இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
இது முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் – பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை…
1968ஆம் ஆண்டு ஒட்டிசுட்டான் – பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுத்த இந்த ஓட்டுத் தொழிற்சாலை, இன்று அநாதையாக இருக்கின்றமை வருத்தமளிக்கின்ற விடயமாகும்.
நாட்டில் நிலைக் கொண்டிருந்த யுத்தம் இந்த ஓட்டுத் தொழிற்சாலையை மூடுவதற்கு வழி அமைத்துக் கொடுத்திருந்தது.
1990ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தீவிரமடைய, இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகள் படிப்படியாக வலுவிழந்து விட்டது.
இவ்வாறு படிப்படியாக வலுவிழந்த இந்த தொழிற்சாலை இன்று அநாதையாக, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த தொழிற்சாலை மாத்திரம் மீளவும் கட்டியெழுப்பப்படவில்லை என்பதே மக்களின் கவலையாகும்.
13 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலையிலிருந்த பெறுமதிமிக்க உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைவிடப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை நவீன வசதிகளுடன் நிர்மாணித்துக் கொடுக்கப்படுமாக இருந்தால், அதனூடாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அமையும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.
முல்லைத்தீவு மாத்திரமன்றி, ஏனைய பகுதி மக்களும் இந்த தொழிற்சாலையின் ஊடாக நன்மையை பெற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த ஓட்டுத் தொழிற்சாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் அண்மையில் துப்பரவு செய்யப்பட்ட போதிலும், மீண்டும் அந்த பகுதி காடாக மாறியுள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், சில தினங்களுக்கு முன்னர் மின்மாற்றி ஒன்று பொருத்தப்பட்ட போதிலும், தொழிற்சாலை மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களின் தொடர்ந்தும் ஏமாற்றத்தை மாத்திரமே வழங்கி வருகின்றமை வருத்தமளிக்கும் செயற்பாடாகும்.