பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.
இதில் சாவ்பாலோவில் நடந்த ஆட்டத்தில் தனது 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட நெதர்லாந்து–சிலி அணிகள் மோதின.
‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடிப்பது என்பதற்கான ஆட்டத்தில் ஆட்டம் தொடக்கம் முதலே நெதர்லாந்து மற்றும் சிலி அணி வீரர்கள் கோல் அடிக்கும் ஆர்வத்தில் தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்தனர்.
முதல் பாதியில் இரு அணியினருக்கும் கோல் அடிக்கும் சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை கைநழுவி போயின. விறுவிறுப்பான முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
பின் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் அதிவேக ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிலி அணி திணறியது. ஆட்டத்தின் 77–வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை பதிவு செய்தது. சக வீரர் கோலை நோக்கி உயரமாக அடித்த பந்தை சரியான உயரத்தில் தலையால் முட்டிய லயோரி பெர் மின்னல் வேகத்தில் கோலுக்குள் திருப்பினார். இதனால் நெதர்லாந்து அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் நெதர்லாந்து அணி மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து சக வீரர் கடத்தி கொடுத்த பந்தை மெம்பிஸ் டிபே அபாரமாக அடித்து கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. சிலி அணியிடம் அதிக நேரம் பந்து வலம் வந்தாலும் கடைசி வரை கோல் வர மறுத்து விட்டது.
முடிவில் உலக தர வரிசையில் 15–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் 14–வது இடத்தில் உள்ள சிலியை வீழ்த்தியது.
லீக் ஆட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் (பி) முதலிடத்தை பிடித்தது. சிலி அணி இரண்டாவது இடத்தைப் பெற்றது.