ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மரத்தொழிலில் ஆண்டுதோறும் அந்நாட்டு பணமதிப்பில் 22 பில்லியன் டாலர் வருமானம் பெறப்படுகின்றது. இதில் 8 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பாக மாறுகின்றது. மேலும் 66,000 பேர் இந்தத் தொழிலினால் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். ஒரு அரசாங்கமாகவும், மக்களின் கூட்டணியாகவும் தாங்கள் பாரம்பரியத்தளங்கள் என்ற பெயரில் மேலும் காடுகள் அடைபட்டுப் போவதை விரும்பவில்லை என்று பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
புதிய அரசு குறிப்பிடும் பகுதிகளில் 8.6 சதவிகிதம் தவிர மற்றவை பாரம்பரிய மழைக்காடுகள் என்று கூறும் காடுகள் பராமரிப்பு சமூகத்தின் தலைவர் விகா பெய்லி, ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதிகளை விலக்கிக் கொள்ளுமாறு அபோட் வலியுறுத்துவதன் மூலம் உலக பாரம்பரியம் என்ற கருத்தையே எதிர்க்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்.
கடந்த டிசம்பரில் நிலக்கரி துறைமுக விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் கழிவுகளை பவளப் பாறைகளுக்கு அருகில் கொட்டி அரசு சமன்படுத்துவதால் யுனெஸ்கோ அந்தப் பகுதியையே அபாயம் உள்ள பாரம்பரியத்தளமாக அறிவிப்பது குறித்து யோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுவரும் புதிய ஆர்ப்பாட்டம் குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.