இன்றைய சமூகமட்டத்தில் பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என்ற பேச்சுக்கள் எங்கெல்லாம் எழுகின்றதோ அங்கெல்லாம் ஈழப்பெண்போராளிகள் உதாரணங்களாகவும் சான்றுகளாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர் அல்லது சுட்டிக்காட்டப்படுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் வரலாறுகளில் பதியப்பட்டுவிட்டார்கள். உண்மையில் பெண்ணியம், பெண் விடுதலை போன்ற சொற்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் அவர்கள்தான்.
படிமுறை படிமுறையாக காலம் காலமாக அடிமை வாழ்வில் அடக்கிவைக்கப்பட்ட பெண்களை பிரபாகரன் என்ற மாபெரும் தலைவர்தான் அவர்களின் ஆளுமைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அடிமை விலங்கினை உடைத்தெரியவைத்து இந்த உலகுக்கு புதுமைப்பெண்களாக புரட்சியின் வடிவமாக வெளிப்படுத்திக்காட்டினார்.
ஈழவிடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பென்பது ஆண்களுக்கு நிகராகவும் சில சமயங்களில் ஆண்களுக்கு மேலாகவும் இருந்துவந்தது. ஆளுமையின் உச்சங்களிலும் அதிகாரமட்டங்களின் உயர் பொறுப்புகளிலும் பெண்கள் தம் அர்ப்பணிப்பு மிகுந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர், கரும்புலிகளாகவும்,கடற்புலிகளாகவும்,தரைப்படையின் தனித்தாக்குதல் அணியாகவும், வேவு அணியாகவும், புலனாய்வுப் பிரிவினராகவும், அரசியல், நீதி நிர்வாகம், காவல்துறை போன்றவற்றில் ஒரு தனிப்பிரிவாகவும் தமிழீழப்பெண்போராளிகள் பெரு விருட்சமென வியாபித்து வளர்ந்திருந்தனர்.
ஆண்களுக்கு நிகராக தாங்களும் உடல்களில் குண்டுகளை கட்டிக்கொண்டு கடல்,தரை கரும்புலிகளாகி எதிரிகளை வெடித்துச்சிதறடித்தனர். சவால் நிறைந்த சண்டைப்படகுகளை சலனமே இல்லாது இயக்கி சாதனை படைத்தனர். கனரக ஆயுதங்கள் அவர்களின் கைகளில் சின்னக்குழந்தையென மாறிப்போயின ஈழத்தின் வீரவரலாற்றின் அனேக பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் எம் பெண்கள்….
கடந்த காலத்தில் இத்தனை சிறப்புக்களை தமக்குள் தாங்கிச்சுழன்ற ஈழப்பெண்களின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கின்றது என்று எண்ணிப்பார்க்க இதயம் கனக்கிறது.சிங்களப்பேரினவாத இராணுவம் கடந்த காலத்தில் பெண்போராளிகளிடம் தோற்றுப்போன சம்பவங்களை மனதில் வைத்து இன்று அவர்களை மிகக்கடுமையாக பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சித்திரவதைசெய்துகொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூர பாலியல் வண்புணர்வுக்கொலைகள் சிங்களவர்களின் ஈழப்பெண்கள் மீதான வன்மத்தை படம்போட்டுக்காட்டுகின்றது. கொடூரத்திலும் மிகக்கொடுரமாக அணுவணுவாய் அவர்களை ரசித்துக்கொலை செய்வதில் சிங்களம் மகிழ்ச்சிகொள்கின்றது.
இன்று ஈழத்தில் போரின் காரணமாக குடும்பஉறவுகளை இழந்தவர்களையும், வாழ்வாதாரத்தினை இழந்துவாழும் பெண்களின் வறுமையினை வாய்ப்பாய்ப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் ரீதியாக அவர்களை அணுகுவதும், காணாமல் போன உறவுகளை தேடியலையும் பெண்களிடம் பாலியல் பேரம் பேசுவதும், அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இராணுவமும் அரச அதிகாரிகளும் பாலியல் லஞ்சம் கோருவது என எங்கும் எதிலும் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு முன்னாள் பெண்போராளிகளும், சாதாரண பெண்களும் முகம்கொடுக்கின்றார்கள். நான்கு கோழிக்குஞ்சை கொடுப்பவன் கூட இன்னும் இரண்டு அதிகம் தருகின்றேன் என்னோடு வருகின்றாயா? என்று கேட்கின்றான். இவையெல்லாம் அங்கு அன்றாடம் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள்.
வாழ வழியில்லை, மானம் மறைக்க உடையில்லை, பிள்ளைகள் வயிற்றுப்பசிக்கு சோறில்லை, கட்டியவன் செத்தோ அல்லது சிறையிலோ இப்படியிருக்க தன் உடலை விற்பதைத்தவிர பலருக்கு வேறு வழியில்லை. நாட்டுக்காக உயிரைக்கொடுக்க துணிந்தவர்கள் தம் பிள்ளைகளினதும் சொந்தங்களினதும் பசிபோக்க தன் எதிரியிடமே தன் உடலை விற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றனர். இது தவறு எம் இனத்தின் கலாச்சாரத்திற்கு இழுக்கு என்று பேச எம் சமூகத்திற்கு தகுதியிருக்கிறதா? எந்த சமூகத்திற்காய் போராடினார்களோ அந்த சமூகத்தினாலேயே ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில் இதயத்தை ஈட்டிகொண்டு தைப்பதுபோல் வலிக்கிறது. இவற்றிக்கெல்லாம் எம் சமூகத்தின் பாராமுகமே காரணமாகும்.
வறுமையின் காரணமாய் முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை, வறுமையின் காரணமாய் பெண்போராளி பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை, வறுமையின் காரணமாய் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்போராளிகள், வறுமையின் காரணமாய் பிச்சையெடுத்து வாழும் ஊனமுற்ற போராளிகள்,வாழ்வாதாரத்திற்காய் கண்ணீர்விடும் முன்னாள் போராளிகள், மருத்துவ வசதியின்றி வாழ்வினை இழந்த முன்னாள் போராளி என ஏதோ ஒரு தலைப்பில் தினமும் ஒரு செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் இடம்பிடிக்க தவறுவதில்லை. இவற்றையெல்லாம் பார்த்தும் படித்தும் நாம் ஏன் பாராமுகமாய் இருக்கின்றோம்?
சிலவிடயங்களை நாம் சிந்திக்க மறுக்கின்றோம். முன்னாள் ஆண்,பெண் போராளிகளினது இன்றைய இவ்வாறான வறுமை நிலைமைக்கு எங்கள் சமூகம்தான் பிரதான காரணம். எங்களின் இனத்தின் மீட்சிக்காக போராடத்தான் அவர்கள் இளமையில் தங்கள் கல்வியினையும் வசதியான வாழ்வினையும் உறவுகளையும் உதறிவிட்டு வந்தார்கள் அவர்கள் அன்று சுயநலத்தோடு சிந்திருந்தால் அவர்களின் வாழ்வும் இன்று வளம்மிக்கதாய் இருந்திருக்கும். இந்த போராட்டம் என்ற ஒன்றிற்குள் ஈடுபட்டிருக்காவிட்டால் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இன்னும் பல அரச உத்தியோகத்தர்களாகவும் அல்லது புலம்பெயர் தேசங்களுக்கு தொழில்நிமித்தம் புலம்பெயர்ந்தும் வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வினை வளமானதாக்கியிருந்திருப்பார்கள்.
தாயினும் மேலானது தாய்நாடு என்ற உயர்ந்த சிந்தனையோடு போராடவந்தவர்களை நாம் இன்று நடுத்தெருவில் விட்டிருக்கின்றோம். அன்று அவர்கள் போராளிகளாக இருந்தபோது எங்கள் எல்லா கஷ்டங்களிலும் பங்குகொண்டார்கள், தம் உணவை பசியோடிருக்கும் பிறருக்கு கொடுத்துவிட்டு தம் பசி மறந்து போராடியவர்கள். எண்ணிப்பாருங்கள் எத்தனை உன்னதமாகவும் நேர்த்தியாகவும் நீதிநெறி தவராமலும் ஈழமண்ணை ஒரு புனித பூமியாக மாற்றி எங்கள் கைகளில் கொடுத்தவர்கள்?அவர்கள் அன்று நாம் சுவாசித்த சுதந்திரக்காற்றுக்கு இவர்கள்தானே சொந்தக்கார்கள், அண்ணா என்றும், அக்கா என்றும், தம்பி என்றும், தங்கச்சி என்றும் எத்தனை உரிமையோடும் எத்தனை பாசத்தோடு நாம் அவர்களுடன் பழகினோம். இன்று எவ்வாறு அது அத்தனையையும் மறந்துவிட்டு அவர்கள் யாரோ நாம் யாரோ என்று வாழ்கின்றோம்? நாம் பசித்திருக்க அவர்கள் புசித்ததில்லை, எங்கள் நிம்மதியான தூக்கத்திற்காய் அவர்கள் தங்கள் உறக்கங்களை தொழைத்தவர்கள். இதையெல்லாம் இன்று கொஞ்சமாவது சிந்திக்கின்றோமா?
நாம் சிந்திருந்தால் எம் சமூகத்திற்குள், எமக்கு அண்டை வீட்டில், எம் கிராமத்தில், எம் நகரத்தில் அவர்கள் இன்று ஆதரவற்றும், வாழ்வுக்கு ஆதாரமற்றும் அடுத்தவனிடம் கையேந்தி நிற்பார்களா? இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் கண்ணைமூடிக்கொண்டு கடந்துசெல்கின்றோம். எங்கள் இனத்திற்காக போராடியவர்கள் வாழவழியின்றி சாகத்துணிகின்றார்கள் என்றால் அது எங்கள் இனத்திற்கே அவமானம் அல்லவா? அவர் செய்யட்டும் இவர் உதவட்டும் என்று அடுத்தவரை கைகாட்டுவதும். அவர் செய்யவில்லை இவர் செய்யவில்லை என்று மற்றவரை குறைசொல்வதும் இதுதானே நடந்துகொண்டிருக்கின்றது. நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியினை நமக்கு நாமே எப்போதாவது கேட்டுக்கொண்டிருக்கின்றோமா?
எம் சமூகத்திற்காய் போராடியவர்களை எம் சமூகமே கைவிட்டால் அவர்கள் எங்குபோய் தஞ்சமடைவார்கள்? இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் தேசம் ஒருகாலத்தில் உயர்வுபெற்று உலகமட்டத்தில் தமிழர்கள் எமக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது என்பதை நாம் ஏன் மறந்துபோனோம்? அன்று ஒரு தனித்தேசத்தை கட்டியெழுப்பிய நாம் இன்று குறிப்பிட்ட ஒருதொகை போராளிகளின் வாழ்வாதாரத்தையும் அடிப்படை வசதிகளையும் மீட்டுக்கொடுக்க முடியாமல் சுயநலத்தோடு வாழ்வது வெட்கக்கேடு அல்லவா? நேற்று ஆயுதவழியில் போராடி இன்று அறவழியில் போராடும் நாம் தீர்வு கிட்டாமல் நாளை மீண்டும் ஆயுதவழியில் போராட எத்தணிக்கையில் எம்மோட கரம்கோர்த்து போராட எவர்வருவார்? கறிக்குப்போடும் கறிவேப்பிலையென பயன் பெற்றதும் தூக்கிப்போட்டுவிடும் நன்றிகெட்ட இந்தச்சமூகம் என்றல்லவா எம் எதிர்கால சந்ததி கரம்விலக்கி ஒதுங்கிப்போகும். ஏனெனில் நாம் இன்று அதைத்தானே செய்துகொண்டிருக்கின்றோம்.
எமக்காகப்போராடிய எம் உறவுகளின் துயர்தீர்ப்பதும் அவர்களுக்கு உதவுவதும் எம் எல்லோரினதும் மறுக்கப்படமுடியாத கடமையாகும். இக்கடமையில் இருந்து தவறிவாழும் எம்மை காலம் ஒருபோதும் மன்னிக்காது.
-சந்திரிகா-