இலங்கையில் சமாதானத்துக்கு அமெரிக்கா உறுதியான உதவி – அந்நாட்டுப் பிரதிநிதியின் மற்றுமொரு புரளி

397

‘இலங்கை மக்கள் சமாதானம், செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தைத் தொடர்கையில் அமெரிக்கா உறுதியான விதத்தில் அதற்கு உதவும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளிலொன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளவருமான தோமஸ் ஷனோன் அவர்கள் தெரி வித்துள்ளார். தன்னுடைய இலங்கைப் பயணத்தின்போது திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள இந்த அமெரிக்க அரச பிரதிநிதி இலங்கைத் தமிழர் தலைவராக மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டமும் தோல்வியில் முடிவடைந்த துயரம் மிகு பின்னணியில் புதிதாக முளைவிட்டு தற்போது அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியையும் அட்டகாசமாக அலங்கரித்துக்கொண்டிருக்கும் தமிழர் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களோடு இணைந்து திருக்கோணேஸ்வரக் கோணநாதப் பெருமானையும் மிகுந்த பக்தியுணர்வோடு வழிபட்ட மேற்படி அமெரிக்கப் பிரதி நிதியின் கருத்தைப் புதிய தமி ழர் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஜீரணித்துக்கொண்டாலுங்கூடக் கோண நாதப் பெருமான் ஒருபோதும் ஜீரணித்துக்கொள்ளமாட்டாரென உறுதிபடக் கூறமுடியும்.

பிட்டுக்கு மண் சுமந்த பெருமா னார் உறையும் தேவாரப் புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தின் கோணநாதர், உலக மயமாக்கல் என்னும் நவீன கோட்பாட்டின் நிமித்தமாக உலக மனித குலத்தின் குருதியைக் குடித்துக் குதூகலிக்கும் வெறியில் நாக்கை நீட்டி உமிழ்நீர் சிந்தக் காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜாங்கப் பிரதி நிதியின் கருத்தை ஒருபோதும் ஜீரணித்துக்கொள்ளமாட்டாரென்னும் கருத்தை நிரூபணம் செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதியின் இலங்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் விரிவை யுங் குறிப்பிடுவது பொருத்தமுடையதாக இருக்கும். அத்தோடு சம்பந்தன் அவர்கள் இலங்கைக்கு அடுத்தடுத்து விஜயம் செய்யும் அமெரிக்கப் பிரதி நிதிகளின் நிகழ்வுகளில் குதூகலத்துடன் பங்குபற்றித் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முயல்வதாகக் கூறித் திருப்தியடைவது முற்றிலும் பொருளற்றவொன்றென்பதையும் சுட் டிக்காட்டியேயாகவேண்டும். சம்பந்தன் அவர்களின் இவ்வமெரிக்கா மீதான அசாதாரண உறவுபோன்றதே குறிஞ்சாத்தீவில் ஈ.பி.டி.பி அமைப்பினரின் கோரமான தாக்குதலில் படுகாயமடைந்த மாவை.சேனாதிராசா அவர்கள் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைத் திறப்பின்போது ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு முட்டிக்கொண்டு நின்று தன்னையும் இனங்காட்டிய இழிநிலையாகும். இதே மாவையார் அவர்கள் தான் தற்போதும் வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய சிறுபான்மை இன மக்களின் வாக்குகளினால் பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசா னது தமிழர் நலன் பேணவேண்டுமென ஆற்றாமையோடு இயைந்ததான ஒரு கருத்தை வெளியிட்டதோடு சுவாமி நாதன் அவர்களுக்கு அமைச்சர்ப் பதவி வழங்கவேண்டுமெனத் தாமே பரிந்துரைத்ததாகத் தனது பலவீனத்தை மேலும் பறைசாற்றி நிற்பதோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராகிய தம்மைப் புறக்கணித்து வடக்கின் நலன்சார்ந்த தமது அமைச்சின் சேவைகளை முன்னெடுப்பதாகவுங் குறைப்பட்டுமுள்ளார். மாவையாரின் இக்குறைகூறலுக்குப் பதிலாக அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் தான் சேனா திராசா அவர்கள் கூறுவதைப்போலத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் புறக் கணிக்கவில்லை எனக் கருத்து வெளியிட்டுள்ளமையை ஒருபுறமாக வைத்தாலுங்கூட மாவை சேனாதிராசா அவர்களுடைய இவ்வாறான கருத்துக்கள் சம்பந்தன் அவர்களுடைய அமெரிக்கப் பிரதிநிதிகள் சார்ந்த நடவடிக்கைகளோடு இணைந்து செல்வதையும் நோக்கக் கூடியதாகவுமுள்ளது. இவ்விடத்தில் சம்பந்தன் அவர்களின் அமெரிக்கப் பிரதி நிதிகள் சார்ந்த கையாலாகாத்தனமான நடவடிக்கையையும், மாவையார் அவர்களின் டக்ளஸ், சுவாமிநாதன் போன்றவர் முட்டிக்கொண்டு நின்று அரசி யல் செய்யும் அந்தோ பரிதாபத்தையும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க 15.10.2015இல் சபையில் தெரிவித்த வடக்கு-கிழக்கு மக்களுக்கு வீடமைப்பு நிதிபோதாது. ஆகையால் இந்நிதியுதவியை மேலும் 3 இலட்சத்தால் அதிகரிக்கவேண்டும் எனத் தெரிவித்த கருத்தோடு ஒப்புநோக்கும்போது சம்பந்தன், சேனாதிராசா போன்றோர் வெட்கித் தலைகுனிவதே சாலவும் பொருத்தமானவொன்றாகவிருக்கும். அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் அவர்கள் இலங்கை விஜயத்தின் போது வெளிக்காட்டிய அம்மணத்தை முழுமையாக அம்பலப்படுத்தமுதல் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் 15.10.2015இல் கூடிய நாடாளுமன்ற அமர்வில் தமிழர் நலன் தொடர்பில் தெரிவித்த மணியான கருத்துக்களை வழுவாமல் வழங்குவதும் வாய்மையேயாகும். அன்னாரால் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்ட நன்னெறிபயக்கும் கருத்துக்கள் கீழ்வருமாறு அமைந்துள்ளன. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க 2009இல் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஐந்தரை லட்சம் ரூபா நிதி போதாது. இதனால் அந்த மக்கள் தமது வீடுகளைக்கட்டி முடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிதியுதவித்தொகை 03இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும். இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணி களில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. முகாம் களில் இருப்பவர்களைவிட மீள்குடியேற்ற மக்கள் பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 06ஆண்டுகள் கடந்தபோதும் வடக்கு-கிழக்கு மக்களுக்கு இன்னும் பெரிய பிரச்சினைகள் உள்ளன. இன்னும் அந்த மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். சுன்னாகம், வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் 13முகாம்களுள்ளன. வலிகாமம் பகுதி யில் காணிகள் விடுவிக்கப்பட்டன. இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணி களில் மக்கள் வாழ்வதற்குத் தேவை யான அடிப்படை வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை. முகாமில் வாழ்பவர்களைவிட மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. இதேவேளை வடக்கு-கிழக்கு மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. ஒரு வீட்டைக்கட்டி முடிப்பதற்காக ஐந்தரை இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

போர் 2009இல் முடிவடைந்த தையடுத்து இந்தியா மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியால் வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 2010இல் இவ்வீட்டுத் திட்டத்துக்கான மதிப்பீடு செய்யப்பட்டது. இருப்பினும் இவ்வீட்டுத் திட்டத்துக்கான நிதியுதவி 2012,2013,2014ஆம் ஆண்டுகளில் தான் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. 2010இல் இந்த வீட்டுத் திட்டத்துக்கான மதிப்பீடு செய்யப்பட்டது. சீமெந்து, கம்பிகள் ஏனைய பொருட்களின் விலைகள் 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் அதிகரித்திருக்கும். எனவே இந்த ஐந்தரை இலட்சத்தை வைத்துக்கொண்டு அந்த மக்களால் வீடுகளைக் கட்டிமுடிக்கமுடியாது. அந்த மக்கள் கூடாரம்போன்ற வீடுக ளில் வாழ்கின்றனர். எனவே அவர்கள் நல்லதொரு வீட்டைக் கட்டிமுடிக்க வேண்டுமாயின், மேலும் 03இலட்சம் ரூபா அந்த மக்களுக்கு வழங்கவேண்டும்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறிய மேற்படி கருத்துக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாருக்கும், வடக்கின் அமைச்சர்கள் சுவாமிநாதன், திருமதி.மகேஸ்வரன் ஆகியோருக்கும் தலைசிறந்த படிப்பினையாகவும் இருக்கவேண்டும். அத்தோடு அக்கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் அவர்களும் தமிழ் மக்கள் அவலம் தொடர்பிலும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சார்பாகவும் பாராட்டத்தக்க கருத்துக்களை வெளியிட்டுமுள்ளார்.

இவ்விடத்தில் கோணேஸ்வரப் பெருமானைப் பக்திபூர்வமாகத் தரிசித்த தோடு இன்றைய வடக்கின் தமிழ்த் தலை வரும், ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலை வருமான சம்பந்தன் அவர்களுக்கு இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா உறுதியான உதவியை வழங்கும் எனச் சத்தியஞ் செய்துகொடுத்திருந்த சத்தியவானான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் அவர்கள் தற்போது மற்றுமொரு ஆத்திரத்தை வரவழைக்கக்கூடிய மிகு நகைச்சுவையோடுயியைந்த கருத் தையும் கண்மூடித்தனமாகக் கட்ட விழ்த்துவிட்டுமுள்ளார். அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட அமைதி வழியிலே சென்று இலங்கையில் இனங்களுக்கிடையில் இணக் கத்தையேற்படுத்தவேண்டுமென மேற்படி அமெரிக்கப் பிரதிநிதி கூறியமையே மிகுந்த சிரிப்புக்கிடமானவொன்றென இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் இன்றியமையாதவொன்று.
விடுதலைப்புலிகளை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் அழித் தொழிப்பதன் மூலம் மட்டுந்தான் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கமுடியுமென வீர சபதமெடுத்த வெட்கங்கெட்ட தமி ழரான அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் அமைதி வழி சந்திரிகா அம்மையார் அவருக்குப் பிச்சையாக வழங்கிய அமைச்சர்ப் பதவியின் சுக போகம் தலைக்கேறிய நிலையில் மிகவும் திமிர்த்தனமாக வெளியிட்;ட மேற்கூறிய வழிதானென அமெரிக்க இராஜாங்க ஆலோசகர் தோமஸ் ஷனோன் அவர்கள் கருதுவது வியப்புக்குரியவொன்றல்ல. ஆனால் அவ்வாறான உலக மயமாக்கல் என்னும் புதிய வெறிபிடித்த முற்றிலும் அகிலந் தழுவியளவிலான மனிதத்துக்கு மாறான கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜாங்கப் பிரதிநிதியோடு பிட்டுக்கு மண் சுமந்த பெருமானாரின் திருமலை யின் கோணநாதராக வீற்றிருக்கும் கோணேஸ்வரப் பொருமானின் முன்றலில் சம்பந்தன் அவர்கள் கூடிக்குலவி களிப்படைந்தமை தான் வியப்பிலும் வியப்பாகவுள்ளது. சம்பந்தன் அவர்களின் இந்நடவடிக்கையை 1977இல் இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலுக்குச் சற்றுப்பின்னர் இன்றைய காலகட்டத்தில் அன்னார் வகித்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியையே அலங்கரித்துக்கொண்டிருந்த அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் அன்றைய பிர தமர் பிரேமதாசா அவர்களோடு இணைந்து கொழும்புத் துறைமுக நுழைவாயிலில் இறுமாப்போடு தரித்துநின்று அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு வாயெல்லாம் பல்லாக நின்று கைலாகுகொடுத்து வரவேற்ற கயமைத்தனத்தோடு ஒப்புநோக்கலாம். அன்று எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த தமிழர் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொழும்பு துறைமுக நுழை வாயிலில் அமெரிக்க இராஜதந்திரிகளோடு இணைந்து வாயெல்லாம் பல்லாக நின்று களிபேருவகைகொண்டதன் மூலம் தமிழ் மக்களையும், இளைஞர்களையும் எதிரிகளுக்குச் சிறி தளவேனும் மனக்கூச்சமில்லாமல்க் காட்டிக்கொடுத்தார். அதைப்போலவே இன்றும் அமிர்தலிங்கம் அவர்கள் அந்நாளில் வகித்த எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியை வகித்துக்கொண்டிருக்கும் திருமலை இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பிட்டுக்கு மண் சுமந்த பெருமா னார் உறையும் கோணேஸ்வரத் தலத்தில் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதியோடு இணைந்து அப்பிரதிநிதியின் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களுடைய அமைதிவழியை இலங்கையில் நிலைநாட்டும் அறப்பணியில் ஈடுபட்டும் இருந்திருக்கின்றார். ஆனால் ஒரே யொரு வித்தியாசம் யாதெனில், அன்று அமிர்தலிங்கம் அவர்கள் வாயெல்லாம் பல்லாக மட்டும் கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதிகளோடு இணைந்து களித்து நின்றார். ஆனால் சம்பந்தன் அவர்களோ இன்று பிட்டுக்கு மண் சுமந்த பெருமா னார் உறையும் தேவாரப்பாடல்பெற்ற திருமலைத் திருத்தலத்தில் புதிதாகப் பல்லு முளைத்திருக்கின்றதோ? என ஐயுறும்விதமாக அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகளோடு சேர்ந்து களிபேருவகைகொண்டமையே அவ் வொரேயொரு வித்தியாசமாகும். அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்றைய துரோகத்தனம் தமிழ் இளைஞர்களின் அருமருந்தன்ன ஆயுதப்போராட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியது. ஆனால் சம்பந்தன் அவர்களின் இன்றைய காட்டிக்கொடுப்பு இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆயுட்கால விசுவாசிகளான வடக்கின் சுவாமிநா தன், விஜயகலா போன்றவர்களோடும், இஸ்லாமிய மக்களின் வாக்குகளைச் சூறையாடிக்கொண்டிருக்கும் அதே ஐ.தே.கவின் விசுவாசிகளான ரவூப் ஹக்கீம் முதலானோர்களோடும், மலையகத்தின் ஆயுட்கால ஐ.தே.க அடிவருடிகளான மனோ கணேசன் ஆகிய பித்தலாட்டக்காரர்களோடும் இணைந்து அதல பாதாளத்துக்குள் தள்ளி வீழ்த்திவிடும் என்பதே, நாடாண்ட மன்னன் அரிச்சந்திரன் சுடலை காத்தமைக்கு ஒப்பான அசாதாரணமான வாய்மையாகும்.

இனி அரிச்சந்திர மகாராஜன் சுடலை காத்;தமைபோல இலங்கைத் தமிழ் மக்களும் சுடலை காக்கும் நிலைக்கு ஆளாகக் கூடாதென்னும் ஆதங்கத்தின்பாற்பட்டு மேற்படி அமெரிக்க பிரதிநிதியின் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் அமைதி வழியிலே இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க முனையும் மனோபாவத்தின் பாற்பட்டு கருத்துக்கள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம். தனது தேசத்தினுடைய இலங்கைக்கான உதவிகள் குறித்து அவர் கூறியவையாவன கீழ்வருமாறு அமைகின்றன.

‘இலங்கைக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ள இரு நாள்களில் இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நாட்டின் பல பகுதிகளையுஞ் சேர்ந்த உள்ளூராட்சி அதிகாரிகள், சமூகங்கள், சிவில் அமைப்புக்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளேன். உங்கள் நாடு சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சாதித்துள்ள விடயங்களால் நான் கவரப்பட்டுள்ளேன்.

அமெரிக்கா உங்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு உதவுவது குறித்துப் பெருமிதங்கொள்கின்றது.

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி இலங்கை மக்களின் அவர்களது சமூகங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எமது திட்டங்கள் இலங்கையின் பரந்துபட்ட பகுதிகளிலும் பல தரப்பட்ட துறைகளிலும் காணப்படுகின்றன. விவ சாய அபிவிருத்தி, சூழல் மற்றும் இயற்கை வளங்கள், சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், ஆட்சிமுறை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பல துறைகளில் எமது திட்டங்கள் காணப்படுகின்றன.

இந்தக் கூட்டாண்மையென்பது கடந்த ஆறு தசாப்தங்களில் மலேரியாவைக் கட்டுப்படுத்துதல், ரயில் பாதைகளை நவீன மயப்படுத்தல், போஷாக்கை அதிகரித்தல் போன்ற பல குறிப்பிடத்தக்கவிடயங்களில் சாதித்துள்ளது.

இலங்கையில் பேரழிவை யேற்படுத்திய 2004 சுனாமித் தாக்கத்தின்போது இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு யு.எஸ்.எயிட் உதவியது. அறுகம்பைப்பாலம், மீன்பிடித்துறைமுகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நீர் விநியோக அமைப்பு முறையென்பவற்றைத் திருத்துவதற்கு உதவியது. அந்தப் பேரிடர்களினால் காவுகொள்ளப்பட்ட உயிர்களையும், அதனால் ஏற்பட்ட நிரந்தர அழிவுகளையும் எம்மால் மறக்க முடியாது. அதேவேளை எதிர்காலத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான உங்களது துணிச்சலால் நாங்கள் கவரப்பட்டுள்ளோம்.
இலங்கையின் மோதல்களின்போதும் அதன் பின்னரும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு, உறைவிடம், சுகாதாரம் உட்பட அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான உதவிகளை வழங்கியுள்ளோம்.

அமெரிக்கா தொடர்ந்தும் நீண்டகால முன்னேற்றத்துக்கு அவசியமான விடயங்கள் குறித்துக் கவனஞ்செலுத்தும். நாங்கள் சமநிலையான பொருளாதார வளர்ச்சி குறித்துக் கவனம் செலுத்துவோம். குறிப்பாகக் குறைந்த அபிவிருத்தியைக்கொண்டுள்ள பிரதேசங்களில் அதிகளவு வேலைவாய்ப்பையும், உயர்ந்த வருமானத்தையும் ஏற்படுத்துவோம்.

நாங்கள் தொடர்ந்தும் கிழக்கின் சமூகங்களுக்கு உதவி வழங்குவோம். நாங்கள் 32பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேற்படி கருத்துக்களையே இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரால் இலங்கையில் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துக்களில் யுத்தத்தின் பேரிடர்களினால் காவுகொள்ளப்பட்ட உயிர்களையும், அதனால் ஏற்பட்ட நிரந்தரமான அழிவுகளையும் எம்மால் மறக்கமுடியாது. அதேவேளை எதிர்காலத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான உங்களது துணிச்சலால் நாங்கள் கவரப்பட்டுள்ளோம் என்னும் கருத்தும் சமநிலையான பொருளாதார வளர்ச்சி என்ற கூற்றும் ஒப்புநோக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டவேண்டியவையாகவுள்ளன. யுத்தத்தின்போது இந்திய வல்லாதிக்க சக்திகளோடு இணைந்து தனது ஏகாதிபத்திய புதிய உலக மயமாக்கல் என்னும் கோட்பாட்டுக்குத் தீனியாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எதிராக இலங்கை அதிபரும், யுத்தக் கதாநாயகனுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பேருதவி புரிந்து தமிழ் மக்களைக்கொன்று குவிப்பதற்கு உறுதுணையாகவிருந்த அமெரிக்காவின் இராஜாங்கப் பிரதிநிதி அவர்கள் தற்போது இலங்கையில் கால்பதித்துத் தமிழ்த் தலைவர்களோடு கோணநாதப் பெருமானையும் தரிசித்துவிட்டுங் கூறியுள்ள கருத்துக்கள் இலங்கையின் ஒட்டுமொத்தத் தமிழினத்தினதும் காதிலே பூச்சுற்றுவது மட்டுமல்லாமல் முழு இலங்கை மக்களினதும் காதிலே பூ சுற்றும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.

எனவேதான் இவ்விடத்தில் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்து சம்பந்தன், சுவாமிநாதன், திருமதி.மகேஸ்வரன், மனோ கணே சன், ரவூப்ஹக்கீம் போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளைச் சந்தித்து புரளிகளைக் கிளப்பிவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் அமெரிக்க அரச பிரதிநிதிகளையிட்டு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுமே மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து தம்மையும், தீவையும் ஒருசேரப் பாதுகாத்துக்கொள்ளவேண்டுமென இடித்துரைக்க வேண்டிய வர்களாகவுள்ளோம்.

கருணைக்கண்ணன்

SHARE