கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை சந்தித்தார்.அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரு செட்டை வென்று 3-வது செட்டில் ஆடிய போது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார். பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடிய அவர் ஆட்டத்தை 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றிகரமாக முடித்தார்.
4-வது சுற்றில் ஜோகோவிச், பிரான்சின் முன்னணி வீரர் சோங்காவை எதிர்கொள்கிறார். சோங்கா, தனது 3-வது சுற்றில் 6-2, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சீனத்தைபேயின் ஜிம்மி வாங்கை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் அனா கொஞ்ஜீவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதே நேரத்தில் உலகின் 2-ம் நிலை நட்சத்திரம் சீனாவின் லீ நா அதிர்ச்சிகரமாக மண்ணை கவ்வினார். அவரை 7-6(5), 7-6(5) என்ற நேர் செட்டில் 43-ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா சாய்த்தார்.