அரசுக்கு எதிரான ஜே.வி.பி நடைப்பயணம் நாட்டுக்கு வழங்கவிருக்கும் படிப்பினை

400

c7c00384406c35b81741b74b364344cf_L Anurakumara

எதிர்வரும் தைத்திங்கள் எட்டாம் நாள் (08.01.2016) மைத்திரி-ரணில் அரசு பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் பெரிய பேரணியொன்றை ஜே.வி.பி ஒழுங்குசெய்துள்ளது. ஆன்றைய தினம் காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகும் மேற்படி கட்சியின் நடைப்பயணம் நுகேகொடையை வந்தடைந்ததும் அங்கு மாபெரும் பேரணியொன்றும் இடம்பெறும்.

இப்பேரணியானது அமெரிக்காவிலிருந்து மாதமொருமுறை இலங்கைக்கு ஒரு அரச பிரதிநிதி வருகை தந்து இலங்கை தொடர்பில் ஆராய்ந்து செல்லும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாகவே விளங்கும்.

இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான இலங்கை விஜயம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை ஆய்ந்தறிவதும் மிகுந்த பயனுள்ளதாகவே விளங்கும். நாடாளுமன்ற உறுப்பினர் வாசு அவர்கள் அமெரிக்க அரச பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியிட்ட சிந்தனைக்கு விருந்தாகும் சீரிய கருத்துக்கள் கீழ்வருமாறு ‘அமெரிக்காவின் முகாமாக இலங்கை மாறி வருவதுடன் அமெரிக்கா, இலங்கை கள்ளத்தொடர்பானது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளதுடன் அயல்நாடான இந்தியாவுக்கும் அதிருப்தியையேற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவிலிருந்து முக்கிய அதிகாரிகள் ஆறுபேர் இலங்கைக்கு வந்துள்ளனர். இது எமது வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. மாதமொருமுறை அமெரிக்காவிலிருந்து ஒருவர் வருகைதந்து இலங்கை தொடர்பில் ஆராய்ந்து செல்கின்றனர்.

அமெரிக்காவின் முகாமாக இலங்கை தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்குப் பல நிலப்பரப்புக்களை விற்பனை செய்வதற்கான திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்திடமுள்ளன. வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிஸ்வால் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். ஐ.தே.கவின் கொள்கைகள் எமக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே நாங்கள் ஆரம்பம் முதலே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றோம்’. முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவநாணயக்கார அவர்கள் ஐ.தே.க ஆட்சியதிகாரத்தின் அமெரிக்காவுடனான கள்ளத்தொடர்பு பற்றி வெளியிட்ட கருத்துக்களின் சாராம்சமே மேற்றரப்பட்டுள்ளவையாகும். அத்தோடு ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும், இந்நாள் மக்கள் சேவை கட்சியின் முதல்வருமான சோமவன்ச அமரசிங்க அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது மைத்திரி-ரணில் அரசோடு கள்ள உறவு பூண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருப்பதைக் கருத்திற்கொண்டும் அமெரிக்கப் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான இலங்கை விஜயமானது நாட்டையும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளையும் எவ்வாறான நிலைக்கு இட்டுச் செல்லுமென்பதையும் ஆய்ந்து தெளிவடைவது காலத்தின் மிக இன்றியமையாத தேவையாகவுமுள்ளது.

இது இவ்வாறிருக்க, அரசுக்கு எதிராக அதன் ஓராண்டு ஆட்சிக்காலம் பூர்த்தியடையும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினால் மேற்கொள்ளப்படவிருக்கும் நடைப்பயணம், பேரணி ஆகிய போராட்டங்கள் தொடர்பில் அக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது ‘மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் மக்கள் ஏமாற்றப்பட்டதுடன், மக்கள் ஆணையும் மீறப்பட்டும் வருகின்றது. பாரிய மக்கள் சக்திகள் ஒன்று திரண்டதன்மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றமுமேற்பட்டது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கி வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நீதித்துறையின் சுதந்திரத்துடன் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக கோஷங்களை முன்வைத்தார். அதேபோல் பிரதமரும் தகவல் அறியுஞ் சட்டம், கணக்கீட்டுச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துமிருந்தார். இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. மாறாக வரவு-செலவுத் திட்டத்தில் மக்களின் மானியங்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், வரிச்சுமையும் விதிக்கப்பட்டுள்ளது’. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான தொடர் விஜயங்களையும் ஒப்புநோக்கும்போது இலங்கை தேசமானது வெகு விரைவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய உலகமயமாக்கல் கோட்பாட்டின் பாலான ஆக்கிரமிக்கப்படும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் முதலாவது நாடாக விளங்கக்கூடிய ஆபத்தொன்றும் உருவாகியுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான வருகை தொடர்பில் தெரிவித்த கருத்துக்களும் தேசத்தை அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் தன்மைகொண்டவையாகவே விளங்குகின்றன. எனினும் அன்னாரும் ஏனைய இடதுசாரி அரசியல் தலைவர்களும் அமெரிக்காவின் வேட்டைக்காடாக இந்து சமுத்திரத்தின் முத்தெனப் பெருமையுடன் வர்ணிக்கப்படும் மாம்பழத்தீவான இலங்கை மாறிவிடும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்குக் கருத்தளவில் மட்டும் தமது பங்களிப்பைச் செலுத்தாமல் ஜே.வி.பி அமைப்பினரைப்போன்று அரச அமெரிக்க உறவுக்கு எதிராகவும், ஏனைய மக்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகள் தமக்கு மிகவும் பரிச்சயப்பட்டவையென்னும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவின் கருத்து ஐக்கிய தேசியக்கட்சியினுடைய தற்போதைய ஆட்சியதிகாரத்துக்கு மட்டுமல்ல, அமெரிக்க அரச பிரதிநிதிகள் இலங்கையின் வடபுலத்துக்கு விஜயம் செய்யும்போது ஸ்ரீலங்கா தேசத்தின் மேதகு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் நிலையின்பாற்பட்ட உத்தியோகபூர்வமான விசுவாசத்துக்கு இயைபாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னவரும் மூத்தவருமான சம்பந்தன் அவர்கள் வடக்கிலும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இராஜபாடை விரிப்பதும் அக்கட்சி ஆட்சி அதிகாரத்தின் வடக்கைச் சேர்ந்த எடுபிடி கௌரவ அமைச்சர்களான கௌரவ டி.எம்.சுவாமிநாதன், திருமதி. மகேஸ்வரன் போன்ற சோற்றுப் பிண்டங்களும் மேதகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குச் சற்றும் சளைக்காமல் அமெரிக்க வல்லாதிக்கத்தின் கழுகுகளுக்கு வடக்கையும் திறந்துவிடும் அழிவுப்பாதையொன்று உருவாக்கப்பட்டுக்கொண்டுமிருக்கின்றது. இவ்வமெரிக்க சார்பான இலங்கை அரசின் போக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களும் அனுசரனையாக இருந்துவருவது கண்கூடு. வாசுதேவ நாணயக்கார அவர்கள் இலங்கை அமெரிக்காவின் முகாமாக மாறிவருவதையிட்டுத் தனது வேதனையை வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் இலங்கையின் இப்போக்கையிட்டு இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அன்னார் சுட்டிக்காட்டியுள்ளதைப்போன்ற இலங்கை மீதான இந்தியாவின் அதிருப்தியில் சம்பந்தன் அவர்களுடைய அமெரிக்க அனுசரனைப்போக்கும் அதிகளவு வலுவான மூலகாரணியாக விளங்குகின்றது. இந்திய மத்திய அரசின் சர்வதேச உளவு ஸ்தாபனமான றோ அமைப்பு இலங்கையின் அசாதாரணமான அமெரிக்கப் பிரசன்னத்தையும் அதற்குத் தமிழ்த் தலைமைகள் வடக்காகவிருந்தாலுஞ் சரி, தலைநகரமாகவிருந்தாலுஞ் சரி, மலையகமாகவிருந்தாலுஞ் சரி பச்சை அங்கி அணிந்தும், அணியாமலும் பச்சைக்கொடி காட்டுவதும் கண்டு வெகுண்டெழுந்ததன் பின்விளைவே வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை என்னும் அமைப்பாகும்.
சம்பந்தன் அவர்களுடைய அமெரிக்கப் பிரசன்னத்துக்கான பச்சைக்கொடி வரவேற்பை ஜீரணிக்கமுடியாத இந்திய மத்திய அரசானது தமிழ் நாட்டிலுள்ள இந்தியதேசிய உணர்வோடு இயைந்த தமிழ் உணர்வாளர்களுக்கான அரசியல்வாதிகளோடு இணைந்து அரங்கேற்றிய நாடகமே அண்மையில் விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகவும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள சம்பந்தன் மீதான அதிருப்தியாளர்களையும், ஏனைய தமிழ்க் குறியீடுகளைக்கொண்ட கட்சிகளான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்களைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களையும் அங்கத்தவர்களாகவுங்கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை என்னும் அமைப்பாகும். இந்தியாவானது இலங்கையினதும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களினதும் அமெரிக்கச் சார்புப்போக்கின் மீதான வெறுப்பினால் மேற்படி தமிழர்பேரவை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டபோதுங்கூட இப்பேரவையின் ஸ்தாபிதமும் அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியாகச் சாதகமாகவே முடியும். அது எவ்வாறென இனி ஆராய்வோம்.

தமிழர் பேரவை என்னும் புதிய அமைப்பின் அங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அமெரிக்க நலன் விரும்பிகளாகவே உள்ளார்கள். இதுவரையில் இலங்கைக்கு அடுத்தடுத்து விஜயம் செய்துள்ள அமெரிக்க அரச பிரதிநிதிகள் ஆளும் ஐ.தே.கவின் தலைவர்களையும் வடக்கினதும், மலையகத்தினதும் அக்கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களையும், இஸ்லாமிய அரசியலில் உள்ள அக்கட்சி நலன் சார்ந்த அரசியல்வாதிகளையும் சந்தித்து வந்திருக்கின்றார்களென்பது தெரிந்ததே. அவர்கள் இலங்கையிலுள்ள அனைத்து இனக்குழுமங்களினாலும் தெரிவுசெய்யப்பட்டிருந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார்கள். ஏனெனில் இலங்கையிலுள்ள மக்கள் குழுமங்கள் அனைத்தினராலும் இவ்வாண்டு தைத்திங்கள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும், ஆவணி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் போதும் தெரிவுசெய்யப்பட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அமெரிக்க நலன் சார்ந்தவர்களாகவே விளங்குகின்றார்கள். ஜே.வி.பி அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மிகக்குறைந்தளவு எண்ணிக்கையினரான பிரதிநிதிகளையும், வாசுதேவ நாணயக்கார அவர்களையுந் தவிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தரப்பினருக்குள்ளேயே பல அமெரிக்க நலன் விரும்பிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
எனினும் மஹிந்த ஆட்சியில் காணப்பட்ட சீன சார்பு நிலையினால் அமெரிக்க நலன்பேணும் தன்மை அக்கட்சியின் ஆட்சியில் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இந்தியாவானது மஹிந்த ஆட்சியின் சீன சார்பு போக்குத் தொடர்பிலாகவிருந்தாலுஞ் சரி, ரணில் அரசின் அமெரிக்க நலன் சம்பந்தமாகவும் சரி இலங்கை மீது அதிருப்திகொண்டதாகவே விளங்கிவருகின்றது.
தற்போது முன்னெப்போதையும் விட இலங்கையானது மிகவும் வலுவான நிலையில் அமெரிக்க முகாமாக மாறிவருவது இந்தியாவின் பாரிய வெறுப்புக்காளாகிவிடுவதால் தமிழர் தரப்புக்குள் மிகவும் வலுவான நிலையிலுள்ள அமெரிக்க சார்பு (Pro-America) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சீர்குலைத்து மைத்திரி-ரணில் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென்னும் தன்முனைப்பின் பாற்பட்டே இந்தியாவானது தமிழர் பேரவை என்னும் அமைப்பையுருவாக்கத் திறைமறைவில் சூத்திரதாரியாக விளங்கியுள்ளதென ஐயுறவேண்டியுமுள்ளது.

இந்திய மத்திய அரசு தனது நயவஞ்சகத்தனமான இந்நடவடிக்கைக்கு மஹிந்த அரசில் தேசிய மொழிகள் அமுலாக்க, சமூக நல்லிணக்க அமைச்சராகப் பதவி வகித்த வாசுதேவ நாணயக்கார அவர்களின் சம்பந்தியான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களையும், சம்பந்தன் மீதான அதிருப்தியாளர்களையுமே பயன்படுத்தியுமுள்ளது. இவ்விந்திய அரசுக்கு இலங்கை அமெரிக்க முகாமாக மாற்றமடைந்துகொண்டுவருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உருப்படியான, நடவடிக்கையெதிலுமே ஈடுபடக்கூடிய தந்திரோபாயம் எதுவுமே அற்றநிலையில் அமெரிக்க விரோதப் போக்கையும், மஹிந்த அரசில் அமைச்சர்ப் பதவி வகித்தவருமான இன்றும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியை அரியணையில் அமர்த்துவதற்காக அயராது பாடுபட்டுவருபவருமான வாசுதேவ நாணயக்கார அவர்களின் சம்பந்தியுமான வடக்கு மாகாண முதலமைச்சராக விளங்கும் இளைப்பாறிய நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை ஏட்டிக்குப் போட்டியாகச் சம்பந்தன் அவர்களை மோதவிடுவதும், அவருடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வகிபாகத்துக்கு விக்னேஸ்வரன் அவர்களைக் கொண்டுவரும் முயற்சிக்கு இந்திய உளவு ஸ்தாபனமான றோ அமைப்பினர் திரைமறைவிலிருந்து சதிமுயற்சியில் ஈடுபட்டபோதும் அம்முயற்சியானது தோல்வியடைந்த நிலையில் தமிழர் பேரவை அமைப்பை விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கி அமெரிக்காவானது இலங்கைத் தீவில் அண்மைக்காலமாக இறுகக் கூட்டிவருகின்ற இரும்புச் சங்கிலியின் இறுக்கத்தை இயன்றவரையில் தளர்த்தும் கைங்கரியத்தைப் பாரத மத்திய அரசானது கையாண்டிருப்பதையே தமிழர் பேரவை என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது உணர்த்தி நிற்கின்றது. இவ்விடத்தில் பாரத மத்திய அரசு இலங்கையின் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான பிரசன்னத்துக்கு தமிழர் தரப்பின் வடக்கின் சம்பந்தன் போன்றவர்களும், டி.எம்.சுவாமிநாதன், திருமதி.விஜயகலா மகேஸ்வரன் போன்ற அமைச்சர்களும், முற்போக்கு முகமூடியையும், தமிழ் உணர்வாளர் என்னும் கவசத்தையும் இணையற்ற பாதுகாப்பு அங்கிகளாகக்கொண்டு ஆயட்கால ஐ.தே.கவின் விசுவாசியாக இருந்துகொண்டு அமெரிக்காவினுடைய இலங்கையின் மீதான இரும்புப்பிடிக்கு மிகப்பெரியளவில் உறுதுணையாக இருந்து வருபவருமான அமைச்சர் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், முஜிபர் ரஹ்மான் போன்ற சிறுபான்மையினக் குழுமங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் மைத்திரி-ரணில் அரசுக்கு எவ்விதத்திலும் சளைக்காத நிலையில் அமெரிக்க அடிவருடிகளாக விளங்குவது தொடர்பிலான விழிப்புணர்வே இந்தியாவானது விக்னேஸ்வரனைச் சம்பந்தன் அவர்களிடமிருந்து பிரித்துக் கூட்டமைப்பிலுள்ள சம்பந்தன் அவர்களின் மீதான அதிருப்தியாளர்களோடும் மாற்றுத் தமிழ் அரசியல் குறியீடுகளுடன் இயைந்தவையுமான கட்சிகளைச் சேர்ந்த சிலருடனும் இணைந்து தமிழர் பேரவை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அமெரிக்காவின் இலங்கை மீதான குறிவைப்பைத் தளர்த்தும் இந்தியாவினுடைய நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும். இவ்விடத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு இடதுசாரி எண்ணோட்டமுள்ள பழம்பெரும் அரசியல்வாதி என்னும் கண்ணோட்டத்தில் தேசிய மொழிகள் அமுலாக்கல், சமூக நல்லிணக்க அமைச்சர் என்னும் பதவியை வழங்கி ராஜபக்ஷ அவர்கள் தமிழர் விடயத்தில் எவ்வாறு பூச்சாண்டி காட்டினாரோ அவ்வாறே ஏகாதிபத்திய – முதலாளித்துவ நலன் பேணும் கபடி அரசியல் வீரரான மனோ கணேசன் அவர்களுக்கு அதையொத்த அமைச்சர்ப்பதவி வழங்கி உழைக்கும் வர்க்கத்தினர், தமிழ் மக்கள் ஆகிய இரு தரப்பார் விடயத்திலும் ரணில் அவர்கள் பூச்சாண்டி காட்டியுமுள்ளார். இப்பூச்சாண்டி காட்டுகைகளானவை அடிப்படையில் இரு வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருந்தவையாகவிருந்தபோதும் முதலாவது பூச்சாண்டி காட்டுகையானது தமிழ் மக்களுக்கு மட்டுமே விரோதமானது. ஆனால் இரண்டாவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்குமே எதிரானதாகும்.

எனவேதான் எதிர்வரும் 08.01.2016 மைத்திரி-ரணில் அரசின் ஓராண்டு கால பூர்த்தித் தினமான உழைப்பாளர் விரோத, தமிழர் எதிர் எதேச்சாதிகார ஆட்சிக்கு, ஜே.வி.பியினரால் அன்றைய தினம் நடத்தப்படவிருக்கும் நடைப்பயணமும், பேரணியும் பேரிடியாக விளங்குவதோடு தேசத்திலுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய, பறங்கி, மலையாள ஆகிய சகல மக்கள் குழுமங்களைச் சேர்ந்தவர்களும் மேற்றரப்பட்ட இரு பூச்சாண்டி காட்டல்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையிட்டும் ஜே.வி.பியினரின் அதிருப்தியின்பாற்பட்ட ஆர்ப்பாட்டப் போராட்டத்தின் வாயிலாக அரசியல் ரீதியாக ஆழமான படிப்பினைபெற்று இப்படிப்பினையானது நாட்டின் கிராமங்கள்-குக்கிராமங்கள் உள்ளிட்ட மூலை முடுக்கெல்லாம் தென்றலென வீசிப் புயலெனப் பரவவேண்டுமென நாட்டின் நல்லோர் ஆதங்கப்படும் நிலையுண்டெனச் சுட்டிக்காட்டவேண்டிய நிலையுள்ளது.
வீரப்பதி விநோதன்

SHARE