தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய எந்தவொரு சொற்பதத்தையும் ஜெனீவாத் தீர்மானம் கொண்டிருக்கவில்லை.

959

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களிடையே பல்வேறு பிரபதிலிப்புக்களைத் தோற்றுவித்துள்ளது. ஜெனீவாவில் மிகப் பெரும் அதிசயம் நிகழப் போகின்றது என எதிர்பார்த்திருந்து ஏமாற்றத்திற்கும், அதன் விளைவாக விரக்திக்கும் ஆளானவர்களைப் பொறுத்தவரை ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது என்ற ஆசுவாசம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் ஜெனீவா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஆதங்கப்பட்டவர்களுக்கும் ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது என்ற குறைந்தபட்ச ஆறுதலாவது ஏற்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கத்தில் நூதனமான கருத்து ஒன்றும் பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜெனீவாத் தீர்மானம் அமையவில்லை என்று ஆதங்கப்பட்டவர்களையும், ஆட்சிக் கட்டிலிருந்து மகிந்தவை அகற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் ஜெனீவாத் தீர்மானம் கொண்டிருக்கவில்லை என்று விமர்சித்தவர்களையும் மையப்படுத்தியே இந்நூதனமாக கருத்து பரப்பப்படுகின்றது. இக்கருத்தைப் பரப்புபவர்கள் கடந்த ஒரு மாதமாக ஜெனீவாவில் நிலைகொண்டு மேற்குலகின் தீர்மானத்தை ஆதரித்துப் பரப்புரைகளை மேற்கொண்டவர்கள்.

இவர்கள் பரப்பும் நூதனமான கருத்து இதுதான்: “தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை மேற்குலக நாடுகள் கொண்டு வந்தன. இதனை சிறீலங்கா அரசாங்கம் எதிர்த்தது. ஜெனீவாவிற்கு வந்திருந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டவர்களும் எதிர்த்தார்கள். இதனால் மேற்குலக இராசதந்திரிகள் பெரும் குழப்பமடைந்தார்கள். தமிழ் மக்களுக்காக தாங்கள் கொண்டு வரும் தீர்மானத்தைத் தமிழ் மக்களே எதிர்க்கும் பொழுது அதனைத் தாங்கள் கொண்டு வருவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஆதங்கப்பட்டார்கள். எனவே இனிவரும் காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரும் தீர்மானங்களை எம்மவர்கள் விமர்சிக்காது இருப்பது நல்லது.”

ஜெனீவாத் தீர்மானத்தை விமர்சித்தவர்களைத் ‘துரோகிகள்’ என்று வர்ணித்துக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பட்டத்து இளவரசரான’ மதியாபரணன் ஏபிரகாம் சுமந்திரன் வெளியிட்ட அபத்தமான கருத்துடன் ஒத்துப் போகும் வகையில் இக்கருத்து அமைந்திருப்பதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே இத்தீர்மானத்தை மேற்குலகம் கொண்டு வருகின்றது என்ற இவர்களின் வாதம் எம்மால் நிச்சயம் நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்று.

கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், தமிழ் மக்களின் குரலை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆயுதப் போராட்டம் முகிழ்ப்பதற்கு முன்னரான காலப்பகுதிகளாக இருந்தாலும் சரி, ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதிகளாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கிஞ்சித்தளவும் கணக்கிலெடுக்காது சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்த நாட்டின் இப்போதைய பிரதமரிடமிருந்து வெளிவந்த இக்கருத்து அப்பொழுது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியது என்பது உண்மைதான்.

ஆனால் அன்று யாழ்ப்பாணத்தில் கமரூன் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கும், இப்பொழுது ஜெனீவாவில் மேற்குலகம் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தின் உள்ளடக்கத்திற்கும் இடையே மிகப்பெரிய விரிசல் நிலவுகின்றது என்பதுதான் உண்மை. யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்தபடி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமது நாட்டின் அங்கத்துவ உரிமையைப் பயன்படுத்தி இறுதிப் போரில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பன்னாட்டு விசாரணைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தை ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா நிறைவேற்றியிருப்பதை நாம் மறுக்கவில்லை. இத்தீர்மானம் சரியான முறையில் கையாளப்படும் பட்சத்தில் நீண்ட கால நோக்கில் தமிழீழத் தனியரசுக்கான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நியாயத்தை வலுவான முறையில் உலக அரங்கில் நாம் நிலைநாட்ட முடியும் என்பதும் உண்மைதான்.

அதற்காக இத்தீர்மானத்தை தமிழ் மக்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்று கூறுவதோ, அன்றி தமிழ் மக்களின் குரலாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக இராசதந்திரிகள் செயற்பட்டார்கள் என்று வாதிடுவதோ நகைப்புக்கிடமானது. உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் சுட்டிக் காட்டியது போன்று  இத்தீர்மானத்தின் எந்தவொரு இடத்திலும் ‘தமிழ்’ என்ற சொற்பதமோ, அன்றி ‘தமிழர்கள்’ என்ற சொற்பதமோ கையாளப்படவில்லை. அப்படியிருக்கும் பொழுது இத்தீர்மானத்தைத் தமிழ் மக்களின் நலன்களுக்காகக் கொண்டு வரப்பட்ட தீர்மானமாக எப்படி ஏற்பது?

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணிநேரங்களில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களாலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி அவர்களாலும் தனித்தனியாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவ்விரு அறிக்கைகளின் எந்தவொரு இடத்திலும் தமிழர்களின் நலன்கள் பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. மாறாக இலங்கையர்களின் சனநாயக உரிமைகள் பற்றிய சொற்பதங்களே அவ்விரு அறிக்கைகளிலும் தாராளமாகக் கையாளப்பட்டிருந்தன.

ஈழத்தீவில் கடந்த அறுபத்தாறு ஆண்டுகளாக தமிழ் மக்களைக் காலில் போட்டு மிதித்து சிங்களம் இனவெறித் தாண்டவமாடுவதற்கு வழிசமைத்துக் கொடுத்ததில் பிரித்தானியா விட்டுச் சென்ற சனநாயக ஆட்சியமைப்பின் பாத்திரம் முக்கியமானது. போர்த்துக்கேயரின் காலத்திலும், அதன் பின்னர் ஒல்லாந்தரின் காலத்திலும் தனித்தனியாக நிர்வகிக்கப்பட்ட தமிழ் – சிங்கள தேசங்களை, சிலோன் என்ற சாம்பார் பாணியிலான ஒற்றை நிர்வாக அலகிற்குள் கொண்டு வந்து, தமிழ்த் தேசிய இனத்தைச் சிறுபான்மை இனமாக சிறுமைப்படுபடுத்திய ‘பெருமை’ பிரித்தானியாவையே சாரும். வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சிய கதையாக இச்சிறுமைப்படுத்தலுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிரித்தானியாவால் கொண்டு வரப்பட்டதே இலங்கையின் இன்றைய சனநாயக ஆட்சிமுறை. இந்த ஆட்சிமுறையின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது உரிமைகளைத் தமிழ் மக்கள் வென்றெடுக்க முடியாது.

சிங்களவர்களுடன் ஒப்பிடும் பொழுது எண்ணிக்கையில் சிறிய இனமாக விளங்கும் தமிழீழ மக்கள், பிரிந்து சென்று தனியரசை நிறுவினாலே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஈழத்தீவில் தமது சனநாயக உரிமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது. எனவே இலங்கையில் இன்று நிலவும் சனநாயக ஆட்சிமுறையை வலுப்படுத்துவதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். இது மேற்குலகிற்கும் தெரியும்.

எனவே தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு ஜெனீவா தீர்மானத்தை மேற்குலகம் நிறைவேற்றவில்லை என்பதை இதிலிருந்து நாம் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வரும் நோக்கத்துடனேயே கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெனீவாவில் மாறி மாறித் தீர்மானங்களை மேற்குலக நாடுகள் நிறைவேற்றி வருகின்றன என்பது உலகறிந்த விடயம்.

இது சிறீலங்கா அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும். கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனீவாவில் முதற்தடவையாக மேற்குலக நாடுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது இக்கருத்தை அப்போதைய சிறீலங்கா தூதுவர் தாமரை குணநாயகம் வெளியிட்டிருந்தார். இதனைதான் இப்பொழுது ?நவகுடியேற்றவாதம்? என்ற நவமார்க்சிய சொற்பதத்தைக் கையாண்டு, தயான் குணத்திலகவும், காமினி லக்ஸ்மன் பீரிசும் தெரிவிக்கின்றனர்.

உழுத்துப் போன பூகோள சித்தாந்தம் பேசுபவர்களைப் பொறுத்தவரை இலங்கையில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவதற்கு மேற்குலகம் முற்படுவதன் சூத்திரம் மிகவும் இலகுவானது: ??சீனாவுடன் மகிந்தர் ஒட்டியுறவாடுவது மேற்குலகிற்குப் பிடிக்கவில்லை. எனவே மகிந்தரை அகற்றிவிட்டு அவரது இடத்திற்கு ரணிலையோ அல்லது சந்திரிகாவையோ கொண்டு வருவதற்கு மேற்குலகம் முற்படுகின்றது.??

இங்கு ஒரு உண்மை மறைக்கப்படுகின்றது. இன்று உலகில் மிகப் பெரும் சக்தியாக சீனா மாறிவருவதையிட்டு மேற்குலகிற்கு சில அச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக சீனாவிற்கும், மேற்குலகிற்கும் இடையில் நிலவும் உறவை முரண்நிலை உறவாக வர்ணிக்க முடியாது. சீனாவின் எதிர்கால வளர்ச்சி பற்றி அஞ்சும் அதே மேற்குலகமே சீனாவுடன் நெருங்கிய பொருண்மிய உறவையும் கட்டியெழுப்பி வருகின்றது. ஆசியாவின் ஏனைய நாடுகளில் மேற்கொண்டிருக்கும் முதலீடுகளுக்கு ஒப்பான முதலீடுகளையே சீனாவிலும் மேற்குலகம் மேற்கொண்டிருக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது ஈழத்தீவில் சீனா முதலீடுகள் கொள்வதையிட்டு மேற்குலகம் அதிருப்தியடைவதாகப் ?பூகோள சித்தாந்தவாதிகள்? கூறுவது அபத்தமானது.

மாறாக சீனாவிற்கு மட்டும் ஈழத்தீவைத் திறந்துவிட்டு, மேற்குலக முதலீட்டாளர்களின் விடயத்தில் பாரபட்சப் போக்குடன் மகிந்தர் நடந்து கொள்வதும், உலகெங்கும் மேற்குலகம் அமுல்படுத்த விரும்பும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுமே இன்று மேற்குலகிற்குப் பிரச்சினையாக இருக்கின்றது. இதற்காகவே ஆட்சி மாற்றம் ஏற்படுவதை மேற்குலகம் விரும்புகின்றது.

இங்கு ஆட்சி மாற்றம் என்பதன் அர்த்தம் மகிந்தரை உடனடியாக ஆட்சிக் கட்டிலிருந்து அகற்றுவது என்பதாகாது. எம்மவர்கள் சிலர் எதிர்பார்ப்பது போன்றோ அன்றி மகிந்தரின் பரிவாரங்கள் கூறுவது போன்றோ லிபியாவில் முவாமர் கடாஃபிக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட மக்கள் கிளர்ச்சி போன்ற புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி அதன் ஊடாக மகிந்தரை ஆட்சிக் கட்டிலிருந்து தூக்கியெறியும் நோக்கம் மேற்குலகிற்குக் கிடையாது. மாறாக அனைத்துலக மட்டத்தில் அவரது அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகளை அதிகரித்து, அதன் மூலம் மகிந்தரின் வாக்கு வங்கியில் படிப்படியாக சரிவை ஏற்படுத்தி, சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்பிய பாணியில் மகிந்தரையும், அவரது பரிவாரங்களையும் வீட்டுக்கு அனுப்புவதே மேற்குலகின் நோக்கமாகும்.

இது நடந்தேறுவதற்கு ஒரு தசாப்தம் கூட எடுக்கலாம். தவிர மகிந்தரை ஆட்சிக் கட்டிலிருந்து அகற்றிவிட்டு அவரது இடத்திற்கு யாரைக் கொண்டு வருவது என்ற கேள்வியும் மேற்குலகிற்கு இருக்கின்றது. மகிந்தரின் செல்வாக்கு சிங்கள வாக்காளர்களிடையே படிப்படியாக சரிந்து செல்வதை நடந்து முடிந்து மாகாண சபைத் தேர்தல்கள் உணர்த்தினாலும், மகிந்தருக்கு சவால்விடக் கூடிய நிலையில் சிங்கள தேசத்தில் இப்பொழுது வேறு எந்தத் தலைவர்களும் இல்லை. எனவே மேற்குலகம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது விரும்பும் ஆட்சிமாற்றம் உடனடியாக சாத்தியப்படப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

அப்படியென்றால் எப்படிப்பட்ட ஆட்சி மாற்றத்தை மேற்குலகம் விரும்புகின்றது? இலங்கையில் மேற்குலகம் விரும்பும் ஆட்சிமாற்றத்தை இரண்டு வகையாக நாம் பகுக்கலாம். ஒன்று அனைத்துலக நெருக்கடிகள் மூலம் நீண்ட கால நோக்கில் மகிந்தரின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தி அவரை வீட்டுக்கு அனுப்புவது. மற்றையது குறுகிய கால நோக்கில் அனைத்துலக நெருக்கடிகள் ஊடாக மகிந்தரை மசியவைத்து, அவரைத் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு இணங்க வைப்பது. இந்த இரண்டாவது வகையிலான ஆட்சி மாற்றம் என்பது சாராம்சத்தில் மகிந்தரின் மனதில் மேற்குலகம் கொண்டு வர விரும்பும் மாற்றமே தவிர வேறேதுமல்ல. இலங்கையின் நலனுக்காகவே ஜெனீவா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக பிரித்தானியப் பிரதமரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் வாதிடுவதன் சூட்சுமம் இதுதான்.

யதார்த்தம் இவ்விதமிருக்கும் பொழுது தமிழ் மக்களின் நலனுக்காகவே ஜெனீவா தீர்மானத்?தை மேற்குலகம் கொண்டு வந்தது என எம்மவர்களில் சிலர் வாதிடுவது அபத்தமானது. இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதானால் ஜெனீவா தீர்மானத்தால் நீண்ட கால நோக்கில் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும், இது தமிழ் மக்களின் நன்மைக்காகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அல்ல.

அதேநேரத்தில் ஜெனீவா தீர்மானத்தின் குறைபாடுகள் பற்றி விமர்சிப்பவர்களும் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். தமிழீழ மக்களின் விடுதலைக்காக உயிரை வேலியாக்கிப் போராடிய தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்று இத்தீர்மானம் வலியுறுத்துவதுதான் அது. ஜெனீவாவில் மேற்குலகின் தீர்மானத்தின் உள்ளடக்கத்தின் குறைபாடுகளை விமர்சித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் பிரதிநிதிகள் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மேற்குலக இராசதந்திரிகள் முன்வைப்பதையிட்டோ, தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு இத்தீர்மானம் வழிவகை செய்வதையிட்டோ அலட்டிக் கொள்ளவில்லை.

இது சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை பாசிஸ்டுகள் என்றும், சர்வாதிகாரிகள் என்றும் விமர்சிப்போருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக அமைந்திருப்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஜெனீவா தீர்மானம் அமைய வேண்டும் என்பதில் முழு மூச்சாக நின்றவர்களில் முக்கியமானவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலன். இதன் காரணமாக இவருக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை சிங்களம் போட முற்பட்டது. முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ?பட்டத்து இளவரசர்? சுமந்திரனைப் பயன்படுத்தி ஜெனீவாவில் அனந்தியைப் பேச விடாது வாயை மூட முயற்சித்த சிங்களம், அது கைகூடாது போக, எழுத்தாளர்களாக மாறியுள்ள இறுதிப் போரில் சரணடைந்த முன்னால் போராளிகளைப் பயன்படுத்தி அவர் மீது சேறுபூசும் படலத்தை தொடங்கியது. இறுதிப் போரில் கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்பில் எழிலன் ஈடுபட்டார் என்று இம்முன்னாள் போராளிகள் மூலம் பல்வேறு புனைகதைகளைக் கட்டவிழ்த்து விட்ட சிங்கள பாதுகாப்புத்துறை அமைச்சு, இதற்காக அனந்தி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டது.

இவ்வாறான முயற்சிகளை சிங்களம் மேற்கொண்டவதற்கு எம்மவர்களின் அசமந்தப்போக்கே காரணமாகும். அதிலும் ஜெனீவா தீர்மானத்தின் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய எவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தேசிய விடுதலை இயக்கத்தின் மீதான வீண்பழியைத் துடைப்பதற்கு முற்படவில்லை. இது ஆபத்தான ஒன்று.

 

SHARE