முன்னாள் காதலருக்கு எதிராக புகார்: பூகம்பத்தை கிளப்பிய பிரீத்தி ஜிந்தா

561

குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்… எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள்.

பஞ்சாப் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விடும்போதும் மைதானத்தில் இருக்கும் கேமராக்கள் அதனை படம் பிடிக்கிறதோ இல்லையோ… நிச்சயம் பிரீத்தியின் பக்கம் திரும்பி அவரது உணர்ச்சிகரமான துள்ளல் கொண்டாட்டங்களை பதிவு செய்ய தவறுவ தில்லை.

அந்த அளவுக்கு ஐ.பி.எல். சீசனில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தவிர்க்க முடியாத உற்சாக நட்சத்திரமாகவே வலம் வந்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா.

தற்போது நடந்து முடிந்துள்ள 7–வது ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணியின், ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. நிச்சயம் இந்த அணிதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக பைனலில் கொல்கத்தாவிடம் பஞ்சாப் தோற்றுப் போனது. அதே நேரத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் பெரிய அளவில் பஞ்சாப் அணி சாதிக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து அணியை வழிநடத்திச் சென்ற பெருமை பிரீத்தியையே சேரும்.

மணிரத்னத்தின் தில்சே (தமிழில் உயிரே) படத்தின் மூலம் அறிமுகமான பிரீத்தி, இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். ஐ.பி.எல். போட்டிகள் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தன.

இந்நிலையில் தனது முன்னாள் காதலரும், பஞ்சாப் அணியின் பங்கு தாரருமான பாம்பே டையிங் அதிபர் நெஸ்வாடியா மீது பிரீத்தி ஜிந்தா அளித்திருக்கும் செக்ஸ் புகார் ஐ.பி.எல். கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 30–ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை– பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது நெஸ்வாடியாவால் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து மும்பை மரைன் டிரைவ் போலீஸ் நிலையத்தில் பிரீத்தி கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளாக எங்களுக்கிடையே இருந்த உறவு சிறிது காலத்துக்கு முன்னர் பிரிந்து போனது. இதன் பின்னர் தொழில் சம்பந்தமாக மட்டுமே 2 பேரும் பேசி வந்தோம். இந்நிலையில் பெங்களூரில் ஐ.பி.எல். அணி ஏலத்தின்போது என்னை அருகில் அமரச் சொல்லி நெஸ்வாடியா வற்புறுத்தினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்த போது அவர் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார். என்னிடம் ஒப்பிடும் போது நீ ஒன்றுமே கிடையாது என்று அவமதிக்கும் வகையில் பேசிய அவரை நான் எச்சரித்தேன்.

இந்நிலையில்தான் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து என்னை நெஸ் வாடியா மீண்டும் மிரட்டினார். நான் சக்தி வாய்ந்த பிரபலம். நீ சாதாரண நடிகை தானே. நான் நினைத்தால் உன்னை காணாமல் போகச் செய்துவிடுவேன் என்று கூறிய அவர், பாலியல் ரீதியாகவும் எனக்கு தொல்லை கொடுத்தார்.

இச்சம்பவம் என்னை அடித்துப் போட்டது போல இருந்தது. எனது உயிர் மீது அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டது. ஒரு பெண் என்ற முறையில் இதனை பாதுகாப்பற்றதாக உணரும், நான் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை விரிவாக விவரித்துள்ளார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இந்த சிரிப்பழகியின் இன்னொரு முகம் இவ்வளவு சோகமயமாக இருந்திருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.

ஐ.பி.எல். நிர்வாகிகள் மத்தியில் மட்டுமின்றி, சினிமா உலகிலும், பிரீத்தியின் ரசிகர்கள் மத்தியிலும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரீத்தியின் புகார் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானபங்கப்படுத்துதல், அவமதித்தல், மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் நெஸ்வாடியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஆதாரங்களை திரட்டி வரும் போலீசார் வான்கடே மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப்பார்த்து விசாரித்து வருகிறார்கள். பிரீத்தியின் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் தொழில் அதிபர் நெஸ்வாடியா, சிறையில் தள்ளப்படுவது உறுதி.

ஊழல்…. சூதாட்டம் என சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிரீத்தியின் செக்ஸ் புகார் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே பிரீத்தி ஜிந்தாவின் புகாரை அடியோடு மறுத்துள்ளார் நெஸ்வாடியா.

எனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பிரீத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊடகங்கள் எனது அந்தரங்க விஷயங்களை மதிக்க வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரீத்தியை பற்றி நினைக்கும் போது உயிரே படத்தில் ஷாருக்கானுடன் அவர் நடித்திருக்கும் பாடல் காட்சி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே… நாணங்கள் என் கண்ணிலே… துடிக்குதே என் நெஞ்சமே….

SHARE