சர்வதேச விசாரணை தொடர்பில் அரசின் இரட்டைவேடம்

381

இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றினை எடுத்துக்கொண்டால் யுத்தம் – சமாதானம், யுத்தம் – சமாதானம் என்ற நிலைப்பாடுகளே காணப்பட்டன. இனவாதம் எப்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் காட்டிவந்ததே வரலாறு. யுத்தத்திற்கு முன்னர் பின்னரான காலங்களில் சமாதா னம் எனக்கூறிக்கொள்ளும் அரசாங்கம் நிபந்தனைகளோடு தமிழ் மக்களுக்கான ஒருசில தீர்வுத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. திருத்தச்சட்டங்களின் மூலம் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக பேச்சளவில் மாத்திரம் கூறிக்கொண்டு, இனவழிப்புக்கான எந்தவொரு பரிகாரத்தினையும் தேடாமல் மௌனித்திருந்த நிலையிலேயே சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட யுத்தக்குற்றங்கள் மீதான விசாரணை ஆரம்பித்தது.
ஐ.நா சபையினது அமர்வுகள் பல ஏற்கனவே நடைபெற்று முடிந்திருக்கின்ற நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் போர்க்குற்ற விசாரணைகள் முறையே நடைபெறவிருக்கின்றன. இதில் சர்வதேச, உள்ளூர் விசாரணைகள், போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள், சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவைகள் உள்ளடக்கப்படுகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப அரசாங்கம் தனது நிலைகளை மாற்றிவருகின்றது என்றே கூறவேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு கருத்தினை தெரிவிக்கின்றபோது அதற்குமாறான கருத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவிக்கின்றார். இவ்விடயம் அரசியலில் சர்வசாதாரணமாக அமைந்தாலும் இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் அல்லது அவர்களுக்கான சுயநிர்ணய உரிமைகள் வழங்கப்படவில்லை.

காலத்துக்குக்காலம் வந்த அரசாங்கங்கள் என்ன செய்தன? என்ன செய்யவில்லை என்று கேட்டுக்கொள்ள முடியும். இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. பண்டா-செல்வா, டட்லி சேனாநாயக்கா, சிறிமாவோ ஒப்பந்தம், சந்திரிக்கா-பிரபாகரன், ரணில்-பிரபா கரன் போன்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டன. 1987ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இதில் அடங்கும். வடமாகா ணசபையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இனப் படுகொலை இடம்பெறவில்லை என அரசாங்கம் கூறுகின்றது. வெறுமனே இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றம் என்றும், நாட்டைக்காப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை எனக்கூறுகின்றது. இதற்கு உடந்தையாக சிங்கள இனவாதக்கட்சிகளும் தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வுத்திட்டங்களையும் விரும்பவில்லை என்பது புலனாகின்றது.

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் பலன்களை அடைகின்ற பொழுது ஏதோவொரு வகையில் இனவாதிகளால் முற்றுப்புள்ளியிடப்படும். தமிழ்த்தேசியம்;, சுயநிர்ணய உரிமை என்பதற்கு இந்த நாட்டில் இடமில்லை என்பது அரசின் நிலைப்பாடு. மஹிந்தவின் ஆட்சியை குறைகூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூட்டாட்சி என்ற போர்வையில் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக ஏமாற்றி வருகின்றார்.

இது தமிழ்த்தலைமைகளுக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது. 03 தசாப்தகாலம் போராடிய இனத்தை பயங்கரவாதம் என முத்திரைகுத்தி தனது இனவெறிப்போராட்டத்தை தமிழ் மக்கள் மீது இலங்கையரசு நடாத்தி முடித்தது. இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகளுக்குத் தெரியாதிருக்க முடியாது. தமிழ் மக்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்தில் அமெரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதில் பங்குபற்றின. இறுதி யுத்தத்;தின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வந்த 08 ஆயுதக்கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பிலேயே மூழ்கடிக்கப்பட்டது. இதனைக் காட்டிக்கொடுத்தது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவாகும். அதுமட்டுமல்லாது இறுதி நேர யுத்தத்தின்போது வவுனியாவின் ஜோசப் இராணுவ முகாமில் இந்திய விமானப்படையின் உயர் அதிகாரிகள் தங்கியிருந்து செயற்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் இன்று இவர்கள் அனை வரும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல போர்க்குற்றமே என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங் களைத்தேடும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் தமது பூகோள அரசி யலை மையப்படுத்தியே இலங்கையுடன் நட்புறவினைக் பேணுகின்றன.

இலங்கையில் இடம்பெற்றதான யுத்தம் என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறிக்கொள்ள முடியும். பன்னாட்டுப் படைகளும் ஒரு இனச்சுத்திகரிப்பிலே ஈடுபட்டது என்பது இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குகின்றது அதனைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதனாலாகும். குறிப்பாக திம்பு முதல் டோக்கியோ வரையிலான பேச்சுவார்த்தைகளை எடுத்துக்கொண்டால் யாரோடு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. பயங்கரவாதிகளுடனா? 2004ம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கையளிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் இலங்கையில் தமது காரியாலயங்களை ஆரம்பித்து சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தினர். இதனை சீர்குலைத்தது யார்? எதற்காக சீர்குலைத்தார்கள்? சர்வதேச மட்டத்தில் 07 பேச்சுக்களும், உள்ளூர் மட்டத்தில் 13 பேச்சுக்களும் இடம்பெற்றது. அப்போது ஜப்பானின் தூதுவர் யசூசி அகாசி, எரிக்சொல்ஹெய்ம் போன்றோர் பிரபாகரனைச் சந்தித்தனர். இது ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்றால் இத்தலைவர்கள் அனைவரும் பிரபாகரனைச் சந்திக்கவேண்டியதன் அவசியம் என்ன? இதிலிருந்து இந்நாட்டுப் பிரதிநிதிகளினதும், நாடுக ளினதும் சுயநல அரசியலை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாது யுத்தம் உச்சக்கட்டத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக்கும்போது விடுதலைப்புலிகளின் தலைவரை சரண டையுமாறு பணித்தவேளை அதற்கு அவர் முடியாது என்ற பதிலையே கூறியிருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் 52 கட்டமைப்புக்களுக்கு மேல் இருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழீழ வைப்பகம் உட்பட தனி சிவில் நிர்வாகம் அங்கு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளையும், தமிழினத்தையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தியே இந்த இன அழிப்பினை இலங்கையரசு மேற்கொண்டது.

இந்தியாவின் தேசிய பாது காப்பிற்கு குந்தகமாகிவிடும் என்கின்ற காரணத்தினால் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை வேரோடு அழித்துவிட திட்டம் தீட்டப்பட்டது. அதேநேரம் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை வளர்த்ததும் இந்தியரசுதான். காலத்தின் தேவைக்கேற்ப நாடுகள் அனைத்தும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டன. தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள். பன்னாட்டுப் படைகளின் உள்நுழைவால் தமிழினம் பல இன்னல்களை அனுபவித்தது. போர்க்குற்றம் என்பதற்கப்பால் மிக மோசமான முறையில் தமிழ் மக்கள் நடத்தப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். பெண் போராளிகளது உடல்கள் மிருகங்கள் போல வீதிகளில் வீசப்பட்டது. இசைப்பிரியா என்கின்ற ஊடகப்போராளி இராணுவத்தினரால் பாலியல் வன் புணர்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இவை யணைத்தும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்களாகத் திகழும் அதேநேரம் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை பச்சோந்திகள் போல மாற்றிவருவது கவலைக்கிடமே.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தை நடத்திச்சென்ற அதே நேரம் சிங்கள இனத்திற்கெதிராக இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா? இல்லை. தமது இனத்தை காப்பாற்றவேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஐ.நா சபையினுடைய இனப்படுகொலை என்ற வரையறையில் ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது தொகுதியாகவோ அழித்தொழிப்பது இனப்படுகொலை என்றும், கர்ப்பத்தடை அப்பிரதேசங்களில் இடம்பெற்றால் அதுவும் இனப்படுகொலையாகும். யுத்தப் பகுதிகளில் இராணுவத்தினர் பெண்களுக்கு பணம் வழங்கி கருத்தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். பின்னர் வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டது. யுத்தத்திற்குப் பின்னர் ஒரு சிவில் நிர்வாகம் வட பகுதியில் ஏற்பட்டதன் காரணமாக தமிழினம் காக்கப்பட்டது எனலாம். வன்னிப்பிராந்தியத்தில் கருக்கலைப்பு தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முக்கிய கவனம் செலுத்தியிருந்தார். குறிப்பாகச் சொல்லப்போனால் அரசு தமது நிகழ்ச்சிநிரலை இதுவரை மாற்றியமைக்கவில்லை. தற்போது த.தே.கூட்டமைப்பு ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்காததன் காரணத்தினால் த.தே.கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமையின் காரணத் தைக்கொண்டும், வடமாகாணசபைக்கும் த.தே.கூட்டமைப்புக்குமிடையில் அரசு முறுகல் நிலையினை ஏற்படுத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்திற்கான வரைபுகள் அரசிடம் கையளிக்கப்பட்டிருக்குமாகவிருந்தால் இவ்வாறான முரண்பாடுகள் ஏற் பட்டிருக்காது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கையரசு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், சம்பந்தனுக்கும் இடையில் முறுகல் நிலையினை ஏற்படுத்துவதற்காக தனித்தனியாக இவ்விருவரைச் சந்திக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சர்வதேச நாடுகளோ சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வினை வழங்கக்கோருகின்றது. மறுபக்கத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தினை இலங்கையில் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிகளை மேற்கொள்கின்றது. இனக்கலவரங்கள் உருவாகுவதற்கான சமிக்ஞைகளும் தென்படுகின்றன. மைத்திரி-ரணிலின் கூட்டாட்சியினை கவிழ்ப்பதற்கான திட்டங்களும் மறை முகமாக தீட்டப்படுகின்றன. நேரடி யாக தமிழ்நாட்டினது உதவியோடு தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுமாகவிருந்தால் சிங்களப் பிரதேசத்தினை விட அபிவிருத்தி மற்றும் கல்வியில் முன்னேற்றத்தை அடைந்துவிடும். வடகிழக்கு பிரதே சமானது அபிவிருத்தியடைந்த ஒரு மாகாணங்களாக மாற்றப்பட்டு உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களது பங்களிப்பினால் வளர்ச்சியடைந்துவிடும் என்ற காரணங்களால் சிங்கள அரசு சமஷ்டி முறையிலான தீர்வுகளை வழங்க மறுக்கிறது.

தமிழ் மக்களுடைய ஏகோபித்த கருத்துக்களை உள்வாங்கி அதியுயர் சமஷ்டி முறையிலான தீர்வுகள் எட்டப்படும் என கடந்தவாரம் த.தே.கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா.சம்பந்தன் தமது கட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார். சமஷ்டி ஆட்சி பற்றியே பேசாத இலங்கையரசு அதி யுயர் சமஷ்டி பற்றிச் சிந்திக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது. சமஷ்டி பற்றிப் பேசுவதற்காக சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் போன்றோர் லண்டன் பயணமாகியிருந்தனர்.

த.தே.கூட்டமைப்பின் அரசிய லில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது கட்சியில் ஒற்றுமை இல்லாத வரையில் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஒற்றுமை என்பது அவசியம். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர். எல்.எப், ஈரோஸ் என்கின்ற தோற்றப் பாடுகள் மறைக்கப்பட்டு த.தே.கூட்டமைப்பு என்கின்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்தால் மட்டுமன்றி அதியுயர் சமஷ்டியைத்தான் இல்லையென்றாலும் சாதாரண சமஷ்டியையாவது பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. கட்சியின் பதிவு விடயத்தில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனே சகுனியாகச் செயற்படுகின்றார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது எந்தளவில் உண்மை என்பதற்கப்பால் ஏனைய கட்சியில் இருப்பவர்களுக்கும் தமிழரசுக்கட்சியினால் சலுகைகள் வழங்கப்படுகின்றபோது அவர்கள் வாயைத்திறந்து அதனைப்பெற்றுக் கொள்கின்றார்கள். கட்சிப் பதிவு விடயம் நீண்டகாலமாக இழுபறி நிலை யில் இருக்கின்றது. இதிலொரு ஒற்றுமையினைக்காணாவிட்டால் எவ் வாறு சமஷ்டி பற்றிப் பேசி ஒற்றுமையினைக் காணமுடியும். சமஷ்டி என்றால் என்ன? என்பது பற்றிகூட கட்சியில் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களுடைய நிலைப்பாட்டில் இருந்து இதுவரை யில் மாறியிருக்கின்றதா? என்றால் இல்லை. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் தமது புலனாய்வுகளை அரசு வளர்த்துவருகினறது. அரசினால் உள்வாங்கப்பட்ட பலர் அச்சுறுத் தல்களுக்கு அடிபணிந்த நிலையில் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் வெளிப் படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மக்க ளுக்கான நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்கின்றபோது அங்கெல்லாம் இராணுவ பொலிஸ், புலனாய்வாளர்கள் தோன்றி அதனைச் சீர்குலைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். இதே போல சிங்கள பொதுநிகழ்வுகள், கலை நிகழ்வுகளில் தமிழ் புலனாய்வாளர்கள் சென்று தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்களா? இல்லை. ஆகவே தமிழ் மக்களுடைய செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலேயே மைத்திரி-ரணிலின் கூட்டாட்சியும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. த.தே. கூட்டமைப்பினது பேச்சினைக் கேட்டு தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதன் ஊடாக மீண்டும் தமிழினம் பாதாளத்தினை நோக்கியே பயணிக்கும். சர்வதேச விசாரணைக்கு அனுமதியில்லை.

அனுமதிவேண்டும் என மாறிமாறி விடயங்களைக் குறிப்பிடுவதென்பது தமிழ் மக்களுடைய தீர்வுகளுக்கு பொருத்தமற்ற செயலே. அரசாங்கம் சொல்வதைக்கேட்டு நாம் செயற்படுவோமாகவிருந்தால் எமது அரசியல் தீர்வுகளைப்பெற்றுக்கொள்ள இயலாத ஒரு சூழ்நிலையே உருவாகும். சர்வதேச விசாரணையை மழுங்கடிக்கும் நோக்கில் மைத்திரி-ரணிலின் கூட்டணி செயற்பட்டுக்கொண்டிருக்க, இதற் கான மாற்றுவழிகளைச் சிந்தித்து செயற்படுத்தவேண்டுமே தவிர, அதியு யர் சமஷ்டியை அரசிடம் பேசிப் பெற்றுத்தருவோம் எனக்கூறுவது முட்டாள்த்தனம். ஆகவே தமிழினத் தினுடைய இனப்படுகொலையை மையமாகக்கொண்டே நாம் எமது அரசி யல் காய்நகர்த்தல்களை சர்வதேச மட்டத்தில் நகர்த்தவேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் நல்லவர் கெட்டவர் என்பதற்கப்பால் நீண்டகாலத்திற்கு அப்பால் ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியிருக்கின்றார். அத் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கு வோமாகவிருந்தால் சர்வதேசத்திற்கு நாம் உரக்கக் கூறமுடியும். ஆனால் முதலமைச்சர் தமிழர் பேரவை என்ற அமைப்பில் இணைத்தலைவராக செயற்படுகின்றார். இவ்விடயத்தையும் அரசு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முற்படலாம். இந்நிலையில் இலங்கையில் சர்வதேச விசாரணைகள் எவ்வாறான நிலையை நோக்கிப் பயணிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நெற்றிப்பொறியன்

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400

SHARE