காதுக்குள் எறும்பு சென்றுவிட்டதா?

323
தூங்கிகொண்டிருக்கும்போது காதுக்குள் எறும்பு போய்விட்டால் அதன் வலியை தாங்கிக்கொள்ள முடியாது.ஆனால், அந்த எறும்பை சரியான முறையில் வெளியேற்றவேண்டும், கண்டபடி கையில் கிடைக்கும் குச்சியை எடுத்து காதுக்குள் சொருகினால் வலி இன்னும் சற்று அதிகரித்துவிடும்.

எறும்பை வெளியேற்ற எளிய மருத்துவ குறிப்புகள்

காதுக்குள் பூச்சி நுழைந்தால், உடனடியாக காதினுள் எண்ணெயையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்), உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு இறக்கலாம். பிறகு, அதனை எடுத்து விடலாம்.

சிலர், பூச்சி காதுக்குள் சென்றதும், வெறும் தண்ணீரையே ஊற்றுவர். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீரிலும் இருப்பதால், சில பூச்சிகள் இறப்பது இல்லை.

குழந்தைகளுக்கான குறிப்புகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் காது தொடர்பான பிரச்சனைகளை, தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான். காது வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற, பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதை சில குறிப்புகள் வாயிலாக அறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால், அதற்கு ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கக் கூடும் என்பது, அனைவரும் அறிந்ததே.

இதற்கு, காதுக்கு அருகே கைகளை வைத்து லேசாக வருடும் போது, அழுகை குறைந்தால், காதுவலி என்பதை அறியலாம். காது என்பது மூக்கு, தொண்டையுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் கூட, காதை பாதிக்கலாம்.

எனவே, மூக்கு மற்றும் தொண்டையில், ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என, பரிசோதிக்க வேண்டும்.

குழந்தை பிறக்கும் போது, காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது. குழந்தை பிறந்த பிறகு, காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன. அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து, காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில், அவை மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும்.

இந்த சமயத்தில் தான், குழந்தைகளுக்கு தொற்று பிரச்சனை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது, சீழ் வடியும்.

இந்த பிரச்சனை உள்ள குழந்தையை, குளிக்க வைக்கும் முன், தேங்காய் எண்ணெயில் பஞ்சை நனைத்து, காது துவாரங்களில் வைத்துவிட்டால், தண்ணீர் காதுக்குள் செல்வதை தவிர்க்கலாம்.

அதிக சப்தம் கேட்கும் இடங்களில், குழந்தைகளை கொண்டு செல்லகூடாது. குழந்தைகள் தாங்களாகவே, பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை அனுமதிக்க கூடாது.

மெல்லிய டவலின் நுனிப்பகுதியை, லேசாக காதுகளில் விட்டு, அதில் உள்ள நீர்த்தன்மையை போக்கினாலே போதும். காதுகளில் இருந்து மோசமான நாற்றம் வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

SHARE