யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.
சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார்.
இதன் பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்து சமூக வாழ்வை வாழவேண்டும் என அவர் விரும்பினார்.
போர் முடிவடைந்த கையோடு சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு முகாமில் 2009ன் நடுப்பகுதியில் செல்வியும் இணைந்து கொண்டார். இவர் தனது எதிர்கால வாழ்வு சிறப்பானதாக மாறும் என்கின்ற நம்பிக்கையுடனேயே புனர்வாழ்வு பெறச் சென்றிருந்தார்.
ஒன்றரை ஆண்டுகள் புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்த செல்வி அங்கிருந்து வெளியேறிய போது இவரது ஆசைகள் இன்னமும் அதிகரித்திருந்தன.
இவர் தனது புனர்வாழ்வுக் காலத்தின் பின்னர் தனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு திரும்பினார். இவர் தனது கிராமத்திற்குத் திரும்பிய போது 24 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியாகத் திரும்பவில்லை.
மாறாக இளமை வயதின் கனவுகள் இவருள் நிறைந்திருந்தது. தனக்கென வீடு, கணவன் மற்றும் பிள்ளைகள் என இவரது புதிய கனவுகளும் புதிய நம்பிக்கைகளும் அதிகரித்திருந்தன.
ஆனால் இவளது சொந்த கிராமத்தவர்கள் இவளை ஏற்க மறுத்த போது இவள் அதிர்ச்சியடைந்தாள். சிலர் இவள் கொடிய யுத்தத்தை நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என நோக்கினர்.
ஏனையவர்கள் இவள் சிறிலங்கா அரசாங்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண் எனக் கருதினர். ஆகவே ஒட்டுமொத்தத்தில் எல்லோரும் இவளை ஏற்க மறுத்தனர். சிலர் இவளை விலைமகள் எனவும் அழைத்தனர்.
என்னைப் பொறுத்தளவில் எமது சமூகத்தின் படி ஒரு பெண்ணானவள் திருமணம் செய்யாது, குழந்தை பெறாது வாழமுடியாது. அப்படி வாழ்ந்தால் அவளது வாழ்வு முழுமை பெறாது. ஆனால் ஒவ்வொருவரும் என்னை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என கண்ணீருடன் செல்வி கூறினாள்.
2006இல் செல்வி தனது 19வது வயதில் புலிகளுடன் இணைந்து கொண்டாள். போராளியாக இருந்த இவளது சகோதரன் யுத்தத்தில் இறந்ததால் இவள் தன்னைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டாள். இதன் பின்னர் யுத்தம் நிறைவடையும் வரை இவளும் அமைப்பில் பணியாற்றினாள்.
மக்கள் மத்தியில் எங்கள் மீது நிறைய சந்தேகங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் நினைக்குமளவுக்கு நாங்கள் கெட்டவர்கள் அல்ல. புனர்வாழ்வுக் காலத்தில் நாங்கள் மிகவும் நன்றாகவே கவனிக்கப்பட்டோம் என செல்வி கூறினார்.
செல்வியின் விருப்பம் தனிப்பட்ட ஒன்றல்ல. கெட்டவாய்ப்பாக, இது புனர்வாழ்வு பெற்ற 12000 முன்னாள் போராளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான ஆதங்கமும் விருப்பமும் ஆகும்.
எமது புனர்வாழ்வுக் காலத்தில் எமக்கு நிறைய உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் எமக்குப் பயனளிக்கவில்லை என ஜெயந்திநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த மணிமேகலா தெரிவித்தார்.
நாங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் நாங்கள் தொழில் அற்றவர்களாக இருக்கவில்லை. தொழில் வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன. ஆனால் தற்போது எமக்கென பொருத்தமான தொழில் வாய்ப்புக்கள் காணப்படவில்லை.
இந்நிலையில் நாங்கள் எவ்வாறு வாழமுடியும்? என சில ஆண்டுகள் போராளியாக இருந்த பின்னர் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 34 வயதான மணிமேகலா தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு படையில் சில தொழில்வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனது கணவர் மத்திய கிழக்கிற்கு தொழில் தேடி சென்றுள்ளார்.
ஆனால் இன்னமும் அவருக்கு தொழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் சிறிய வேலைகளில் ஈடுபட்டு மாதம் 7000 ரூபா சம்பாதிக்கிறேன். ஆனால் இது போதுமானதல்ல என மணிமேகலா தெரிவித்தார்.
இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்ற போதிலும் தற்போது நாட்டில் அமைதி நிலவுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் மணிமேகலா தெரிவித்தார்.
மாற்றுவலுவுடைய முன்னாள் போராளியான சத்யனும் சமாதானத்தையே விரும்புகிறார். இவர் 1993லிருந்து புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.
1996ல் இவர் தனது ஒரு காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் இழந்தார். இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு ஆண்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
நான் புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட போது ரூபா 250 வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைச் செலுத்தி முச்சக்கர வண்டியில் கிளிநொச்சியிலுள்ள எனது வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டிற்குள் நுழைந்த போது என்னிடம் ஒரு சதமேனும் இல்லை என்கிறார் சத்யன்.
தம் மீது குத்தப்பட்ட புலி முத்திரையை அழிப்பதென்பது இலகுவான காரியமல்ல எனவும் முன்னாள் போராளிகள் அனைவரும் இந்த முத்திரையுடனேயே தற்போதும் வாழ்வதாகவும் சத்யன் கூறினார்.
நான் செயற்கைக் கால் ஒன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மானியமாக ரூ.50,000 வைப் பெறவேண்டும். இதற்கு கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் அவசியம்.
ஆனால் இந்த விண்ணப்பப் படிவத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ எதிராக பணியாற்றியிருக்கக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் எனது பின்னணியின் காரணமாக கிராம அலுவலர் விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட தயங்குகிறார் என சத்யன் ஆதங்கப்பட்டார்.
கிளிநொச்சியில் வாழ்ந்து வரும் சத்யன் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைப் பராமரிப்பதற்காக கூலித்தொழிலில் ஈடுபடுகிறார். இவர் தனது குடும்பத்திற்காக வீடான்றைக் கட்டுகிறார்.
ஆனால் இந்த வீடு எப்போது முழுமை பெறும் என்பது நிச்சயமில்லை. இவர் முச்சக்கரவண்டியை வைத்திருக்கிறார். இவரால் மாற்றுவலுவுடையோருக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு வாகனத்தை கொள்வனவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இது மிகவும் விலைகூடியது.
கிராமத்தில் இடம்பெறும் பொது நிகழ்வுகளில் பங்குபெற எனக்கு ஆசை. ஆனால் என் மீது புலி முத்திரை குத்தப்பட்டுள்ளதால் அவற்றில் என்னால் பங்குபெற முடியவில்லை என சத்யன் தெரிவித்தார்.
தமது சொந்தக் கிராமத்தவர்கள் முன்னாள் போராளிகளான தம்மை சாதாரண கண்ணோடு நோக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள்.
2008இல் திருமணம் செய்த பின்னர் புலிகளுடன் இணைந்தேன். திருமணம் செய்தவர்களை போரில் ஈடுபடுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஏழு நாள் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் நான் முன்னணி போர் அரங்கிற்கு அனுப்பப்பட்டேன் என தினேஸ் கூறினார்.
புலிகளுடன் குறுகிய காலமே தான் பணியாற்றியிருந்ததால் ஆறு மாதங்களில் தன்னை விடுதலை செய்வதாக அதிகாரிகள் கூறியபோதிலும் இரண்டரை ஆண்டுகளின் பின்னரே தான் விடுவிக்கப்பட்டதாக தினேஸ் தெரிவித்தார்.
2008ல் மன்னாரில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தினேசின் சகோதரிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். இவரது தந்தையார் 2007ல் புற்றுநோயால் இறந்தார். இவரது குடும்பச் சூழலின் காரணமாக தினேஸ் தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றினார்.
போர்க்காலத்தில் இருந்தது போன்று வன்னியின் நிலை தற்போதில்லை என்பதே முன்னாள் போராளிகள் அனைவரினதும் கருத்தாகும். அதாவது தற்போது வன்னியில் மோசமான சூழல் நிலவுவதாகவும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.
புலிகள் இருந்த காலத்தில் எவரும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அனைவரும் பிரபாகரனுக்கு பயந்து விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
தற்போது மாலை ஆறு மணிக்குப் பின்னர் எந்தவொரு பெண்களும் வீதியால் நடந்து செல்ல முடியாது என்பது முன்னாள் போராளிகளின் ஆதங்கமாகும்.
வன்னிப் பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் இளைஞர்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் நிறைவடையும் என தினேஸ் உணர்கிறார்.
வடிவேல் 13 ஆண்டுகள் புலிகள் அமைப்பில் பணியாற்றிய போது ஏப்ரல் 17, 2009இல் தனது கண்பார்வையை இழந்தார். இவர் புலிகளின் முக்கிய தளபதி ஒருவரின் பாதுகாப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
புனர்வாழ்வு முகாமில் நாங்கள் மிகவும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டோம். ஆனால் எமக்கென எந்தவொரு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படவில்லை.
நான் விடுவிக்கப்பட்ட பின்னர், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கால் துடைப்பான்கள் தயாரிக்கக் கற்றுக்கொண்டோம். ஆனால் இதில் வருவாயைப் பெற முடியவில்லை.
பின்னர் சமையலாளராகப் பணியாற்றினேன். தற்போது சிறிய உணவகத்தை நடாத்தி வருகிறேன். ஆனால் தற்போது பெருமளவில் உணவகங்கள் நிறுவப்பட்டுள்ளதால் இவர்களுடன் போட்டியிடுவது மிகவும் கடினமாக உள்ளது என வடிவேல் தெரிவித்தார்.
இவர் ஒரு பிள்ளைக்குத் தந்தையாவார்.
இராணுவத்துடன் நட்பாக நடந்து கொள்ள இவர் விரும்புகிறார். ஆனால் அரசாங்கமானது இதுவரையில் வடிவேல் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை.
முன்னாள் போராளி என முத்திரை குத்தப்படுவதை வடிவேல் விரும்பவில்லை. ஒவ்வொருவர் மத்தியிலும் சிங்களவர் அல்லது தமிழர் என்கின்ற இனப்பாகுபாடு காணப்படுகிறது.
ஆகவே இந்தப் பிரச்சினை மீண்டும் இடம்பெறக் கூடாது என்பதையே வடிவேல் விரும்புகிறார். நான் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. எமக்கு இன்னுமொரு யுத்தம் வேண்டாம் என வடிவேல் மேலும் கூறினார்.
சமூகப் பணியாளர்கள், சமூகத் தலைவர்களின் கருத்தின் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தற்போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
மூன்று முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் முகவர்களாக நோக்கப்படுகின்றனர். இவர்கள் உளவாளிகள் என்கின்ற அவப்பெயரைச் சம்பாதிக்கின்றனர்.
இரண்டாவதாக, புலிகளின் காலத்தில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு தற்போது உயிருடன் உள்ள போராளிகள் இவர்களால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு போரில் இறந்தவர்களின் குடும்பங்களால் அவமதிக்கப்படுகின்றனர்.
மூன்றாவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளிகள் கறைபடிந்தவர்கள் என கிராமத்தவர்களால் ஓரங்கட்டப்படுகின்றனர் என கிளிநொச்சியைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய எஸ்.கே.டானியல் தெரிவித்தார்.
விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் எவ்வித பயனுமில்லை. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் 2000 பேர் வரை சிவில் பாதுகாப்பு படையில் வேலைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தற்போதும் தொழில் தேடுகின்றனர் என டானியல் குறிப்பிட்டார்.
ஆசிரியர் ஒருவர் புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்னர் எட்டு ஆண்டுகள் வரை பாடசாலை ஒன்றில் சேவையாற்றியிருந்தார். இவர் தனது வேலைப் பத்திரத்தைப் பெறுவதற்காக அதிபரிடம் சென்றபோது அவர் அதனைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
புலிகள் அமைப்பில் பணியாற்றியதே இதற்கான காரணமாகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் யோகப் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் செல்வதற்கு முன்னாள் போராளி ஒருவர் விரும்பினார். ஆனால் இவருக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது என டானியல் சுட்டிக்காட்டினார்.
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினையாகும்.
நாங்கள் அனைத்தையும் போரில் இழந்துவிட்டோம். இவ்வாறானதொரு போர் மீண்டும் ஏற்படக்கூடாது. நீங்கள் எவ்வாறு எங்களை அழைப்பதென்பது ஒரு பிரச்சினையல்ல.
ஆனால் தயவுசெய்து எங்களை தனிமைப்படுத்தி விடாதீர்கள் என புனர்வாழ்வு பெற்ற ஒருவர் கேட்டுக் கொண்டார்.