அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது

491
சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திடமிருந்து இந்த அபு சய்யாப் தீவிரவாத இயக்கம் நிதி உதவி பெற்று வந்துள்ளது. அதில் காயிர் முண்டோசுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த காயிர் முண்டோஸ் வெடிகுண்டு தயாரிப்பதில் மன்னனாகத் திகழ்ந்தவர்.

இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக்கொடுத்தால் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 3 கோடி) தரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

இவரது அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தை அமெரிக்கா தீவிரவாத இயக்கமாக அறிவித்ததுடன், பிலிப்பைன்சில் அமெரிக்க படை வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் இவர்தான் காரணம் எனவும் அறிவித்திருந்தது.

இந்த தீவிரவாதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே வைத்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் கூட்டாக நேற்று காலை கைது செய்தனர். பல்வேறு குண்டுவெடிப்புகள், ஆட்கடத்தல் வழக்குகளில் பிலிப்பைன்ஸ் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் சிக்கினார்.

அவர் எதற்காக மணிலா வந்தார் என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை. நாசவேலை ஏதாவது நடத்த வந்தபோது அகப்பட்டுக்கொண்டாரா என்பதுவும் விசாரணையில் உள்ளது.

இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஒருமுறை பிலிப்பைன்சில் கைதானார். ஆனால் 2007-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிவிட்டார். இவரை உயிரோடு பிடிக்க துப்பு தருவோருக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 400 பிலிப்பைன்ஸ் டாலர் வழங்கப்படும் என அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது.

முண்டோஸ் கைது பற்றி பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் எட்வட்டோ ஆனோ கூறுகையில், “முண்டோஸ் கைது செய்யப்பட்டிருப்பது அவரது அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்துக்கு பலத்த அடியாகும். இவர் அந்த இயக்கத்தின் தளபதியாக, நிதி, தளவாடங்களின் தலைவராகவும் திகழ்ந்தார்” என கூறினார்.

முண்டோஸ் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 4 துப்பாக்கிகள், இந்தோனேஷிய தீவிரவாத அமைப்பு ஒன்றின் பயிற்சி ஏடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

SHARE