இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இருவேறுபட்ட துருவங்களாக விளங்கித் தமக்குள் பகைமை பாராட்டிச் சிங்கள மக்களிடம் வாக்குகளைப்பெற்று மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய இருபெரும் அரசியல் கட்சிகள் முதற்றடவையாக இவ்வருடம் தைமாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் அடுத்ததாகக் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற நடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போதும் என்றுமேயில்லாதவாறு இரு கட்சிகளினதும் ஓரு பகுதியினர் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டதோடு இரு தேர்தல்களின்போதும் ஐ.தே.க கட்சியே அதிகாரத்தைக்கைப்பற்றியுமிருந்தது.
கடந்த ஆவணித் திங்கள் 17ஆம் நாள் இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போது ஐ.தே.க கட்சிக் கூட்டமைப்பானது வெற்றிவாகை சூடி ஆட்சி பீடமேறியமையும், அதன் பின்னர் அக் கூட்டமைப்பு ஆட்சியானது தன்னைத் தளராது தக்கவைத்துக்கொள்ளும் தந்திரோபாயத்தின்பாற்பட்டு கூட்டு அரசாங்கம் என்னும் மாயமானைக் கட்டவிழ்த்துவிட்டுப் பூச்சாண்டியும் காட்டியமை தெரிந்ததே. அப் பூச்சாண்டியானது இன்றுவரை நின்று நிலைத்திருப்பதும் நாட்டின் தேசியப் பிரச்சினையும், இன நெருக்கடியும் தொடர்ந்தும் நீடித்திருப்பதுந் தெரிந்ததே.
இலங்கையின் தற்போதைய இவ்வரசியல் கள அமைவில் கூட்டாட்சியானது யாப்பு மாற்றும் என்னும் புதியதொரு பூச்சாண்டியையும் காட்டுவதற்கு முயல்கின்றது. மேலும் இந்த யாப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனைகள் வழங்குவதற்குத் தனது சர்வதேச நேச சக்திகளின் பங்களிப்பையும் மைத்திரி-ரணில் அரசானது நாடி நிற்கின்றது. தனது குருவான அமெரிக்காவையும், இந்திய மேலாதிக்கத்தையும் ஏனைய வல்லரசு நாடுகளையும் வளைத்துப் பிடித்து அந்நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை நியமித்து யாப்பு மாற்றத்தை அரங்கேற்ற நினைக்கும் இக்கூட்டு அரசாங்கத்தின் முயற்சி தேசத்தின் தேசியப் பிரச்சினையிலும் இன முறுகலிலும் எவ்வாறான தாக்கத்தையேற்படுத்துமென்பதை ஆய்ந்து அறிதல் தேச நலனிலும் தமிழ்பேசும் மக்களின் நலனிலும் பாலான பெரும் கரிசனையின்பாற்பட்டவொன்றென்பது மிகைப்பட்ட கூற்றல்ல.
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பிலான ஆலோசனைகளைப் பெறுவதற்கு இலங்கைத் தீவை வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்குத் திறந்துவிடுகின்றமை எத்தகைய பின்விளைவுகளைத் தோற்றுவிக்குமென்பதையும் ஆழந்து நோக்குதல் சாலவும் இன்றியமையாதவொன்றாகும்.
தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் அடுத்த கட்டச்சதி முயற்சியாகவே அரசியல் யாப்பு மாற்றம் விளங்குகின்றதெனலாம். அரசாங்கமானது இந்த யாப்பு மாற்றத்துக்கு அந்நிய தேசங்களின் அபிப்பிராயங்களை நாடவிருப்பதோடு, அந்நாடுகளின் பிரதிநிதிகளை நாட்டுக்கு வரவிழைக்கவிருப்பதாகவும் அறிவித்துமுள்ளது. அரசின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் இப்பிரசன்னம் தொடர்பிலானதும், யாப்பின் வரைவிற்கு அப்பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களை எதிர்நோக்கியிருப்பதும் தேச நலன்கள், தமிழ் மக்கள் பயன்கள் என்பவை தொடர்பில் பாதகமானதும் அபத்தமானதுமான விளைவுகளையே விதைக்கும்.
எனவே அரசாங்கமானது வெளிநாடுகளின் பிரதிநிதிகளுடைய யாப்பு வரைபு தொடர்பிலான அபிப்பிராயங்களைப் பெறுவது தொடர்பில் அந்நாடுகளின் பிரதிநிதிகளைத் தீவுக்கு வரவழைக்கும் விடயத்தில் தனது மிகுந்த விசுவாசம் மிக்க அமெரிக்காவுக்கே முதலிடம் வழங்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதன் தொடர்ச்சியாகக் கூட்டு அரசாங்கமானது மேற்கத்தைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், யப்பான் போன்ற மிதவாதப் போக்குடைய தேசங்களினதும், தென்னாசிய தென்கிழக்காசிய நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கும் புதிய அரசியல் யாப்பு வரைபு தொடர்பிலான ஆலோசனைகளைப் பெறுவதற்காக அழைப்புக்களை அபாரமாக அனுப்பிவைக்குமென்பதே திண்ணமாகும்.
ஏற்கனவே அமெரிக்க அரச பிரதிநிதிகள் தேசத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து தமது புதிய உலகமயமாக்கல் என்னும் கோரமான பெரும் பசிக்குத் தீனியாக இலங்கைத் தீவைக் கையகப்படுத்துவதற்குத் தீவில் தொடர்ந்தும் இழுபறிப்பட்டு வருவதும், பெருஞ் சாபக்கேடாக விளங்குவதுமான தேசிய சிறுபான்மையினப் பிரச்சினையைக் கச்சிதமாகப் பயன்படுத்தித் தீவு முழுவதையுமே கபளீகரம் செய்யும் கயமைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டமை தெரிந்ததே.
அண்மையில் ஒருமாத காலத்திலேயே அமெரிக்க தேசத்திலிந்து தொடர்ச்சியாக ஆறு பிரதிநிதிகள் வருகை தந்து அசத்தலான சாதனையை நிலைநாட்டியமையையும் ஆழ்ந்து ஆராய்வது மைத்திரி-ரணில் அரசின் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தின் அதியுச்சக்கட்டப் பிரதிபலிப்பேயெனலாம்.
அடுத்து இலங்கையரசின் அசாதாரணமான இவ்வமெரிக்க சார்பு சுபாவத்தை ஜீரணிக்க முடியாத இந்தியாவானது தனது உளவுப்பிரிவான றோ அமைப்பின் மூலம் வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளைப் பிளவுபடுத்தி ஒரு தளம்பல் நிலையையுருவாக்கி இலங்கை அரசின் மீது தனது வெறுப்புணர்வையும் நிலைநாட்ட ஆரம்பித்திருக்கின்றது.
ஆதலால் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கும் விடயத்தில் இலங்கை அரசானது அமெரிக்கப் பிரதிநிதிகள் உள்ளடங்கலான அகிலத்திலுள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் உள்ளடக்குவது தொடர்பில் இந்தியாவும் அடங்குகின்றது. இக் காரணத்தினால் இலங்கை அரசானது அமெரிக்காவுடன் இந்தியப் பிரதிநிதிகளையும் அழைக்கவிருப்பதால் சிக்கல் வாய்ந்த தோற்றப்பாடொன்று இலங்கைத் தீவில் மையங்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
அமெரிக்காவின் மீதான இலங்கையின் மைத்திரி-ரணில் அரசுக்கு அண்மைக்காலமாக இருந்துவரும் அசாதாரணமான ஈடுபாடு தொடர்பில் அவ்வரசின்மீது வெறுப்படைந்துள்ள இந்திய மத்திய அரசானது தமிழகத்திலுள்ள தேசிய உணர்வின்பாற்பட்ட தமிழ் உணர்வுமிகு அரசியல்வாதிகளோடு இணைந்து மேற்கொண்ட சதிமுயற்சியின் அங்கமெனப் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவை தொடர்பில் சந்தேகம் வெளியிடுபவர்களும் உளர். உண்மை எதுவாகவிருந்தபோதுங்கூட இப்பேரவையின் உருவாக்கம் தேர்தலில் தோல்வியடைந்தவர்களினதும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களினதும் ஆற்றாமையின் பாற்பட்டவொன்றென மட்டுங் கருதிவிடமுடியாது. ஏனெனில் மக்களால் நிராகரிக்கப்பட்டுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் முன்னெப்போதும் இல்லாது தற்போது மட்டுந்தான் புதிதாக முளைவிட்டுள்ள அதிசயப்பிறவிகளா? என்னும் வினாவும் இவ்விடயத்தில் தொக்கு நிற்கின்றது. இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நகர்வின்போதான காலவோட்டத்தில் ஒருநேரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் இன்னொருபோது அதே மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் ஒருபோது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்னொரு நேரம் அதே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதே நிதர்சனமாகும். எனவே வழமையான ஒரு விடயத்தைப் பெரிதுபடுத்திப் பேரவை தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட விரக்தியடைந்த சக்திகளினால் மட்டுமே உருவாக்கப்பட்டன எனத் தப்பித்துக்கொள்ள முயலாமல் இப்பேரவையின் உருவாக்கத்தின்போது அங்கத்துவம் தேர்தலில் தோல்வியடைந்தவர்களின் அதிகமானோருக்கு வழங்கப்பட்டபோதுங்கூட அதன் தலைவராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன் அவர்களும், அதன் பின்னணியும் சாதாரணமாகக் கருதப்படக்கூடியவொன்றல்ல. மேலும் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இராஜதந்திரக் காய்நகர்த்தலின் பிரகாரம் நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன் அவர்கள் மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது வடக்கு கிழக்கின் போராளிகளும், பொதுமக்களும் இன்னல்கள், இடர்பாடுகள் என்பவற்றிலிருந்து மிக வெகுதூரத்தில் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே வாழ்ந்து வந்திருப்பார்.
இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசரான விக்னேஸ்வரன் அவர்கள் முப்பது வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்களைத் தாங்கமுடியாமல் வடபுலத்து மக்களும், இளையோரும் அல்லற்பட்டு அழுது புலம்பியபோது அவ்வழுகுரல் அவருடைய செவிப்பறைகளைச் சிறிதளவேனும் தாக்கமுடியாத வெகுதொலைவிலே கொழும்புக் கனவானாகவே வாழ்க்கையை நடத்தியிருந்தார்.
எனவே இப்பின்னணியில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் பேரவை, அமெரிக்காவின் புதிய உலக மயமாக்கல் என்னும் கோட்பாட்டுக்கு இலங்கையைத் தாரைவார்க்கும் மைத்திரி-ரணில் அரசினதும், வடக்கின் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், திருமதி.விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரினதும், மனோ கணேசன், முஜிபர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் முதலானோரினதும் அயரா முயற்சிகளுக்குச் சம்பந்தன் அவர்கள் அளிக்கும் பங்களிப்பைவிட மிகவும் வலுவான பங்களிப்பையே வழங்குமென்பது வெள்ளிடைமலை.
இப்பேரவையின் உருவாக்கத்தோடு கூட்டு அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பின் வரைபு தொடர்பிலும் இணைந்த ஆய்வானது பயனுள்ளவொன்றாகவே விளங்கும். இச் சந்தர்ப்பத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி என்னுந் தர வரசையிலே புதிதாகத் தமிழ் முற்போக்கு அணி என்னும் புதிய கட்சியொன்றையுருவாக்கி தனது அரசியல் வாழ்விலே ஐக்கிய தேசியக் கட்சியிலேயே முதன்முதலாகப் போட்டியிட்டு நாடாளுமன்றஞ் சென்ற மனோ கணேசன் அவர்கள் மூன்று தமிழர், முற்போக்குக் குறியீடுகளைக்கொண்ட (உழைப்பாளர்) கட்சிகளைக் கட்டமைத்துக் கதாநாயகனாக வலம்வந்தபோதுங்கூடக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டுக் கொழும்பு மாவட்டத்தில் வெற்றியீட்டியதோடு அமைச்சருமானார். நீலக்கட்சி ஆட்சியின் போது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இடதுசாரி முகமூடி ஒன்றை மட்டும் அணிந்திருந்த வாசுதேவ நாணயக்கார அவர்களுக்குத் தேசிய மொழிகள் அமுலாக்கல் சமூக நல்லிணக்க அமைச்சர்ப் பதவி வழங்கிப் பூச்சாண்டி காட்டியதற்கு ஒப்பாகத் தற்போதைய மைத்திரி-ரணில் அரசானது மனோ கணேசன் அவர்களுக்கும் அதே பாணியிலான அமைச்சர்ப் பதவிகளை வழங்கிப் பூச்சாண்டி காட்டியுமுள்ளது. மஹிந்த அவர்கள் இடதுசாரி முகமூடியொன்றை மட்டும் பயன்படுத்தி வாசுதேவ நாணயக்கார அவர்கள் மூலம் தமிழ் மக்களை ஏமாளிகளாக்கித் தனது ஆட்சியைக்கொண்டு நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய மைத்திரி-ரணில் அரசோ முற்போக்கு, தமிழர் காவலர் என்னும் இரு முகமூடிகளைத் தன்னகத்தேகொண்டு கபடியாடிவரும் மனோகணேசன் அவர்களை அமைச்சராக்கித் தமிழ் மக்களை ஏமாளிகளாக்கித் தனது ஆட்சியைக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கின்றது. மஹிந்த ஆட்சியின்போது தமிழர் தொடர்பில் காதிலே பூ சுற்றும் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட வாசுதேவ நாணயக்கார அவர்கள் உண்மையில் அனுதாபத்துக்குரியவர். ஏனெனில் சிங்களவரான அவர் நீண்டகாலமாக இடதுசாரி அரசியலில் நெறி பிறழாது நின்று இரு தரப்பிலுள்ள நல்லோர்களின் நன்மதிப்புக்கும் வாஞ்சைக்கும் இலக்கானவர்.
1970ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய ஸ்ரீமாவோ அம்மையார் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்த லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா அக்கட்சியின் முன்னணிப் பிரமுகர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா உள்ளடங்கலான 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்னாரும் ஒருவராக விளங்கினார்.
1971ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட கம்யூனிசநெறி நாடிய ஆயுதக்கிளர்ச்சியின் போது ஐக்கிய முன்னணி சார்ந்த ல.ச.ச.கட்சியின் சார்பான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அன்னார் விளங்கியபோதுங்கூட அக்கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வேறுபட்டவராக அவரை இனங்கண்ட அன்றைய ஆட்சித் தலைவி திருமதி.பண்டாரநாயக்க அவர்கள் அவரைச் சிறையிலிட்டமையுந் தெரிந்ததே. இதன் பின்னர் ல.ச.ச.கட்சியின் தமிழர் விரோதப் போக்கினால் அக்கட்சியின் மீது அதிருப்திகொண்டு நவ சமசமாஜக் கட்சியென்னும் புதிய அரசியல் கட்சியொன்றைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் விளங்கி இடதுசாரித்துவ அரசியல் முகாமுக்குள் எட்மண்ட் சமரக்கொடி அவர்களுக்குப் பின்னர் நேர்மை காத்துநின்ற நல்லவர் என்னும் நற்பெயரையுந் தட்டிக்கொண்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலின்போதும் தனித்துநின்று போட்டியிட்ட நாணயக்கார அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். பருத்தித்துறையில் இடம்பெற்றிருந்த பிரச்சாரக் கூட்டமொன்றில் அன்றைய காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் முகிழ்ப்பின்பாற்பட்டுத் தமிழ் இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட ஆரம்பித்திருந்தமையோடு அன்னாரின் நன்னோக்கத்தினால் கவரப்பட்டிருந்தமையால் அப்பொதுக்கூட்டத்தில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டந்தொடர்பில் அவரிடம் அபிப்பிராயங்கேட்டு ஆவலோடு நின்றபோது நாம் ஆட்சிக்கு வராதவரையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டந் தொடர்பில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனையுங் கிடையாது. அதற்குப் பதிலாக நாம் அப்போராட்டத்தின் மீது அனுதாபங்கொண்டவர்களாகவே விளங்குவோம் எனக்கூறிச் சீர்பெற்றும் நின்றார். அத்தோடு அவர் நல்லூர்க் கந்தசாமி கோவில் முன்றலில் தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தபோது அங்கு சமுகமளித்துத் தனது உண்மையான உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியும் நின்றார். எனினும் துரதிட்டவசமாகப் பின்னாளில் அன்னார் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்கு அனுசரனையாக விளங்க ஆரம்பித்ததிலிருந்து அவரும் முன்னவர்கள் பலரைப்போலவே தான் கடந்துவந்த இடதுசாரி அரசியல் பாதையிலிருந்து தடம்புரண்டு தடுமாற ஆரம்பித்தார். இத்தடுமாற்றம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய ஆட்சியின்போது அமைச்சர்ப் பதவி வகித்தமையிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
வாசு அவர்களின் தடம் புரள்வும் தடுமாற்றமும் ஒருபுறமிருக்க நாம் தற்போதைய ஐ.தே.க ஆட்சியின் கதாநாயகனும், தமிழர் காவலர் எனவும், உழைப்பாளர் தோழர் என்றும் ஒருசேர ஏத்தப்படும் கௌரவ அமைச்சர் மனோகணேசன் அவர்களின் கதாநாயகக் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்தத்தையும், பல்வேறு முக பாவனைகளோடு இயைந்த அதன் கன கச்சிதமான அபிநயங்கள் அனைத்தையும் விலாவாரியாக ஆய்வுசெய்வதைத் தவிர்த்து மைத்திரி-ரணில் அரசின் புதிய யாப்பு தொடர்பிலான கபடியாட்டத்துக்கு இந்நபர் மிகவும் துரித கதியில் பச்சைக்கொடி காட்டி வரவேற்றிருப்பதோடு அந்த யாப்புத் தொடர்பில் தான் ஏதோ பெரிதாகச் சாதிக்கப்போவதாகப் பிதற்றியுமுள்ளார்.
உண்மையில் இந்நபர் தமிழர் விரோத தொழிலாளர் எதிர் சாட்சாத் ஐ.தே.க கட்சியின் தாஷரேயாவார். வடக்கின் சுவாமிநாதன், விஜயகலா, இஸ்லாமிய ரவூப் ஹக்கீம், முஜிபர் ரஹ்மான் ஆகியோரைவிடவே இப்பிறவி பச்சைக் கட்சியின்மீது மிகுந்த விசுவாசமிக்க தமிழ்த் துரோகியும் தொழிலாளர் விரோதியுமாவார். இந்நபரின் தமிழர் காவலர் உழைப்பாளர் தோழர் என்னும் உண்மைக்கு மாறான, அரசியல் அர்த்தத்துக்கு பெரும் அனர்த்தத்தை விளைவிக்கக்கூடிய அருவருப்பான முகமூடிகளைக் கிழித்தெறிந்து இந்நபரின் சுயரூபத்தை உடன் அம்பலப்படுத்தத் தவறின் தற்போது இப்பிறவியினால் பச்சைக்கொடி வரவேற்பளிக்கப்பட்டிருக்கும். அரசியல் யாப்பு மாற்றத்துக்கு இவர் அட்டகாசமாக வழங்க இருக்கும் பங்களிப்பானது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் வயிற்றில் ஓங்கி அடிப்பதற்கும் முழுத் தமிழினத்தின் மீதும் பிணைக்கப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியின் இறுக்கமானது மேலும் வலுப்பெறுவதற்குமாகச் சேர்த்துப் பச்சைக்கொடி காட்டுவதாகவுமே அமையும்.
எனவே அரசியல் யாப்பு மாற்றம் என்னும் ரணில் அரசின் மேலுமொரு சதி முயற்சிக்கு இம் மனிதர் காட்டியிருக்கும் பச்சைக்கொடி இலங்கையிலுள்ள உழைக்கும் மக்கள் மீதும் அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதும் ஐ.தே.க ஆட்சியதிகாரமானது சவாரி விடுவதற்கு வழிவகுப்பது மட்டுமல்ல இந்திய நில விஸ்தரிப்புவாதிகள், மேற்கத்தைய நல காலனித்துவவாதிகள், பாகிஸ்தான்-பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய மதப்பரம்பல் விரும்பிகள், ஜப்பானிய தொழில் விஸ்தரிப்புவாதிகள், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் போன்ற அனைத்து வல்லாதிக்க சக்திகளும் இலங்கையைச் சூறையாடுவதற்கும், தமிழ் மக்களைப் பூண்டோடு இல்லாதொழிப்பதற்குமே வழிவகுக்குமென்பதை இடித்துரைப்பது காலத்தின் மிக இன்றியமையாத தேவையாகவுமுள்ளது.
கருணைக்கண்ணன்