சம்பந்தனின் மிரட்டலுக்கு அடிபணியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

381

அன்மையில் ‘தமிழர் பேரவை’ என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் தலைவராக வடமாகாண முதலமைச்சர் ‘விக்னேஸ்வரன்’ அவர்கள் நியமிக்கப்பட்டுமுள்ளார். இப்பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதன் பின்னணி யாது? என்னும் வினாக்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தற்போது வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன.
இப் பேரவையின் உருவாக்கத்தில் சம்பந்தன் அவர்கள் மீது அதிருப்தியும், காழ்ப்புணர்வும் கொண்டுள்ள அரசியல், சமூகம் தொடர்பிலான பிரமுகர்களும், ஊடகவியலாளர்களும் பின்னணியில் இருந்துள்ளமை நன்கு தெரியவருகின்றது.
இதன் காரணமாகவே, சம்பந்தன் அவர்களும், விக்னேஸ்வரன் அவர்களும் ஒருவரோடு ஒருவர் வெறுப்புணர்வுகொண்டு மோதவேண்டிய நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாற்பட்டும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாற்பட்டும், தமிழ் வெகுஜனத் திரட்சியின் பாற்பட்டுமுள்ள செல்வாக்கினால் சம்பந்தன் அவர்கள் தமிழர் பேரவையின் உருவாக்கம் தொடர்பிலும், அப்பேரவையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுடைய தலைவர்ப் பதவி என்னும் வகிபாகம் தொடர்பிலும் தனது மேற்றரப்பட்ட செல்வாக்கின் நிமித்தம் மிரட்டல் போக்கைப் பிரதிபலித்து விக்னேஸ்வரன் அவர்களுடைய இவ்வகிப்பாகத்தைத் தளர்வடையச் செய்யமுயன்றபோதுங்கூட முதலமைச்சர் மசிந்துகொடுத்ததாகத் தெரியவில்லை.
சம்பந்தன் அவர்களதும், விக்னேஸ்வரனதும் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை என்னும் அமைப்புத் தொடர்பிலான உணர்வுகளின் வேறுபட்ட பிரதிபலிப்புக்களை இரு முரண்பட்ட முகாம்களுக்குள் நின்று சீர்தூக்கிப் பார்த்துச் சீர் பெறுவதே அறிவுடமையாகும்.
உண்மையில் இப் புதிய அமைப்பானது அரசியல் சார்பானவொன்றாகவிருந்த போதுங்கூடப் பேரவையின் உருவாக்கந்தொடர்பிலான விக்னேஸ்வரன் அவர்களுடைய சம்பந்தன் அவர்களுக்கு எதிராகச் சவால்விடும் போக்கை வலுக்குன்றச் செய்யும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழர் பேரவை என்னும் புதிதாக அமைக்கப்பட்ட இவ்வமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எவருமேயில்லையென்னும் கருத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மட்டுமல்ல அதன் உப தலைவராகவேயுள்ள சிற்றம்பலம் என்பவரும் இப்பேரவையில் இடம்பெறும் விடயம் அம்பலத்துக்கு வந்தமையையடுத்து மாவையார் வெலவெலத்துப் போய்ப் புதிய பேரவை தொடர்பில் தாம் மிகுந்த கூர்மையான அவதானிப்புக்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டபின்னே அப்பேரவை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியுமெனத் தனது மேற்படி கருத்துக்குச் சப்பைக்கட்டும் கட்டியுள்ளார்.

CV-Wigneshwaran-520x245
மேலும், தனது சவாலுக்கு விக்னேஸ்வரன் அவர்கள் மசிந்து வராத காரணத்தால், சந்பந்தனும் மாவையார் அவர்களை அடியொற்றி வேறோரு பாணியில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழர் பேரவையானது ஓர் அரசியல் பாசறையோ அல்லது அரசியல் அமைப்போ அல்ல அப்பேரவையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் பெரியவர்களும், ஆன்மீகவாதிகளும், ஊடகவியலாளர்களும், இடம்பெற்றிருக்கின்றார்கள் எனவுங் கூறியுள்ளதோடு அத்தன்மைவாய்ந்தான பேரவையினால் அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களின் ஐக்கியப்பட்ட நகர்வுக்கோ பாரிய பங்கம் எதுவும் ஏற்படாதென்னும் கருத்துப்பட விக்னேஸ்வரன் அவர்களோடு மிரட்டும், போக்கில் மோதியும் எதுவித பயனும் பெறமுடியாத நிலையில் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளார். இவ்வாறான ஓர் உயிர்ப்பற்ற அபிப்பிராயத்தை வெளியிட்டதன் மூலம் சம்பந்தன் அவர்கள் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும், ஏமாளிகளாக்கியுள்ளது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழினமும் அரசியல் ஆர்வலர்களும் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவையின் நிஜமான உட்கட்டுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியாதளவுக்கான திரை மறைவொன்றையுங் கனகச்சிதமாக வடிவமைத்துமுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தில் தமிழர் பேரவை எனப் புதிதாக முளைவிட்டுள்ள அமைப்பு சம்பந்தன் அவர்கள் கூறுவது போல அரசியல் அற்ற பொதுவான தமிழர் கலாச்சாரம் தழுவிய அமைப்பேயென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றாகவில்லை. விக்னேஸ்வரன் அவர்களுடனான அவருடைய பலப்பரீட்சையின்போது அவருக்கேற்பட்ட எதிர்பாரத தோல்வியே மேற்படிக் கருத்தைக்கூறி அவர் தனக்கு ஏற்பட்ட தோல்வியின்பாலான ஆற்றாமையைத் தணித்துக்கொள்ளும் பரிதாபமான நிலையொன்றை அவருக்குள் தோற்றுவித்துமுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை என்னும் அமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சிற்றம்பலம் அவர்களும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனப்படும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் ஸ்தாபகரும் அதன் ஆயுட்காலத் தலைவருமான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடைய பேரனாரும் அகால மரணமானவரும் அக்கட்சியின் அடுத்த தலைவருமான குமார் பொன்னம்பலம் அவர்களுடைய புத்திரருமானவரும் முன்னிலை அங்கத்தவர்களாக அப்பேரவையின் சார்பில் நியமனஞ் செய்யப்பட்டதிலிருந்தே அப்பேரவையானது எந்தளவுக்கு அரசியல் உள்ளடக்கத்தின் பாலான வலுவைத் தன்னகத்தே கொண்டுள்ளதென்பது வெள்ளிடைமலை.

மேலும் இப்பேரவையின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு சில ஊடகவியலாளர்களும், ஆன்மீக, சமூகஞ் சார்ந்த பிரமுகர்களும் சாட்சாத் அரசியல் வங்குரோத்துத்தனத்தின் வண்டவாளங்களேயெனலாம். எனவே தமிழர் பேரவையின் உருவாக்கம் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கான நகர்வைப் பலவீனப்படுத்தும் என்னும் யதார்த்த நிலையில் அப்பேரவையின் உருவாக்கம் தேவையற்ற வொன்றேயென்னும் பொதுநிலைப்பட்ட முடிவு ஒருபுறமிக்கச் சம்பந்தன் அவர்களுடைய விக்னேஸ்வரன் மீதான பலப்பரீட்சையும் பலங்குன்றிப் பரிகசிப்புக்கிலக்காகியுமுள்ள இச் சூழலில் அடி பணிதல், அடிபணிய வைத்தல் என்னும் தனி நபர் சவாலுக்குச் சாவுமணியடித்துத் தமிழ் மக்கள் மீது மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டத்தின் பின்னருங்கூட இறுகப் பிணைக்கப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை அறுத்தெறியவேண்டும் என்னும் நல்லுணர்வின் பாற்பட்டு ஐக்கியப்பட்டு அரசியல் பணியாற்றுவதே அறிவுடமையாகும்.

SHARE