நீதித்துறைக்கு 18வது அரசியல் திருத்தத்தால் “பங்கம்” என்கிறார் விக்னேஸ்வரன்

507

 

நீதித்துறையில் மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது — சி.வி.விக்னேஸ்வரன்

அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்களையோ நீதிபதிகளையோ விமர்சனம் செய்ய முடியாது. அவர்களைக் குறை கூறுவதும் தமது நோக்கமல்ல என தெளிவுபடுத்திய அவர், 18வது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.
இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல்வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்ற வகையில் நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சிவி.விக்னேஸ்வரன் கூறினார்.

SHARE