‘ஜி – 7’ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிர்ப்பு: மறுநாள் நடந்த ‘டி – டே’ கொண்டாட்டத்தில் சகஜம்  

489

 

பாரீஸ்: உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போரை தூண்டி விடுவதாக கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, ‘ஜி – 7’ மாநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு, அமெரிக்கா உட்பட பல நாடுகள், ரஷ்யாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த போதிலும், பிரான்சின் நார்மாண்டியில் நேற்று நடைபெற்ற, ‘டி – டே’ கொண்டாட்டங்களில், புடினுடன் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

மோதல்:

‘சோவியத் ரஷ்யா’ என்ற பெயரில் கூட்டாக இருந்த நாடுகள் பல, 1991ல், பிரிந்தன. அவற்றில் ஒன்று, ரஷ்யாவுக்கு அருகில் உள்ள உக்ரைன். இதனால், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு மாகாணமான கிரிமியாவை, இரு மாதங்களுக்கு முன், ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியதை, ரஷ்ய அதிபர் புடின் கண்டுகொள்ளவில்லை. மேலும், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியை ரஷ்யா தூண்டிவிடுவதாக, இந்த நாடுகள் கருதின. அதற்கு ஏற்ப, அந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக, பயங்கர சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் அரசு படைகளுக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்; அவர்களுக்கு ரஷ்யா, ஆயுத உதவி வழங்கி வருகிறது; சண்டை நீடிக்கிறது. இதனால், வளர்ந்த ஏழு நாடுகளின் அமைப்பான, ‘ஜி – 7’ மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த, 20 ஆண்டுகளில் இப்போது தான், ரஷ்யா முதல் முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று முன்தினம் துவங்கிய இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டோ போன்றோர், வெளிப்படையாகவே, புடினுக்கு மிரட்டல் விடுத்தனர். ‘உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வரும் ஆதரவை ரஷ்யா கைவிட வேண்டும். இல்லையேல், அந்நாட்டின் மீது, வரும் வாரங்களில், பொருளாதார தடை விதிக்கப்படும்’ என, அந்நாடுகள் எச்சரித்தன.

இரண்டாம் உலகப் போர்:

‘ஜி – 7’ நாடுகள் அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவிலேயே, பிரான்சின், நார்மாண்டி என்ற இடத்திற்கு சென்றனர். இரண்டாம் உலகப் போரின் போது, இங்கிலாந்து தலைமையிலான நேச நாடுகள், 1944, ஜூன் 6ல், நார்மாண்டி மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த ஜெர்மன் சர்வாதிகாரி, ஹிட்லரின் படைகளை தோற்கடித்து, உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன், 70ம் நினைவு தினம், டி – டே என, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் புடினும் கலந்து கொண்டார். ஜி – 7 மாநாட்டில் அவரை எதிர்த்து, கடுமையாக பேசிய நாடுகளின் தலைவர்கள், இந்த நிகழ்ச்சியில், அத்தகைய முறையில் நடந்து கொள்ளாமல், புடினுடன் சகஜமாக பேசி உறவாடினர். பிரிட்டன் பிரதமர் கேமரூன், பிரான்ஸ் அதிபர் ஹாலந்டே போன்றோர், புடினுடன் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அது போல், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

ரஷ்யாவுக்கு ஆஸி., ஆதரவு:

‘ஜி – 7 மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாலும், அதை புடின் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், விரைவில் நடைபெற உள்ள, ‘ஜி – 20′ மாநாட்டில் அவர் கண்டிப்பாக அழைக்கப்படுவார்; அவரும் தயக்கம் இல்லாமல், அதில் கலந்து கொள்ள வேண்டும்’ என, வளர்ந்த, 20 நாடுகளின், அந்த மாநாட்டை நடத்தும், ஆஸ்திரேலியா நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் விடுத்தார்.

SHARE