பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
யுத்த காலத்தின் போது அவர்கள் இருவரும் அரசாங்கத் தரப்புக்கு அத்தியாவசிய தேவைகளாக இருந்தார்கள்.
குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தந்திரோபாயங்கள், தாக்குதல் வியூகங்கள் மற்றும் பலப்பிரதேசங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்காக, ஐரோப்பிய நாடு ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த கருணா அம்மானை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அழைத்திருந்தார்.
அவர்கள் மேற்கொண்ட காட்டிக் கொடுப்புகளுக்கு பிரதி உபகாரமாக பிரதி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.
ஆனால் தற்போது அவர்கள் அரசாங்கத்துக்கு மேலதிக சுமையாக காணப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டிருந்த சிறுவர் போராளிகளை கொண்டிருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
மேலும் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வரவேற்றிருந்தது.
ஆனால் கருணா அம்மான் தொடர்பில் அரசாங்கம் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட்ட நிலை உறுப்பினர்களாக இருந்த அவர்களுக்கு எதிராக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் அதிக அளவான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசாங்கம் கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.