தேவன் பிட்டி பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்குமாறு கிராம மக்கள் கூட்டாக கோரிக்கை

423

மன்னார் தேவன் பிட்டி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும், பாடசாலையின் வளர்ச்சியினையும் திட்டமிட்டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாகவும், உடனடியாக குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை உடன் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தேவன் பிட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவன் பிட்டி கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று(3) மாலை அந்தக் கிராமத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து கோரிக்கையினை முன் வைத்தனர்.

மன்னார் தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக தற்போது கடமையற்றுபவரை உடனடியாக மாற்றி புதிய அதிபரை நியமிக்குமாறு கிராம மக்களினால் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய குறித்த அதிபரின் நடவடிக்கைகளினால் பாடசாலையின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்கள் அதிபராக கடமையற்றி வருகின்றார். தற்போதைய காலத்தில் அவரின் செயற்பாடுகள் பாடசாலை வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் இடையூறாக இருப்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

குறித்த அதிபரை உடனடியாக மாற்றி புதிய அதிபரை நியமிக்குமாறு வலயக்கல்வி பணிமனையை கிராம மக்கள் கடந்த மாதம் முற்றுகையிட்ட போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மடு வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார். இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாக இல்லை.

ஆனால் தற்போது குறித்த அதிபரின் தன்னிச்சையான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. மாணவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் தண்டிக்கப்படுகின்றனர்.

சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

எனவே எமது கல்வி சமூகத்தின் கவலைக்கிடமான குறித்த நிலையினை கருத்தில் கொண்டு எமது பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையும் கரிசனையும் கொண்டு தூர நோக்குடன் சிந்தித்து செயற்படும் தகுதியுடைய அதிபர் ஒருவரை உடனடியாக நியமித்து எமது கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப உதவி செய்யுமாறு அக்கிராம மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)
SHARE