போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம் மிகமுக்கியமானது!- சிறிதரன் பா.உ.

732
கிளிநொச்சி பளை பிரதேச வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை அண்மையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் நடத்தி இருந்தார்.

பளை பிரதேச த.தே கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பளை பிரதேசசபை உறுப்பினர்களான சுரேன் வீரவாகுதேவர் கலந்துகொண்டனர்.

பளை பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் வர்த்தகர்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் கலந்துரையாடலை மேற்கொண்டு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்

எப்போதும் போரால் பாதிப்பட்ட பிரதேசங்களில் பளை பிரதேசம் மிகமுக்கியமானது. பளை போரின் முனையாக அன்றி பெரும் போர்ககளமாகவே மாறி சிதிலமடைந்து போனது வரலாறு.

இந்த மக்கள் எப்போதும் அகதிகளாகவே அண்டைய ஊர்களில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். தற்போது பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் உருவாகும் பளை மக்களின் வாழ்வு இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதை உணர முடிகின்றது.

முன்பொரு காலத்தில் பளை நகரம் பிரசித்தமானது. ஏராளம் பேருந்துகளும் மக்களும் இளைப்பாறி உண்டு பயணத்தை தொடரும் நகராக இருந்தது. வர்த்தகர்களை பொறுத்தமட்டில் அக்காலம் பொற்காலமாக இருந்தது.

ஆனால் இன்று அந்த நிலை இல்லை. கட்டிடங்கள் புதிது புதிதாய் முளைத்துள்ள போதும் அதற்குள் இயங்கும் வர்த்தகம் போதிய வருமானமின்றி இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்னொரு புறத்தில் வேறு இடங்களில் இருந்து பெரும் முதலாளிகளின் வியாபாரங்களால் இந்த மக்களையும் இந்த நகரைத்தையும் நம்பி இருக்கும் வியாபாரிகளின் நிலை கவலை தோய்ந்ததாகவே இருக்கின்றது.

அதனால் இங்கு இந்த பளை பிரதேசத்தை நிர்வகிக்கும் நிர்வாக மையங்கள் இந்த பிரதேசத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து தம் சொத்துக்களையும் உயிரையும் இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விடயங்களிலும் முன்னுரிமை அளிக்கின்ற நிலை உருவாக வேண்டும். அது பலரின் வாழ்வில் ஒளியேற்றுவதாய் அமையும்.

இன்றைக்கு இந்த பிரதேசத்தில் பலநூறு ஏக்கர் நிலம் இராணுவத்தாலும் மற்றும் எங்கிருந்தோ முளைத்துள்ளவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு மெல்ல மெல்ல இந்த மக்களின் பூர்வீகம் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றது.

காலம் காலமாக வாழ்ந்து வந்தவர்களின் ஊர் என்ற நிலையை மாற்றி இன விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு காரியங்கள் பல்வேறு வடிவில் எமது மண்ணில் நடந்தேறுகின்றன.

அதனால் வல்லமையுடன் இந்த ஊர்களில் சவால்களை எதிர்கொண்டு தீர்வுகாண வேண்டும். அதற்காக உரிய தரப்புகளுடன் நாம் பேசுவோம்.

எதிர்காலத்தில் சொந்த ஊர்களில் நிறைந்த வருமானத்துடன் தொழில் செய்யும் நிலையை உருவாக்க செயற்றிட்டங்களை வகுப்போம் என தெரிவித்தார்.

 

SHARE