அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் கிழக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த ராம், சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த கலையரசன் உட்பட பதினொரு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. அதாவது அறுநூறு பொலிசாரைச் சுட்டுக் கொண்டமையும், யாழ்ப்பாணத்தில் மைத்திரிக்கு தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளுவதற்காக பதுக்கிவைத்திருந்த சமயம் காட்டிக்கொடுக்கப்பட்டு தற்கொலைக் கவசம் கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பாக கோத்தபாஜ ராஜபக்ஷவுடன் இணைந்து இவ் அரசாங்கத்துக்கு புனர்வாழ்வு பெற்ற போராளிகள் குழப்பங்களை உருவாக்கி முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்யும் நோக்குடன் இருப்பது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும்.
இதில் ஒரு விடயத்தை உண்ணிப்பாகப் பார்க்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கருணா, பிள்ளையான், நகுலன், ராம், இனியபாரதி, மார்க்கண்டன், ரேசீலன், பாப்பா, தனிகைமாறன், இளங்குமரன், நவநீதன், கே.பி என்றலைக்கப்படும் குமரன் பத்மநாதன், ஜோச் மாஸ்டர், தயா மாஸ்டர் இதைவிட தளபதிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள பல போராளிகளையும் மஹிந்த அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.
இவர்கள் அணைவரும் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டளைக்கு அமையவே செயற்பட்டு வந்தனர்.
மஹிந்தவின் ஆட்சி கவுக்கப்பட்டதன் பின்னர் கே.பி, தயா மாஸ்டர், ஜோஜ் மாஸ்டர், கருணா, பிள்ளையான், ராம் ஆகியோரை உடனடியாகக் கைது செய்யுமாறு அளுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவ்விடயம் நடைமுறைச் சாத்தியமற்றதனால் படிப்படியாக மைத்திரி அரசாங்கத்தினுடைய கூட்டு ஆட்சி அவர்களை ஏதோவொரு விடயத்தில் சிக்கவைத்து ஒவ்வொருவராக கைது செய்யும் நடவடிக்கைகளையே இவ் அரசாங்கம் மேற்கொண்டது. விடுதலைப்புலிகளின் சிறப்புக் கட்டளைத் தளபதியாக இருந்த கருணா அம்மான் அவர்கள் இன்று ஒரு சாதாரண மனிதன் போன்ற இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது இந்த அரசாங்கமே. மஹிந்த அரசாங்கம் தொடர்ந்தும் நிலை நிக்கும் என்று தம்பட்டம் அடித்த கருணா அணியினருக்கு இந்த ஆட்சி மாற்றம் என்பது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையுடன் தொடர்புடையவராக பிள்ளையான் கைது செய்யப்பட்டார் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். இது இவ்வாறு இருக்க ஏனைய போராளிகளையும், சர்வதேசத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கின்றவர்களையும் கைது செய்யும் துரித நடவடிக்கைளை இந்த அரசாங்கம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
அறுபத்தெழு நாடுகளில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் ஆயிரக்கணக்கில் தங்கியிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளன. ஏற்கனவே நானூற்று நாற்பத்திரண்டு பேர் சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அமைப்புக்களை வைத்துள்ளமையின் காரணங்களினால் இலங்கையில் அவர்களுக்கான தடை இன்னமும் இருக்கின்றது. தற்பொழுது நல்லாட்சி நடக்கின்றது என்று கூறி இவர்களை இருகரம் கூப்பி அழைத்தாலும் இவர்களின் சொல்லை நம்பி இந் நாட்டுக்கு வந்த பலர் விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் தொன்னூறு காலப்பகுதியில் கரிகாலன், கருணாம்மான் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டளைத் தளபதிகளாக செயற்பட்டு வந்திருந்தனர். இதன்போது காத்தான்குடி முஸ்லீம் பள்ளிவாசல் படுகொலையை இவர்கள் நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனைவிடவும் கொலனாவ, மத்திய வங்கி, தளதாமாளிகை தாக்குதல்கள் கட்டளைத் தளபதியாக இருந்த கருணா அம்மான் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்றது. இவரை எந்தவேளையிலும் இந்த அரசாங்கம் கைது செய்யமுடியும். ஆனால் அவரைக் கைது செய்யமுடியாத ஒரு நிலை முன்னைய அரசாங்கத்துக்கோ தற்போதைய அரசாங்கத்துக்கோ முடியாதவொரு காரணமாகவே இருக்கும். காரணம் என்னவென்றால் விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தினை முற்றிலுமாக இந்நாட்டை விட்டு நீக்குவதுக்கு கருணாவென்ற தேசத்துரோகியே காரணமாக விளங்கியதேயாகும்.
இவரைக் கைது செய்வதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும். அல்லது இவர் மர்ம நபர்களால், அல்லது அரசாங்கத்தின் குண்டர்களால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படும் ஒரு சூழ்நிலையே உருவாகும். எந்தெந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தமக்கு ஆயுதம் தந்துதவியதாக ஒரு நேர்காணலில் கருணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் கருணா அவர்கள் போர்க்களத்தில் நின்றிருந்தால் வன்னியில் ஒருபிடி மண்ணையென்னும் இவ் அரசாங்கத்தினால் பிடித்திருக்க முடியாது. அவரை சுபிட்சமான முறையில் பிரித்தெடுத்தது இந்த UNP அரசாங்கம். தந்திரமாகப் பயன்படுத்தியது மஹிந்த அரசாங்கம். ஆகவே கருணாவால் பயனடைந்து கொண்டது இவ்விரு அரசாங்கங்களும். எனவே இவருக்கெதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள். தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களினல் மிகமுக்கியமான கதாபாத்திரம் கொண்டவர் கருணாம்மான். விடுதலைப்புலிகளின் இரகசியங்கள் மிக நுட்பமான முறையில் இவருக்குத் தெரியும். இந்திய இராணுவ காலப்பகுதியிலிருந்து ஜெயசிக்குறு வரை விடுதலைப்புலிகளின் கதாநாயகனாகத் திகழ்த்தவர் கருணாம்மான்.
இவ் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாட்டில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி மீண்டுமொரு பயங்கரவாதம் தலைதூங்குகின்றது என்று கூறி சமாதான செயற்பாடுகளையும், தீர்வுத்திட்டங்களையும் சீர்குழைக்கும் நோக்கில் தென்னிந்தியப் பேரினவாதிகள் செயற்படுகின்றனர். இதற்கு ரணிலோ, மைத்திரியோ உடந்தையாகச் செயற்படுவராக இருந்தால் அதன் விளைவு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதத் சந்தேகமும் இல்லை. கருணாவை கைது செய்வதுக்கு ஐந்து சந்தர்ப்பங்கள் இருக்கின்றது இதில் எந்தச் சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் கையிலெடுத்தாலும் அது அவர்களுக்குத் தோல்வியிலேயே முடியும். ஆகவே மர்ம நபரால் இவரை கொலை செய்யும் திட்டத்தையே அரசாங்கம் இனி வகுக்கும் எனலாம்.