தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப்பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்கமுடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அரசியல் தீர்வுக்கான யோச னைகளை முன்வைக்கப்போவதாகக் கூறி ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஓர் அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குள் உள்ள வடக்குமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரகசியமான முறை யில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். இந்த அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களின் அழுத்தத்தின் பிரகாரம் உருவாக்கப் பட்டுள்ளது என்று அரசியல் இராஜதந்திரிகளிடமிருந்தும் மற் றும் உள்ளூர், சர்வதேச ஊடகங் களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம் பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு புதிய அமைப்பு ஜனநாயக ரீதியில் உருவாகி செயற்படுவதை எதிர்க்க முடியாது. ஆனால், ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கட்சியின் கோட்பாடுகளை மீறி கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் தனிப்பட்ட ரீதியில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதை கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளாது.
அதேமாதிரித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமைக்கு அறிவிக்காமல் கட்சியின் அனுமதியைப்பெறமால் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்திற்கே வழிவகுக்கும். எனி னும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசி யல் தீர்வைப்பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதி யில் பெரிதும் பாடுபட்டு வருகின்றது. தீர்வுக்கான இந்த இலக்கை நாம் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெளிவா கச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
சர்வதேச பிரதிநிதிகளுடனான ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் இதனை நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம். இந்தச் சந்திப்புகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களும் பங்கேற் றிருக்கின்றார்கள். நாம் ஓரணியில் நின்று நிரந்தர அரசியல் தீர்வைக்காண விரும்புகின்றோம். இதைக் குழப்பியடிக்க விரும்பவில்லை. குழப்பியடிக்க விரும்புவோர் இதனைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன் என்று கூறியிருக்கும் அவர் இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பதைப் பார்க்கின்றபொழுது வெறுமனே சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர், இன்னும் பல புத்திஜீவிகள் எனக்கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரை இந்தியா தனது தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. அதுபோல வேறு பல இயக்கங்களையும் பயன்படுத்திக்கொண்டது. இந்தியா வெறுமனே விடுதலைப்புலிகளை நம்பியிருக்கவில்லை. அவ்வாறு எனில் ஒரேயொரு இயக்கத்திற்கு மாத்திரமே பயிற்சி கொடுத்திருப்பார்கள். பூகோள ரீதியாக இலங்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். அதன் காரண மாக இந்தியாவின் தலையீடு புராதன காலத்திலிருந்து இந்நாள் வரை தொடர்கின்றது. இந்த ஐக்கியத்தினை சீர்குலைக்க இந்தியரசு ஒருபோதும் இடமளிக்காது.
சீனாவின் தலையீடு இந்நாட்டில் ஓய்ந்திருந்த நிலையில் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனை அனைவரும் அறிந்தமை யாவரும் அறிந்ததே. நிலைமைகள் இவ்வாறிருக்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இலங்கை அரசிற்கு ஊதுகுழல் என அறிந்துகொண்ட ரோ அதற்கான மாற்று நடவடிக்கைகளை கையாண்டதுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அணுகியது. தமிழ் நாட்டுடன் எதிர்ப்பு என வெளியில் காட்டிக்கொண்டு உள்ளே அவரை ஆதரிக்கத் தொடங்கியது இந்தியா. குறிப்பாக இலங்கையில் பாக்கிஸ்தானது இராணுவத்தளபாடங்கள், சீனாவின் இராணுவத்தளபாடங்கள், ஆயுதங்கள் அதிகமாக இருப்பதனால் இந்தியா தனது வர்த்தக சந்தையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாது நீண்டகாலமாக இராமர் பாலத்தினை அமைக்க திட்டம் தீட்டிவந்த இந்தியாவின் அந்தக் கனவும் சுக்குநூறாகியது. அத்தோடு சீபா ஒப்பந்தம் அதாவது இந்தியாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை தங்குதடையின்றிச் செய்வதற்கானதே இவ்வொப்பந்தமாகும். இதில் கைச்சாத்திட இலங்கையரசு மறுத்துள்ளது. இதனால் இந்தியா தனது வர்த்தகத்துறையில் இலங்கையுடனான நட்புறவில் பகைமையும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கடனடிப்படையில் புகையிரதத்தினையும் வழங்கவிருந்தது. அதனையும் இலங்கையரசு நிறுத்தியுள்ளது. இந்தியாவினது தலையீட்டினை இலங்கையில் தவிர்த்துக்கொள்வதற்காக இதனை நன்கு அறிந்துகொண்ட இந்தியரசு வேண்டுமென்றே மீண்டுமொரு குழப்பத்தினை தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ஒன்றிணைந்து காணப்பட்ட த.தே.கூட்டமைப்பையும், வடமாகாணசபையினையும் பிரித் தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டது. தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சிகளையும் பயன்படுத்துவது வழமையானதொன்றே. அவ்வாறானதொரு நிலைப் பாட்டினையே இன்றும் இலங்கை யரசாங்கம் செய்து வருகின்றது. தமிழர் பேரவையின் உருவாக்கம் என்பது சாதாரணமாக நினைத்து விட்டுப்போகமுடியாது. அடுத்தகட்ட அரசியல் காய்நகர்த்தல்களை நகர்த்துவதற்கான அடிப்படையையே வலியுறுத்தி நிற்கின்றது. இதற்கு மக்கள் மத்தியில் பிரசித்திபெற்ற ஒருவரே இந்தியாவிற்குத் தேவைப்பட்டது. தமிழினத்தின் தலை என வர்ணிக்கப்படுகின்ற யாழ் மக்களையும் அங்கு இயங்கி வருகின்ற வடமாகாணசபையினையும் தமது அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் தாம் நினைத்ததை சாதித்துக்கொள்ள இயலும் என்கின்ற நிலைப்பாட்டில் இந்தியா முடிவு களை மேற்கொண்டுள்ளது. பாக்கிஸ்தானிடமிருந்து இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதைக் கண்டித்து இலங்கையரசிற்கு ஒரு எச்சரிக்கை யினையும் விடுத்துள்ளது இந்தியரசு.
இரா.சம்பந்தனைப் பொறுத்தவரையி லும் தற்போதைய நிலைப்பாட்டின் படி ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒரு சமாதானத் தீர்வினை எதிர்பார்க்கின்றார். இனப்படுகொலை பற்றிப் பேசுவதைவிடுத்து அதற்கு மாற்றீடாக போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்படவேண்டும் என்ற வாசகத்தினையே முன்வைக்கின்றார். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் இரா.சம்பந்தனுடன் இணைந்து செயற்படுகின்றார். தற்போதிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கட்டமைப் புக்களை சீர்குலைப்பதன் ஊடாகவே இந்திய அரசாங்கம் தனது அரசியலை இலங்கையில் நிலைநிறுத்த இயலும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. பதவி மோகங்களுக்காக ஆசைப்படும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை நம்பு வது பயனற்றது என்பதும் மற்றொரு காரணமாகும்.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் பல்வேறு உரி மைச் சட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தியது. இதனால் சிறுபான்மை இனத்திற்கு நன்மை எதுவும் ஏற்படவில்லை. 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதில் மலையகத்தினைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்படைந்திருந்தனர். 1949ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம், 1956ஆம் ஆண்டு அரச கரும மொழிச் சிங்களச் சட்டம், 1958ஆம் ஆண்டு ஸ்ரீ எழுத்துச்சட்டம், 1967 சிறிமா சாஸ்திர ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினத்துக்காக 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் நலன் பேணப்படும் எந்தவொரு விடயங்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 11 விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றது. மக்கள் இறையாண்மை, அரச கொள்கை வழிகாட்டல் கோட்பாடு, அடிப்படை உரிமைகள், தேசிய அரசுப்பேரவை, அரசியல் அமைப்பு நீதிமன்றம், அமைச்சரவை, பொதுச்சேவை ஆலோசணைச்சபை, பொதுச்சேவை ஒழுக்காற்றுச்சபை, நீதிச்சேவை ஆலோசணைச்சபை, நீதிச்சேவை ஒழுக்காற்றுச்சபை, மொழியும் மதமும் இவையணைத்தும் ஆரம்பகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் இதனால் தமிழினத்திற்கு கிடைத்த பெறு பேறுகள் என்ன என்பதைப் பார்க்கும்போது அவையணைத்தும் பூச்சியம் என்பதே உண்மையாகும். 1972ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களுக்கான உரி மைகள் கிடைக்கப்பெறவில்லை என்றால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எதிர்க்கட்சிப் பதவியின் அர்த்தம் என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலில் அனுபவமற்றவர். வெறு மனே அவருக்கு இனப்படுகொலை பற்றிக் கூறுகின்றபோது அதனை அவர் செவிமடுத்து அதற்கேற்ற பாதையில் செல்லக்கூடிய ஒரு இயல்புடையவரே. இலங்கையின் போராட்ட வரலாறு என்பது இவருக்குத் தெரியாது. ஆகவே இதுவரை நடைபெற்ற பிரச்சினைகளைக்கொண்டு அதற் கான தீர்வினை தமிழினத்திற்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சி இதுவரைகாலமும் நடாத்திய அரசி யலில் பெற்றுக்கொடுத்த தீர்வுகள் என்ன என்கின்ற விடயத்தினை விக்னேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தி இதில் உள்ள உண்மைகள் தெளிவு படுத்தப்படவேண்டும். ஆகவே மக்கள் பார்வையில் இவரது நடவடிக்கைகள் சரி என்றே கொள்ளப்படும். அவ்வாறானதொரு விடயத்தினையே இந்தியரசும் கையிலெடுத்துள்ளது. எதிர்க்கட்சிப்பதவியில் இருந்து கொண்டு இனப்படுகொலைக்கு தீர்வுகாண முடியாது என்பதை வடமாகாண சபையின் முதலமைச்சர் ஊடாகவே கூறவைத்து, அதனோடு தனது தந்திரோபாய அரசியலை நகர்த்து வதற்கான திட்டமொன்றாகவே இந்த தமிழர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி யெறியத் தவறினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெரும் ஆபத்தினை சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நெற்றிப்பொறியன்