தீவிரவாதிகளை கண்டவுடன் சுட்டுக் கொல்ல பாக். பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

507
பாகிஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாக செயல்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் கராச்சி விமான நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகின்றன.

இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த முக்கிய கட்டிடங்களை தகர்த்துள்ள ராணுவம், தரைவழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் முக்கிய நிர்வாக நகரமான மீரான்ஷா நோக்கி அரசின் ராணுவ தரைப்படையினர் முன்னேறி செல்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று தீவிரவாத தடுப்பு சட்டம் நிறைவேறியது.

’பாகிஸ்தானின் பாதுகாப்பு சட்டம்-2014’ என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, தீவிராவாதிகளை கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவினை பிறப்பிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்துக்குரிய எந்த இடத்திலும் கோர்ட்டின் அனுமதியின்றி நுழைந்து சோதனையிடும் அதிகாரமும் அரசின் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய நபரை கைது செய்து 60 நாட்கள் வரை ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைக்கவும், வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர், சைபர் கிரைம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள், சட்டமீறலாக பாகிஸ்தான் எல்லையை கடக்க முயற்சிப்பவர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும் இந்த புதிய தீவிரவாத தடுப்பு சட்டம்-2014 வழி,வகை செய்கிறது.

பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட மசோதா முன்னதாக பாராளுமன்ற மேல்சபையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கானின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி சஹித் அஹமத் இந்த மசோதாவை கீழ்சபையில் அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதாவின் மீதான ஓட்டெடுப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்ஸாப் பங்கேற்காத நிலையில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த புதிய சட்டம் இன்று நிறைவேறியது.

பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள மனித உரிமைகளை மீறும் வகையில் இந்த புதிய சட்டம் அமைந்துள்ளது என்று வலதுசாரி இயக்கமான ஜமாத் இ இஸ்லாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் 2-7-2016 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE