மணல் சிற்பக் கலையில் உலகக் கோப்பை பரிசு பெற்ற இந்தியக் கலைஞர்

504
அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் சிட்டியில் 2014-ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு 30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு 10 டன் மணலும் கொடுக்கப்பட்டு ‘சேவ் ட்ரீ சேவ் தி பியூச்சர்’ என்ற தலைப்பில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இதில் மக்களின் விருப்பத் தேர்வில் அதிக வாக்குகள் பெற்ற சிற்பத்திற்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார். உலக நாடுகளில் இருந்து மொத்தம் 20 பிரபல கலைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பட்நாயக்கின் சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.

அட்லாண்டிக் சிட்டியின் மேயர் முதல் பரிசையும், விருதையும் அவருக்கு அளித்தார். அமெரிக்காவில் நடந்த இந்த முதல் மணல் சிற்பக் கலைப் போட்டியில் என்னைத் தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என்று பட்நாயக் தெரிவித்தார்.

இரட்டையர் கலப்பு போட்டியில் இவர் அமெரிக்காவின் சிற்பக் கலைஞர் மாத்யு ராய் டைபெர்ட்டுடன் இணைந்து தாஜ்மஹாலை உருவாக்கினார். இதில் இவர்கள் ஐந்தாம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒடிஷா மாநிலத்தின் பூரி நகரில் பிறந்த சுதர்சன் பட்நாயக் (வயது 37) தற்போது அங்கு மணல் சிற்பக்கலைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருதை இந்த வருடம் பெற்ற இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளிலும், திருவிழாக்களிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். சமூக விழிப்புணர்வு மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்த சிற்பங்களை உருவாக்குவதில் இவர் மிகவும் பெயர் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE