உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: கானா விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்

511
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் சி பிரிவில் விளையாடிய கானா அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது. இந்த வீரர்கள் தங்களின் சம்பளம் குறித்த வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

மேலும் இந்த அணியின் இரண்டு வீரர்கள் கீழ்ப்படியாமை காரணமாக காலவரையறையின்றி நீக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை அன்று போர்ச்சுகல்லுடன் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கணக்கில் கானா தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் இருவர் விளையாடவில்லை. கடந்த 2010ஆம் ஆண்டின் போட்டியின்போது கானா கால் இறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இன்று கானாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் ஆகிய இருவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜான் மஹாமா தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எல்விஸ் அப்ரியே அன்க்ரா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகவும், அவரது இணை அமைச்சராக இருந்த ஜோசப் யம்மின் அஷாந்தியின் பிராந்திய மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதும் உலகக் கோப்பையில் கானாவின் மோசமான ஆட்டமே இந்த பதவி மாற்றத்திற்குப் பின்னணி என்று கருதப்படுகின்றது.

SHARE