான அமைச்சர்களாகவிருந்தாலும் சரி நாட்டை அமெரிக்காவின் புதிய ‘உலக மயமாக்கல்’ என்னும் கோரப்பசிக்குத் தீனியாக்கும் விடயத்தில் முன்னணியில் நிற்கக் கூடியவர்களாதலால் அமெரிக்காவானது தனது உலகந் தழுவியளவிலான பொருளாதார விஸ்தரிப்புக்கு இலங்கை மீது தனது கழுகுக் கண்களை அதிகளவு வீச்சோடு பாய்ச்சத் தொடங்கியிருப்பது முற்றிலும் இயல்பானதே.
எனவே இத்தேசத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் தமது வாக்குப் பலத்தைப் பிரதான காரணிகளில் ஒன்றாகக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ரணில் அவர்களின் இஸ்ரேல் சியோனிஸ வாதத்துக்குகெதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருப்பது முற்றிலும் நியாயமா னதே. ஆனால் அவர்கள் மஹிந்த தரப்பினரின் ஆதரவாளரான இஸ்லா மிய அரசியல் வாதிகளின் அனுசர னையுடன் இப்போர்க்கொடியை உயர்த்தாமல் தேசத்தின் உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழ் மக்களும் ஒன்றினையக்கூடிய தாக வடபுலத்தினதும், மலையகத்தினதும், சிங்களத்தினதும் இடதுசாரி அரசியல் பின்புலத்தில் உயர்த்து வார்களாகவிருந்தால் உலகந்தழுவி யளவிலான இஸ்லாமியர்களுக்கெதிரான சியோனிஸவாதத்துக்கெதிரான வலுவான தோற்றப்பாட்டை இலங்கை சார்பில் அவர்களால் வெளிக்கொணரமுடியும்.
இவ்விடத்தில் மஹிந்த அரசாங்கமானது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தத்தின் பாற்பட்டே யுத்தக் குற்றச்செயல்களை இழைத்ததாகவும், அதனால் அந்நாடுகளைக் கண்டிக்கவேண்டுமெனவும், யுத்த காலப்பகுதியில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தி நின்றபோதுங்கூட ரணில் அவர்கள் அதை எதிர்த்திருந்தார் என்பதுங் குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சினை யாகவிருந்தாலுஞ் சரி, சிறிலங்காவின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான தமிழர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி நன்மைக்குந் தீமைக்குமிடையிலான பிரச்சினையும், தீமைக்கும் நன்மைக்கும் இடையிலான பிரச்சனையுமேயாகும்.
இவ்விரு பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொன்றாக நோக்கும்போது பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையான முதலாவது பிரச்சினை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்ரேலியர்களுக்குப் பாலஸ்தீன பூமியில் இடமளிக்க அனுமதிக்கும் தீர்மானத்தைக் குறிப்பிடலாம். இரண்டாவது பிரச்சினை சம்பந்தமாக ஜெனிவாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான தீர்மானத்தைக் குறிப்பிடலாம். முதலாவது தீர்மானத்தின் பிரகாரம் மனித வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாவிதமான மனிதாபிமானச் சட்டங்கள, விழுமியங்கள் ஆகியன முழுமையாக மீறப்பட்டுள்ளதாகவே கருதப்படவேண்டும். இத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சட்டங்களும் சாகடிக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மையாகும். அவ்வலியுறுத்தலானது, சிறுபான்மை இனக்குழுமங்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றதன் காரணமாக அம் மக்களை ஆற்றுப்படுத்தும் தன்முனைப்பின் பாற்பட்டதாக விருந்ததேயொழிய விசுவாசத்தோடு இயைந்ததாகவிருக்கவில்லை.
இத்தேசத்தில் தமிழ் மக்களுக்கு அடுத்த நிலையில் சிறுபான்மை இன மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களினதும் அதிகளவு வாக்குகளைப் பெற்றுப் புதிதாக அரியணையில் அமர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பு அரசாங்கமானது நன்றிகெட்டதனமா கவும், அம் மக்கள் தொடர்பில் சிறிதளவும் கரிசனை காட்டாமலும் இஸ்ரேலிய தூதுக்குழுவை மிகவும் ஆரவாரமாக வரவேற்றுமிருக்கின்றது.
இலங்கைத் தீவில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலுஞ் சரி, யுத்தம் இடம்பெறாத காலத்திலுஞ் சரி அரபு நாடுகள் தீவின் நண்பர்களாகவேயிருந்தனர். அரபு நாடுக ளின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாடு இவ்வாறாகவிருக்கும் பின்னணியில் புதிதாக ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் அரசானது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான யுத்த வெறியர்களுக்கு இந்நாட்டைத் திறந்துவிடுதலானது அம்மக்களுக்கு மட்டுமல்ல உரிமை மறுக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்குமே மிகவும் பாதகமான நிலை மையையே தோற்றுவிக்கும்.
ஒரு காலத்தில் இலங்கையானது பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு அபாரமான ஆதரவு அளித்து வந்தமை தெரிந்ததே. அவ்வாறாக இலங்கை அரசானது அவ் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவளித்து வந்தபோது இலங்கையின் சிறுபான்மையினக் கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும் இலங்கைத் தமிழ் மக்கள் மீது அதாவது தமது சொந்த நாட்டு மக்கள் மீதே இலங்கை அரசானது அசாதாரணமான அடக்குமுறையைக் கையாண்டுகொண்டே பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்புவது வேடிக்கையாகவும், வினோதமா கவும் இருக்கின்றதெனவும் கருத்து வெளியிடவும் தவறவில்லை. ஆனால் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ‘மஹிந்த’ தரப்பினரிடமிருந்து ஆட்சியானது ரணில் தரப்பினருக்குக் கைமாற்றப்பட்டபோது புதிய அரசியல் மாற்றத்துக்கு உறுதுணையாகவிருந்த இஸ்லாமிய மக்களைப் புண்படுத்தும் விதமாக மேற்குறிப்பிடப்பட்ட அரசா னது இம் மக்களை அகிலந்தழுவிய ளவில் இல்லாதொழிப்பதற்குக் கங்கணங்கட்டிக்கொண்டு நிற்கும் இஸ்ரேலிய சியோனிஷ்டுக்களுக்குத் தீவின் கதவுகளை அகலத் திறந்துவிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா, அதி மேற்றிராணியார் டெஸ்மண்ட்குடு ஆகியோர் நீதிக்காகக் குரல் எழுப்பியமைக்காகவே இன்றும் உலக அரங்கில் மதிக்கப்படுகின்றனர்.
1950கள் முதல் தொட்டே இலங்கைக்குள் ஊடுருவுவதற்குப் பல்வேறு தடவைகள் இஸ்ரேல் தேசமா னது பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதுங்கூட ஒவ்வொரு தடவையும் அந்நாடானது இவ்விடயத்தில் படுதோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றது. 1958ல் முன்னாள் பிரதமர் தஹநாயக்க அவர்களின் காலப்பகுதியில் வதிவிட அந்தஸ்து இல்லாத இஸ்ரேலியத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.
1970இல் திருமதி பண்டார நாயக்க ஆட்சிக்கு வந்தபின் பொருளா தாரத் தடை அச்சுறுத்தல்களுக்குக்கூட அடிபணியாமல் இஸ்ரேல் நலன் பிரிவைக் கொழும்பிலிருந்து அகற்றினார். இலங்கையின் கௌரவமான சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கை அன்று இவ்வாறாகத்தான் இருந்தது.
1983இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு அன்று ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் இஸ்ரேலின் உதவியை நாடியிருந்தார். இவ்வாறான ஒரு வாய்ப்பையே எதிர்நோக்கிக் கொண்டிருந்த இஸ்ரேலானது கொழும்பிலுள்ள அதன் அமெரிக்கத் தூதரகத்தில் ஸ்ரீமாவோ அம்மையாரினால் அகற்றப்பட்டிருந்த இஸ்ரேல் நலன் பேணும் பிரிவை மீண்டும் ஸ்தாபித்தது.
இந்த இஸ்ரேல் நலன் பேணும் பிரிவு அமைக்கப்படுவதை அன்று இஸ்லாமியப் பிரமுகர்கள் வன்மையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்களின் இவ்வெதிர்ப்பைச் சிறிதளவேனுங் கணக்கெடுக்காத ஜே.ஆர் அவர்கள் அவருடைய அரசாங்கத்தில் பங்கேற்ற இஸ்லாமிய அரசியல்வாதிகளை விரும்பினால் அரசாங்கத்தில் இருக்கலாம் அல்லது வெளியேறலாம் என எகத்தாளமாகக் கருத்து வெளியிட்டுமிருந்தார்.
இதனால் வெறுப்படைந்ததனாலேயே கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தமக்கெனத் தனிக்கட்சியொன்று அமைத்துத் தம்முடைய தனித்துவத்தைப் பேணவேண்டுமென்னும் முடிவுக்கு வந்தனரெனலாம் எனினும் இவ்வாறான ஒரு பின்னணியில் இயங்கிவந்த ‘முஸ்லீம் லீக்’ என்னும் அமைப்பானது பின்னாளில் ஐ.தே.க.வின் நேச சக்தியாக மாறியமை துரதிட்டவசமானவொன்றே.
ஆனால் ஜே.ஆர் இஸ்ரேலுக்கு இந்நாட்டை எதை எதிர்பார்த்துத் திறந்து விட்டிருந்தாரோ அது மட்டுமல்ல அந்நாட்டினால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும். அந்நாடு தனக்குக் கிடைதத இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஜே.ஆர் அவர்களின் குள்ளத்தனங்களுக்கு மேம்பட்டதான குள்ளத்தனங்களை அரங்கேற்ற ஆரம்பித்தது. இவ் குள்ளத்தனமான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இஸ்ரேல் நாடானது ஜே.ஆருடைய படைகளுக்கு மட்டும் பயிற்சியளிக்காமல் விடுதலைப்புலிகளுக்கும் பயிற்சி யளித்தமையைக் குறிப்பிடலாம். இக்கைங்கரியத்தை அத்தேசமானது ஒருவரை ஒருவர் தெரியாமல், ஒருவரை மற்றவர் சந்திக்காமல் ஒரே முகாமுக்குள் தந்திரமாக மேற்கொண்டிருந்தது. அது மாத்திரமல்லாமல் இலங்கைப் படையினருக்கான தேவையின் பாற்பட்டு மில்லியன் கணக்கான பெறுமதிவாய்ந்த ஆயுதங்களையும் இஸ்ரேல் நாடானது ஜே.ஆர் அவர்களுடைய அரசாங்கத்துக்கு விற்பனை செய்திருந்தது.
இலங்கையை இதுவரையில் ஆட்சி செய்த சகல தலைவர்களை விடவும் மாறுபட்டவரான குள்ளநரியரான ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்களையே தனது அசாதாரணமான குள்ளநரித்தனத்தால் வெற்றி கொண்டமை இஸ்ரேலைப் பொறுத்தவரையில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல. உலகம் முழுவதும் தமக்கென ஒரு தாயகம் இல்லாத நிலையில் அநாதைக ளாக வாழ்ந்து கொண்டிருந்த யூத இன மக்கள் பாலைவனமாகப் பரந்திருந்த அப் பிராந்தியத்தில் குடியேறித் தமது மூளைப் பலத்தாலும் உடல் உழைப்பின் அபாரமான ஆற்றலினாலும் அப்பிராந்தியமான இஸ்ரேலை உலகின் முன்னணி வகிக்கும் நாடுகளிலொன்றாக ஆக்கியிருந்தார்கள் என்பது ஒன்றே அவர்களுடைய இந்த ஜே.ஆரையே வெற்றி கொண்டமைக்கான வலுவான சான்றாக அமைந்துள்ளது.
ஸ்ரீமாவோ ஆட்சியின் போது வெளியேற்றப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் ஜே.ஆர், பிரேமதாஷா ஆட்சியின் போது மீண்டும் இலங்கைக்குள் நுழைந்து தம்மைத் தக்கவைத்துக் கொண்டமையோடு அரசியல் அதிகாரத்திலும், ஊடகங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் இன்னோரன்ன விடயங்களிலும் தமது அழுத்தங்களைக் கச்சிதமாகப் பிரயோகிக்கத் தவறவில்லை.
இதன் காரணமாகத்தான் மஹிந்த அரசிலும் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமாக மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. முஸ்லீம்களுக்கு எதிரான மிக மோசமான காலப்பகுதியாகவும் இது அமைந்திருந்ததென விமர்சிக்கப்படுகின்றது. இஸ்லாமி யர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த இனவாத சக்திகளுக்கு இஸ்ரேலினுடைய அனுசரனையும், நோர்வேயின் நிதியுதவியும் போதி யளவு இருந்ததான சந்தேகமும் நிலவிவருகின்றது.
இவ்விடத்தில் இறுதியாக இஸ்ரேலின் இலங்கை தொடர்பிலான இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டு மைத்திரி-ரணில் அரசின் அமெரிக்கா இஸ்ரேலுடனான உறவுகள் தொடர்பில் இலங்கை இஸ்லாமியர்கள் அசாதாரண மான நிலையில் பல்வேறு வகையான பாதிப்புக்களுக்கும் இலக்காவார்கள் என்பதையும் அம்மக்களுக்கு எச்சரிக்கையாக எடுத்துக்கூறி இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.
ஒன்று காலியில் யூதர் ஒருவர் பொதுபலசேனாவுக்கு ஒரு கட்டிடத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அக்கட்டிடத் திறப்பு விழாவில் அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தபாய ராஸபக்ஷ அவர்களும் கலந்து கொண்டிருந்தார் என்பதுவும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
மற்றையது முன்னாள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரைத் தனது நாட்டுக்கு விஜயம் செய்ய வைத்தமை மட்டுமல்லாது அப்போது சபை முதல்வராக இருந்த நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றக் குழுவொன்றையும் விஜயம் செய்யவைத்து இஸ்ரேலானது இராஜதந்திர ரீதியாகப் பெரும் வெற்றியையும் ஈட்டியிருந்தது.