வியாழனின் துணைக்கோளில் அந்நிய உயிரினங்கள்

245

வியாழனின் 67 சந்திரன்களில் ஒன்றான யூரோபாவில் (Europa), பனிக்கட்டி சமுத்திரங்களின் அடியில் அந்நிய உயிரினங்கள் வாழக் கூடும் என NASA விஞ்ஞானிகள் மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

சமீப காலங்களாக எமது சூரியத் தொகுதியில் இச்சிறிய சந்திரன், உயிரின வாழ்க்கைக்கு சாதகமான சூழல்களை கொண்டிருக்கிறது என NASA விஞ்ஞானிகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

அதன் ஆழமான, உவர் பனிச் சமுத்திரங்களின் உறைந்த மேலோடுகளுக்கடியில் உயிரினங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போதைய ஆய்வுகள் அங்குள்ள சமுத்திரங்களின் இரசாயன சமநிலையானது, இங்கு புவியில் உள்ளதை ஒத்துள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு உயிரின உற்பத்திக்கு தேவையான போதிய அளவு ஜதரசன், ஒட்சிசன் இருந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

அதேநேரம் அங்குள்ள ஜதரசன், ஒட்சிசன் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒப்பிடக்கூடியதாக, அதாவது ஜதரசனிலும் 10 மடங்காக ஒட்சிசன் உற்பத்தி இருப்பதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

முதலில் ஜதரசன் உருவாக்கம் பற்றி விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டது. இது பனிப்பறைகளிலுள்ள வெடிப்புக்களின் ஊடாக சமுத்திர நீர் ஊடுருவி ஜதரசன் உருவாக்கம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

அடுத்து ஒட்சிசனின் உருவாக்கம், இது பனிப்படுக்கையின் மேல் நீர் உறையும் போது அதன் மூலக்கூறுகள் பிளவடைந்து ஒட்சிசன் உருவாகியிருக்கலாம் என கருதப்பட்டது.

இதன் கலப்பால் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்றே அவர்கள் கருத்து.

இந்த இரு மூலகங்களுக்கப்பால் காபன், நைதரசன், பொஸ்பரஸ், சர்பர் போன்ற பல மூலகங்கள் உயிரின உற்பத்தியுடன் சம்மந்தப்பட்டிருக்கின்றன. இம் மூலகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் NASA தற்போது ஈடுபட்டுள்ளது.

SHARE