பாகிஸ்தான் விமானம் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பெண் பயணி பலி; 179 பேர் தப்பினர்

501

தரை இறங்கியபோது பயங்கரம்

பெஷாவர்: பாகிஸ்தானில் தரையிறங்க இருந்த விமானத்தின் மீது மர்ம  நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பயணி பலியானார். விமானி  சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறக்கியதால்  179 பயணிகள் உயிர் தப்பினர். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி கராச்சி  விமான நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27  பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், நேற்றும் விமானம் மீது தாக்குதல்  நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு சொந்தமான பிகே 756 என்ற விமானம்,  180 பயணிகளுடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து  பெஷாவருக்கு (பாகிஸ்தான்) வந்து கொண்டிருந்தது. தரை இறங்குவதற்கு  2 நிமிடம் இருந்த நிலையில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள  குடியிருப்பு பகுதியில் இருந்து மர்ம நபர் ஒருவர் விமானத்தை நோக்கி  திடீரென சரமாரியாக சுட்டார்.

விமானத்தின் பின்புறத்தை துளைத்து கொண்டு உள்ளே பாய்ந்த  தோட்டாக்கள், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் மீதும்  பாய்ந்தது. இதில், பெண் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். விமான  பணியாளர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால்  பயணிகள் பீதி அடைந்து, அச்சத்தில் உறைந்தனர். நிலைமையை  உணர்ந்த விமானி தாரிக் சவுத்ரி, சாமர்த்தியமாக செயல்பட்டு  விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால், 179 பயணிகள்  உயிர் தப்பியது. படுகாயம் அடைந்த விமான பணியாளர்கள் பெஷாவர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் கோலாலம்பூரில் இருந்து பெஷாவர்  வரவேண்டிய விமானம், லாகூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.  துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு  படையினர் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் தீவிரவாதியாக  இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

SHARE