ஒருநாள் போட்டி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றது

559
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது போட்டி வருகிற 15-ந் தேதியும், 2-வது போட்டி 17-ந் தேதியும், கடைசி போட்டி 19-ந் தேதியும் மிர்புரில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் கேப்டன் டோனி, துணைகேப்டன் விராட்கோலி, அஸ்வின், ரோகித்ஷர்மா, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ்ரெய்னா இதுவரை 9 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதில் இந்திய அணி 4 ஆட்டத்தில் வெற்றியும், 5 ஆட்டத்தில் தோல்வியும் கண்டு இருக்கிறது.

முஷ்பிகுர் ரம் தலைமையிலான வங்காளதேச அணிக்கு எதிராக களம் காணும் இந்திய ஒருநாள் போட்டி அணி விவரம் வருமாறு:-

சுரேஷ்ரெய்னா (கேப்டன்), ராபின் உத்தப்பா, ரஹானே, புஜாரா, அம்பத்தி ராயுடு, மனோஜ்திவாரி, கேதர் ஜாதவ், விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்ஷர் பட்டேல், வினய்குமார், உமேஷ்யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மொகித்ஷர்மா, அமித்மிஸ்ரா.

இந்த தொடரை இந்தியாவில் ஒளிபரப்ப டெலிவிஷன் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. வங்காளதேசத்திற்கு டி.வி.யில் ஒளிபரப்பும் உரிமம் பெற்றிருக்கும் காஜி சேனல், இந்தியாவில் போட்டியை ஒளிபரப்பு செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனியை அணுகியது.

இதில் மூன்று ஆட்டத்தை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரூ.5 கோடி மட்டுமே தருவதாக கூறியதாம். இது மிகவும் குறைவான தொகை என்பதால் காஜி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

சோனி சிக்ஸ் சேனல், உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதில் தீவிரமாக உள்ளது. எனவே போட்டித் தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம் தான்.

SHARE