உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை ஒரு போதும் இல்லாத அளவுக்கு மாற்று ஆட்டக்காரர்கள் (சப்ஸ்டியூட்ஸ்) அதிக கோல்கள் அடித்து சாகசம் புரிந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது.
48 லீக் ஆட்டங்களில் மொத்தம் 133 கோல்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் மாற்று ஆட்டங்களில் பங்களிப்பு 18 சதவீதமாகும். அதாவது மாற்று ஆட்டக்காரர்களாக களம் கண்டவர்கள் இதுவரை 24 கோல்களை பதிவு செய்து இருக்கின்றனர். இது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு 2006–ம் ஆண்டு உலக கோப்பை முழுவதிலும் மொத்தம் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. அதில் 16 சதவீத கோல்கள் மாற்று ஆட்டக்காரர்கள் மூலம் அரங்கேறியது. அதாவது மாற்று ஆட்டக்காரர்கள் 23 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
அந்த சாதனை லீக் ஆட்டத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் (15 கோல்கள்) அடித்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையை, ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் சமன் செய்ததும் கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் கண்ட போது தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.