வலி.வடக்கில் 25 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை நேரில் பார்வையிட்டனர்!

367

யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமும் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினமே 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தை மாதம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக வலி,வடக்கு மற்றும் வலி,கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி வலி,வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று வலி,கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள் குடியேற்றத்திற்கு இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலி,கிழக்கு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த முழுமையான நிலங்களும் இன்றுடன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மதியம் 2 மணி தொடக்கம் குறித்த மீள்குடியேற்றப் பகுதிகளை பார்வையிடுவதற்கு நில உரிமையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 25 வருடங்களாக தங்கள் சொந்த நிலங்களை மக்கள் பார்வையிட ஆவலுடன் வந்திருந்தனர்.

மேலும் கடந்த 2010ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதிகளுக்கு ஆலய வழிபாட்டுக்காக படையினர் அனுமதியுடன் வந்திருந்த போது காணப்பட்ட தங்களுடைய வீடுகள் தற்போது இல்லை. என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் கடந்த தை மாதம் மீள்குடியேற்றப்பட்ட போது மக்களுடைய, குடியிருப்புக்களை அண்மித்ததாக இருந்த பாரிய படை முகாம்கள் குறித்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் அவ்வாறான படை முகாம்களில் பளை, வீமன்காமம் பகுதியில் இருந்த படை முகாம் அகற்றப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாம் இணைப்பு

வலி.வடக்கில் திருட்டு- தடுத்து நிறுத்த சென்றவர்களோடு வாய்த்தர்க்கம்!

யாழ்.வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் பொதுமக்களுடைய வீடுகளில் எஞ்சியிருக்கும் கதவு, நிலைகள் கூட திருடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற பிரதேச செயலர் மற்றும் முன்னாள் வலி,வடக்கு  பிரதேச சபை தவிசாளர் ஆகியோர்  அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மரங்கள், பிளாஸ்டிக் பைப்களை எடுத்துவந்தவர்களை இன்றைய தினம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஒரு பகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிலத்தில் மக்கள் மீள்குடியேற முடியும் என்ற அறிவித்தல் மாலை 2மணிக்கே விடுக்கப்பட்டது. இதற்காக 2மணிக்கு அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தபோது அந்தப்பகுதியுடன் தொடர்புபடாத சிலர் மக்களுடைய வீடுகளில் மிச்சமாக இருந்த பொருட்களை எடுத்துக் செல்வதை காண முடிந்தது.

இந்நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய பிரதேச செயலாளர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் தடுக்க முயன்றனர்.

இதன்போது நாங்கள் பொருட்களை எடுக்கவில்லை. இது எங்களுடைய நிலம், நாங்கள் நிலத்தை பார்க்கவந்தோம். என கூறினர். ஆனால் இவர்களுக்கு இந்த நிலத்துடன் சம்மந்தம் இல்லை. என ஊர் மக்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் அதிகாரிகள் தாங்கள் பொலிஸில் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறிய நிலையில் அவர்கள் அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத் தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் பிரதேச செயலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் நீண்டகாலம் இடம் பெயர்ந்து வாழ்ந்து விட்டு சொந்த நிலத்தை பார்க்கும் ஆவலுடன் வெறுங்கையோடு வரும் மக்களுடைய மிச்ச சொச்ச பொருட்களையும் திருடாதீர்கள் என பிரதேச செயலர் அவர்களிடம் வினயமாக கேட்டுள்ளார்.

SHARE