கேள்விக்குறியாகும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை

352

தமிழ் அரசியல்கைதிகளுடைய விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்திவரும் த.தே.கூட்டமைப்பு அவர்களின் விடுதலையில் எந்தளவில் அக்கறைகொண்டுள்ளார்கள் என்பதை கடந்தகால நிகழ்வுகளைக்கொண்டு கணிப்பிடமுடிகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு த.தே.கூட்டமைப்பின் அழுத்தங்கள் அரசிற்கு போதாமல் இருப்பதாக அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியிருக்கும் அதேநேரம், கைதிகளைப் பார்வையிடுவதற்காக அரசியல்வாதிகள் பலரும் சென்றுவருகின்ற நிகழ்வுகள் மாத்திரமே அண்மையகாலமாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இது வரையில் எத்தனை அரசியல்கைதிகள் மொத்தமாக சிறைகளில் இருக்கிறார்கள் என்கின்ற விபரங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தரப்புக்கள், இராணுவ உயர் அதிகாரிகளிடத்தில் இல்லை என்றே குறிப்பிடவேண்டும். 02, 03, 05, 10பேர் என அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல்கைதிகளின் விவகாரங்களில் இரு வகையானோர் இருக்கிறார்கள் அதாவது குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் மற்றும் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என அடங்குகின்றனர். இக்கைதிகளின் விடுதலை என்பது இனங்காணப்பட்ட ஒரு விடயமாகவிருந்தால் அதனை அனைத்துக்கட்சிகளும் பரிசீலனை செய்து யார் உண்மையில் அரசியல்கைதிகள் என்பதனை இனங்கண்டு, அவர்களுக்கான விடுதலையினை பெற்றுக்கொடுப்பதற்கு முனைப்புடன் இருப்பதாகத் தெரியவில்லை. த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரசி யல்கைதிகளின் பெயர் விபரங்கள் இருக்கின்றதா என வினவ அவர்களிடம் முழுமையான விபரங்கள் இல்லை என்கிறார்கள்.

250 கைதிகள் உள்ளதாக பொதுவாகக் கூறப்பட்டதே தவிர இவர்களுள் யார் அரசியல்கைதிகள் என பிரித்துக் காட்டப்படவில்லை. அதிகமாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரை இராணுவம் இறுதிநேர யுத்தத்தின்போது கொன்றது. 200இற்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் உயிருடன் இல்லை. இவர்கள் காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை அழிப்பதாகக்கூறி போராட்ட இலட்சியவாதிகளையும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் சர்வதேசத்தின் உதவியுடன் அழித்தொழித்த இலங்கை அரசு இறுதி நேர யுத்தத்தின் போது கண்மூடித்தனமாக மக்களின் மீது தாக்குதல்களை நடாத்திவிட்டு இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமே இனப்படுகொலை இல்லை என்பதை மூடிமறைக்கும் அதேநேரம் யுத்தம் நிறைவடைந்து 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் விடுதலைப்புலிகளின் போராட்டம் இருப்பதாகக்கூறி பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்காதிருப்பதுடன் எஞ்சியிருக்கின்ற போராளிகளை விடுதலை செய்வதற்கும் இலங்கையரசு மறுத்து வருகின்றது.

ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது எனக்கூறிக்கொண்டிருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது ஜன நாயகத்தினை மீறும் ஒரு செயலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இலங்கையிலிருந்து நீக்குவதற்கு உலக நாடுகளுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் அழுத்தம் கொடுப்பார்களாகவிருந்தால் பல்வேறு விதமான பிரச்சினைகைள சர்வதேச ரீதி யாக எதிர்நோக்கவேண்டியேற்படும். அதனையே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன் அவர்கள் கூறிச்சென்றுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை அரசு ஏன் இன்னமும் நீக்காமலிருக்கவேண்டும். பிரதான விடயமாக விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் ஆரம்பித்துவிடும் என்ற காரணம். இந்தியா மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி கெரில்லா முறையிலான யுத்தத்தை ஆரம்பித்துவைக்கும். சர்வதேச நாட்டின் உதவி என்பது அமெரிக்காவின் ஊடாக நெறிப்படுத்தப்பட்டு தனது சர்வாதிகார தன்மையினை இலங்கையில் திணிப்பதற்கான நிலைமைகள் உருவாக்கப்படும். சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டோம் எனக் கூறிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு சர்வதேச நாடுகளது அழுத்தங்கள் மற்றும் செயற்பாடுகள் மீண்டுமொரு போராட்டப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்ற காரணத்தினாலேயே இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காமல் அமுலில் வைத்திருக்கிறது. இச்சட்டம் நீக்கப்பட்டால் அரசியல்கைதிகள் என்ற வரையறைக்குள் உள்ளவர்கள் அனை வரும் விடுதலை செய்யப்படுவார்கள். இதில் கொலைக்குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல்கைதிகளும் இருக்கிறார்கள். இதனால் அரசிற்கு பாரிய நெருக்கடிகள் தோற்று விக்கப்படும். உதாரணமாக கலஹாரி, அநுராதபுர தாக்குதல், கொலன்னாவ தாக்குதல், மத்தியவங்கி, வருமான வரித் திணைக்களம், கோத்தபாய, சந்திரிக்கா, பொன்சேகா போன்றோர் மீது அரசியல் ரீதியான தாக்குதல்களில் ஈடுபட்ட வர்களை விடுதலை செய்யவேண்டிய நிலைமை உருவாகும். இவர்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று செயற் படுத்தியவர்களும் கூட. இவர்களின் விடுதலையினால் இலங்கை அரசாங்கம் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே எண்ணுகின்றது.
த.தே.கூட்டமைப்போ இவர்களுக்கான விடுதலை மிக விரைவில் கிடைத்துவிடும் அதற்கான அழுத்தங்களை கொடுத் துக்கொண்டிருக்கிறோம் எனக்கூறி நாட்கள் கடந்து செல்கின்றது. இவர்களை நம்ம முடியாத நிலைக்கு தற்போது இந்த அரசியல்கைதிகளின் நிலைமைகள் மாறியுள்ளது. திடீரென குற்றத்தை ஒப்புக்கொண்டால் இதனைவிட மோசமான தண்டனைகள் கிடைத்துவிடும் என்கின்ற காரணத்தினால் இக்கைதிகள் தமது குற்றத்தினை ஒப்புக்கொள்ளாது தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வெவ்வேறு காரணங்களுக்காக தடுத்துவைத்திருக்கின்றோம் எனக் கூறும் அரசு, இவர்களை நாம் விடுதலை செய்வதனால் சிங்கள தேசத்தில் குழப்பநிலைகள் உருவா கும். இப்பிரச்சினைக்கு நாம் நினைத்த மாத்திரத்திலே முடிவுகளை மேற்கொள்ள இயலாது என்று அரசு தீர்மானித்துள்ளது.
மஹிந்த ரஜபக்ஷவினால் விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதி களில் 90மூமானவர்கள் சிறுவர்களே. 10மூவீதமானவர்கள் போராளிகள். அதிலும் சரணடைந்த தளபதிகள் துணைத்தளபதிகள், கேணல் என அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும போதும், 1990ஆம் ஆண்டுகளில் தடுத்துவைக்கப்பட்டவர்களே இதில் உள்ளடக்கப்படுகின்றார்கள். தண்டனை பெற்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப் பட்டவர்கள் என அண்ணளவாக 1000பேர் வரையில் இருக்கலாம். ஆனால் இவர்களின் சரியான தரவுகள் இதுவரையில் வெளியிடவில்லை. அண்மையில் மகசின் சிறைச்சாலையில் 85பேரும், அநுராதபுரத்தில் 08பேர் என்ற அடிப்படையில் தான் உண்ணா விரதத்தில் ஈடுபட்டிருந்தனர். 250 அரசியல்கைதிகளாக முன்னர் இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால் இன்று 93அரசியல் கைதிகளே இனங்காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் த.தே.கூட்டமைப்பினர் விஜயம் மேற்கொண்டு இத்தரவுகளைப் பெறமுடியும். இதனை இவர்கள் செய்யாதிருப்பதன் காரணம் என்ன? பாராளுமன்ற உறுப்பினர்களான சிறி தரன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் மாத்திரமா தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருப்பவர்கள். அரசியல்கைதிகளை சந்திப்பதற்கு இவர்களே அதிகமாக செல்கின்றனர். ஏனையவர்கள் அனைவரும் என்ன செய்ய நினைக்கிறார்கள். அரசியல்கைதிகள் என்ற போர்வையில் வருடக்கணக்கில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இவர் களுடைய மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளமுடியும். வெறுமனே தேர்தல் காலங்களில் மாத்திரம் போலி யான வாக்குறுதிகளைக்கூறி வாக்குப் பிச்சைக்கேட்கும் நீங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறையின்மையுடன் செயற்படுவது என்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கிய, அவர் சார்ந்த தமிழினத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகமே. தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப்போராடியவர்கள் இவர்கள்.

கரும்புலிகளின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய தியாகங்கள் சொல்லில் அடங்காதவை. சர்வதேசம் தமிழினத்தின் விடுதலைக்கான கதவினை திறந்துவைக்கிறது எனக் கூறிக்கொள்ளும் த.தே.கூட்டமைப்பு அரசியல்கைதிகளின் விடுதலையினை விரைவுபடுத்தாதது கேலிக்கூத்தான ஒரு செயல். இனியாவது தரவுகளை திரட்டும் செயற்பாடுகளை த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும். யுத்தம் உச்ச கட்டத்தினை அடைந்தபொழுது ஆயிரக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டார்கள். இறுதிப் போரின்போது 25000மேற்பட்ட போரா ளிகள் கொல்லப்பட்டதாகவும், 50000இற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் எனவும், இவர்களில் 11000பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் எனக்கூறப்படுகிறது. ஏனையவர்களுக்கு என்ன நடந்;து எனக்கேட்டால் பதில் இல்லை. இதேபோன்று 4இலட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் இருந்தார்கள். அதில் 140000பேரின் நிலைமை என்ன? காணாமற்போனார்களா? கொல்லப்பட்டார்களா? அவ்வாறு அவர்கள் காணாமற்போயிருந்தால் அல்லது கொல்லப்பட்டால் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா? இனப்படுகொலை தொடர்பாக வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது மன்னார் ஆயர் ஜோசப் அவர்களின் கூற்றின்படி 144000பேர் கொல்லப்பட்டார்கள் எனக் கூறியிருந்தார். இங்கு இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. இதனை தற்போதைய கூட்டரசாங்கம் மூடிமறைத்து வருகின்றது. ஒருபோதும் இலங்கை இராணுவத்தை அரசாங்கம் காட்டிக்கொடுக்க முன்வராது. இதில் மாற்றுக்கருத்தில்லை. இனப்படுகொலை இடம்பெற்றது என்பதையும் இவ்வரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. போர்க்குற்ற விசார ணையே ஏற்றுக்கொள்ளப்படும். இதில் தமிழினத்திற்கு எந்தவித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்போம் எனக்கூறிக்கொண்டு விக்னேஸ்வரன் தலைமையில் புதிதாக உருவாகியிருக்கும் தமிழ் மக்கள் பேரவை யும் இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை. ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தத்தம் கதிரை களை பலப்படுத்திக்கொள்கிறார்களே தவிர தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை தொடர்பாக சிந்திப்பவர்கள் இல்லை. காலத்திற்குக்காலம் அரசியல் முறை கள் மாற்றம்பெற்றுச் செல்கின்றதே தவிர, தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் தீவிர அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய இவ்வரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படாதிருப்பது என்பது கூட்டமைப்பாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு பயனற்ற செயற்பாடுகளில் த.தே.கூட்டமைப்பு ஈடுபடுவதென்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பூகோள அரசியல், சர்வதேச பின்னணி என்று கூறியே தமிழ் மக்களை ஏமாற்றிய செயற்பாடுகளை மூத்த அரசியல்வாதிகள் செய்து வந்தார்கள். அதனையே தற்போதுள்ள தலைவர்களும் செய்துவருகின்றார்கள். இந்நிலையில் தமிழ் அரசியல்கைதிகளினது விடுதலை என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது. சட்ட ரீதியாக இவர்களை விடுதலை செய்வதாக விருந்தாலும் கூட அதற்கான முன்னெடுப்புக்களை எவரும் செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செயற்பட யாராவது முன்வந்தாலும் அவர்கள் த.தே.கூட்டமைப்பினைச் சார்ந்தவர்கள் இல்லையெனில் இது அரசின் சதித்திட்டம் என்றே கூறுகிறார்கள். விடுதலையின் பின்னர் கைதுசெய்வதற்கான உத்திகள் என்கிறார்கள். இவ்வாறிருக்கின்றபொழுது இந்த தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்கு யார் குரல்கொடுப்பார்? தமிழீழத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தவர்கள் இன்று மௌனிகளாக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கப்போகின்றது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இவ்வரசியல்கைதிகள் நிரந்தரமாகவே விடுதலைசெய்யப்பட்டுவிடுவாரக்ள என்ற காலம் கடந்து மீண்டுமொரு யுத்த பாசறைக்குள் தமிழ் மக்களை இட்டுச்செல்லும் வழிகளையே இவ்வரசாங்கம் எடுத்துச்செல்கிறது. இதற்கு உடந்தையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செயற்படுகிறது. அரசியல்கைதிகளின் தரவுகளை அறிந்துகொண்டு அதற்கமைய செயற படுவதே சிறந்த அரசியல் நகர்வாக அமையும் எனலாம்.

வெற்றிமகள்

sri-p_jpg_2585357f

SHARE