ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கை அரசுக்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. இம்முறையும் கூட்ட ஆரம்பநாளிலேயே வெளிப்பட்டிருந்தது.
இம்முறை இலங்கை எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்ற போதிலும் ஆரம்ப நாளிலிருந்து ஒவ்வொருநாள் விவாதங்களிலும் இலங்கையின் பெயரும் பலமாக அடிபடுவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த 10ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவையின் 26ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வழமையை விட இம்முறை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த கூட்டத்தொடர் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு முக்கியமான ஒன்றாகும். மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் என்ற ரீதியில் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றுகின்ற கடைசி உரை இதுதான். இதனால் தானோ என்னவே தனது ஆதங்கங்களை கவலைகளை அந்த உரையில் வெளிப்படுத்தியிருந்தார்.
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் தன்னை சில நாட்டு அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக விமர்சித்ததாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை முதல்நாள் அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து சிறிலங்காவுக்கு மனித உரிமை பேரவையில் விழுந்த மற்றுமொரு கரும்புள்ளி என்றே இராசதந்திரிக்கள் கூறிகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த அந்த உரையிலேயே தன்மீது சிலர் கீழ்த்தரமான விமர்சனங்களை மேற்கொண்டதாக கூறினார்.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஐ.நா ஆணையாளர் அவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தும், ஆணையாளரது கருத்துக்களை சிறிலங்கா அரச தரப்பு கேள்விக்குட்படுத்திய சம்பவங்கள் கடந்த காலத்தில் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது தொடரின் ஆரம்ப உரையில் இதனைத் தெரிவித்த ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள், நாடுகளின் குழப்ப நிலைக்கும் மோதல்களுக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது. எனவே ஒவ்வொரு நாடுகளும் மனித உரிமையினை பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தால் அதற்கு நன்மை உண்டாகும்.
இருப்பினும் எனது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் இழுத்தடிப்புகளாலும் மறுப்புக்களாலும் எதிர்கொள்ளப்பட்டன. இது நாம் அரசாங்கங்களை விமர்சித்ததால் உண்டானதா?
ஆம், இதுவே மனித உரிமைகளை பரப்புரை செய்வதன் இயல்பு. அதிகார வர்க்கத்தினரிடம் உண்மையை கூறுவது சிலருக்குள்ள சிறப்புரிமைகள் என்பன மனித கௌரவத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். சில அரசுகள் பேச விரும்பாத விடயங்களை நாம் கவனத்தில் எடுப்பது இதற்கு காரணமா?
ஒரு நாட்டில் இது கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு உபாயமாக இருக்கலாம். இன்னொரு நாட்டில் இது சிறுபான்மையினர் அல்லது வந்தேறு குடிகளின் மீதான மனிதாபிமானமற்ற செயற்பாடாக இருக்கலாம்.
கடந்த ஆறு வருடங்களில் தனக்கு அறிவூட்டும் முழுமையான அனுபவங்கள் கிடைத்ததாக கூறிய அவர் மனித உரிமை பேரவை வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
ஒரு மாற்றத்துக்கு தான் உதவியதாகவும் பலமான ஒரு பரப்புரையாளராக இருந்ததுடன், பயம் அல்லது பாரபட்சமின்றி பேசிய ஒருவராக தான் செயற்பட்டதாக நம்புவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய நாடுகள் பலவும் நவநீதம்பிள்ளையின் துணிச்சலான செயற்பாடுகளை பாராட்டின. முதல்நாள் உரையாற்றிய பெரும்பாலான நாடுகள் நவநீதம்பிள்ளையின் சேவைக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. ஆனால் இலங்கை பிரதிநிதி மட்டும் நவநீதம்பிள்ளையின் சேவைக்கு பாராட்டுக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. நவநீதம்பிள்ளையின் காலம் சிறிலங்காவுக்கு கசப்பானதாக இருந்திருக்கலாம்.
இந்த ஆரம்ப உரையிலேயே ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சிறிலங்கா தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக நவி பிள்ளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 5 ஆவது ஆண்டு கடந்த மாதம் நிறைவடைந்தது. எனினும் இலங்கையில் போரின் வடுக்கள் இன்னும் மாறவில்லை. போர் வடுக்கள் ஆறும் முன்னரே யுத்த வெற்றிக்கொண்டாட்டங்களில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்றும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டினார்.
பொறுப்பு கூறுதலையும் அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் இந்த பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம் நிபுணர் குழுவை நியமித்துள்ளது.
இந்த குழுவினருக்கு பல நிபுணர்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களும் உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளனர்.
நம்பகமான உண்மையினை கண்டறியும் செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்கிறேன் ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் எனத் தெரிவித்திருந்தார்
ஐ.நா ஆணையாளர் நவி பிள்ளை அவர்களது இந்த அறிவித்தலை ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க தனதுரையில் நிராகரித்தார்.
ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும் உள்ளக விரிவான விசாரணைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை தாங்கள் வரவேற்பதாக அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்கிறோ ஆகிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தன
ஐ.நாவின் விசாரணைக்கு சிறிலங்கா முழுமையா ஒத்துழைப்பினை வழங்கவேண்டுமென இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. ஆனால் உள்ளக விவகாரங்களில் ஐ.நா தலையிடுவதாக சீனா சபையில் சாடியது.
இரண்டாம் நாளான புதன்கிழமையும் சிறிலங்காவுக்கு ஐ.நா.மனித உரிமை பேரவையில் கசப்பான நாளாகவே காணப்பட்டது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற விடயம் விரிவான விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதில் ஏனோ இலங்கை அரசதரப்பு பிரதிநிதிகள் எந்த கருத்தையும் கூறாது மௌனமாக இருந்தனர். ஆனால் இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மனித உரிமை அமைப்புக்களும் ஊடகத்துறை அமைப்புக்களும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கையும் ஒன்று என சுட்டிக்காட்டின. போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 40க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு கொலையாளி கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. ஊடகவியலாளர்களை படுகொலை செய்பவர்களை பாதுகாக்கும் அரசாக சிறிலங்கா அரசு காணப்படுகிறது என்றும் அந்த அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இதற்கு சிறிலங்கா பதில் சொல்லவில்லை. பதில் சொல்லமுடியாத நிலை இருந்திருக்கலாம்.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை ஐ.நா.மனித உரிமை பேரவை கண்டிப்பதாக தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் தலையீடுகள் இன்றியும் பணிகளை ஆற்றுவதற்கு அந்தந்த நாடுகள் உரிமை நடவடிக்கைகளை எடுத்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்காக அரசுகளும் ஆயுதக்குழுக்களும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து தாக்குகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். மனித உரிமை பேரவையின் தலைவர் டீயரனநடயசைந னேழபெ நுடடய தலைமையில் நடைபெற்ற இவ்விவாதத்தை ஊடகவியலாளர் ஆள. புhனைய குயமாசல நெறிப்படுத்தினார்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அறிக்கைகளும் விவாதங்களும் இடம்பெற்றன. இதன் போது இலங்கையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகியவை குறித்த அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமை மற்றும் இடம்பெயர் மக்களுக்கான சிறப்பு பிரதிநிதி சலோகா பியானி மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார்.
இலங்கைக்கு நேரில் பயணம் மேற்கொண்ட சலோகா பியானி இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையையும், குறிப்பாக பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதையும், கட்டாய விபச்சரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபடும் சிறிலங்கா படையினர் தண்டிக்கப்படுவது இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
கணவனை இழந்து குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் காட்டாய விபச்சாரத்திற்கு தூண்டப்படுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதாலேயே அம்மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் என்றும் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையினை மனித உரிமைசபைக்கு சமர்பித்த ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி, வியாழன் நடைபெற்ற அமர்வில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் சுதந்திரமாக தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டியதன் அவசியம் குறித்தும், பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துரைத்தார்.
போர்ச்சூழல் காரணமாக தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து விரிவாக இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் சிறிலங்காவின் உயர்மட்டத்தில் சொல்லப்படுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் அதிகரிகள் மட்டத்தில் சொல்லப்படுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலைமைக்கு சிறிலங்கா படையினரது நில அபகரிப்பே பிரதான பிரதான காரணியாக அமைகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் இராணுவ பிரசன்னம் காரணமாக இந்த மக்கள் தங்களது நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றது.
மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களை தமது சொந்தக் காணிகளில் குடியேற்றவில்லை எனக் சொல்கின்றனர். அவ்வாறு மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படவில்லை.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் நிலங்கள் இராணுவ தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் உள்வாங்கப்படுகின்றன. உயர்பாதூப்பு வலயங்களாக பொதுமக்களின் காணிகள் உள்ளன. நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணி விவகாரம் இராணுவத்தின் மறைமுக தலையீடு காரணமாக நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் காணிகளில் புத்த சிலைகள் நிறுவப்பட்டு புனித இடங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றது.
இராணுவத்தினர் பயிர்செய்கை காய்கறி வியாபாரத்திலும், மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரது தலையீடுகள் நிறைந்து காணப்படுகின்றது. யாழ்குடாவில் 32 பிரதான இராணுவ முகாம்கள் காணப்படுகின்றது.
தேர்தல் இடம்பெற்று வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கட்சியின் வெற்றிக்கு பிற்பாடு இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றது. சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதவர்களில் பெண்களும் சிறுவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆண்துணையற்ற பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இவைகள் பெரும்பாலும் இராணுவத்தினராலேயே இடம்பெறுகின்றது. இராணுவத்தினர் தங்களது தேவைகளுக்காக பெண்களை வற்புறத்தி விபச்சார நிலைக்கு தள்ளியுள்ளனர் என குறிப்பிட்டிருக்கும் ஐ.நா.பிரதிநிதி சலோகா பியானி அவர்களது அறிக்கையில், தனது கள ஆய்வுக்கமைய 14 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானியின் கருத்துக்கு வழமை போலவே இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிறிலங்கா பிரதிநிதி தெரிவித்தார்.
பெயானியின் இலங்கை விஜயம் பற்றிய தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது
இதேவேளை வியாழக்கிழமை மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான உபமாநாடு ஒன்றும் பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஐ.நா.மனித உரிமை பேரவை மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த உபமகாநாட்டிலும் இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த ஐ.நா மனித உரிமைச்சபைக்கான பிரித்ததானியாவின் நிரந்தர பிரதிநிதி மார்க் மத்தியூ ஐ.நா. நியமித்திருக்கும் சர்வதேச விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்றைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என தெரிவித்தார்.
லண்டனில் இடம்பெற்றுவரும் மோதற்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்தான அனைத்துலக மாநாட்டிற்கு வலுவூட்டும் வகையில், இந்த உபமாநாடு இன்று இடம்பெற்றிருந்தது.
உபமாநாட்டில் பங்கெடுத்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா பிரதிநிதி , தமிழ்பெண்கள் எதிர்கொண்டுள்ள பாலியல் வன்முறைகளை, லண்டன் மாநாடு எந்தவகையில் கவனத்தில் கொள்கின்றது என கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த ஐ.நா மனித உரிமைச்சபைக்கான பிரித்ததானியாவின் நிரந்தர பிரதிநிதி மார்க் மத்தியூ அவர்கள், இலங்கையின் இறுதிப்போரின் போது மிகமோசமான மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும், இது தொடர்பில் ஐ.நாவின் அறிக்கைகள் தெளிவாக காட்டியிருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து எதிர்வரும் நாள்களில் சுதந்திரமான நீதித்துறை, பெண்களுக்கு எதிரான பாரபட்சம் என்ற விடயங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதிலும் சிறிலங்கா குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு கேள்விக்குட்படுத்தப்படலாம்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் என்னதான் பலமான நிலையில் இருப்பதாக மார்தட்டிக் கொண்டாலும் சர்வதேச அரங்கில் மனித உரிமை விடயங்களில் குற்றவாளியாக கூனிக்குறுகி நிற்பதைதான் அவதானிக்க முடிகிறது.
இரா.துரைரத்தினம்)