சிறிலங்கா அரசை காப்பாற்றும் வகையிலேயே ஐ.நாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்பட்டது– கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. VIDEO

452

 

kajendrakumarஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசன் அவர்கள் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கை, மற்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பின் நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி )

கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கை, அதன் பின்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் பதில் உரை, இந்த இரு பக்கங்களையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் ஆணையாளரின் அறிக்கை என்பது கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா அதன் முன்னேற்றங்கள் பற்றியதாகும். அந்த அறிக்கையில் காணப்படும் சொற்பதங்கள் அனைத்தும் மென்மைத்தன்மை வாய்ந்ததாகவும் ஐ.நா.அங்கத்துவ நாடுகள் சிறிலங்கா மீது நம்பிக்கை வைக்கலாம், அவர்களுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்பது போலவே அமைந்திருக்கிறது.
ஆனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா காட்டிவரும் அக்கறையின்மை, சர்வதேசத்திற்கு சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாகவும் ஆணையாளர் சிறிலங்கா மீது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். எதிர்பார்க்க கூடிய அளவிற்கு தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஆணையாளர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கைதுகள், சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதையும் நல்லாட்சி என்ற பெயரை மாற்றுக்கின்ற அளவிற்கு செயல்பாடுகள் காணப்பட்டன என்றும் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். தீர்மானத்தை கொண்டு வந்த சக்திகள் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்ற சூழ்நிலையில் வெளிவந்த அறிக்கையாகத்தான் நாங்கள் இதை பார்க்கிறோம்.
தமிழ் மக்களை பொறுத்தவரை நாங்கள் பாதிக்கப்பட்ட தரப்பு. எங்களைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் பாதிப்புக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பொறுப்பு கூறலும் அரசியல் தீர்வும் அத்தியாவசியமாகும். பொறுப்பு கூறல் என்ற வகையில் முழுமையான நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த நீதிமன்ற விசாரணை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையாக அமைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் உறுதியானதும் ஆணித்தரமானதுமான கோரிக்கையாகும்.
ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு பொறிமுறை சிபார்சு செய்திருந்தார். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை நிராகரித்து விட்டனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் தாங்கள் கடந்த கால அரசு போல இல்லாமல் வித்தியாசமாக நடப்பதாக கூறியிருந்தார். வெளிப்படை தன்மையோடு நடக்கின்றோம். சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கு நேரடியாக வந்து நிலைமைகளை பார்வையிடலாம், சர்வதேசத்துடன் வெளிப்படைத்தன்மையுடன் பேசத்தயாராக இருக்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்ற தோற்றப்பாட்டையே அவரின் உரைகளும் செயல்பாடுகளும் அமைந்திருந்தன.
எங்களைப்பொறுத்தவரை கடந்த 60வருடகால வரலாற்றில் சிறிலங்கா அரச தரப்புக்கள் எந்த காலத்திலும் ஆக்கபூர்வமான பதில்களை சொல்லியதில்லை.
கேள்வி ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் நம்பிக்கை கொள்கிறீர்களா?
பதில் முழுமையாக நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. இலங்கை அரசாங்கம் என்ன செய்யவில்லை, என்ன செய்ய வேண்டும் என்ற விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். நீதிப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிறிலங்காவின் நீதித்துறை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே உள்ளக விசாரணையினால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
செம்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை மீறுகின்ற வகையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடுகள் முன்வைத்த தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகள் என்ற விடயம் வலியுறுத்தப்படவில்லை. எனவே ஆணையாளர் எதைச்சொன்னாலும் இறுதியில் நாடுகள் எடுக்கின்ற முடிவுகள் தான் தீர்மானமாக வெளிவருகிறது.
கேள்வி அவ்வாறானால் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை கொடுக்கின்ற வகையில் அமைந்திருக்கிறதா?
பதில் காலஅவகாசம் இன்னும் இருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம்தான் இறுதி அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
கேள்வி ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா?
பதில் பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம்பகத்தன்மையாக இல்லை. வெறுமனே மக்கள் கருத்தை பெறுவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தென்னிலங்கையை மையப்படுத்திய பிரதிநிதிகள் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு சில சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார்கள்.
பொறுப்பு கூறும் விடயங்கள் பற்றி மக்கள் மத்தியில் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படவேண்டும். இந்த விடயங்கள் பற்றி சாதாரண மக்களுக்கு தெரியாது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 9 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பத்தன்மையான சர்வதேச நீதிகளை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையை உருவாக்கினால் தான் அதில் அம்மக்கள் சாட்சியமளிக்கப்பார்கள். உள்நாட்டு பொறிமுறை என்றால் குறிப்பிட்ட சிலர் தான் அதில் சாட்சியமளிப்பார்கள். அந்த பொறிமுறை தோற்றுப்போகும்.
கேள்வி காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
பதில் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்ட மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்களின் கருத்தை உள்வாங்கித்தான் இத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் கருத்தை உள்வாங்கித்தான் இந்த சட்டங்கள் உருவாக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்வாங்காது சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
கேள்வி இலங்கையின் அரசியல் யாப்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையை உருவாக்குவதற்கு இடம் இல்லை என்று ஒரு சாராரும் அதற்கு இடம் இருக்கிறது என மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். சட்டத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?
பதில் இப்போது இருக்கும் சட்டத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதற்கு இடமில்லை. யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்காது சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்பதாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது. சட்டத்தில் இடம் இல்லை என சொல்லி சிறிலங்கா தப்ப முடியாது.
காவல்துறை இராணுவம் தொடர்பான கட்டமைப்பில் மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த மாற்றங்களை செய்யாமல் ஐ.நா.சமாதான படைகளில் கூட சிறிலங்கா படைகளை சேர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இராணுவத்தில் காவல்துறையில் உள்ள நபர்கள் பெரிய அளவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இன்றும் 7 மாதங்கள் தான் இருக்கின்றன. அதற்குள் ஐ.நா.தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என நம்பமுடியாது.
கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது பற்றி அறிந்திருக்கிறீர்களா?
பதில் முத்தரப்பு ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எந்த ஒப்பந்தம் என்றாலும் மக்களின் அனுமதியை பெற்று செய்ய வேண்டும். அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இரகசியமாக செய்வது ஜனநாயக விரோத செயலாகும். தமிழ் தலைமைகள் ஒப்பந்தங்களை செய்வதற்கு முதலும் பின்னரும் அதனை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கேள்வி அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டுகிறீர்களா?
பதில் இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை நான் மட்டுமல்ல பலரும் முன்வைக்கிறார்கள். 2009ல் யுத்தம் முடிந்த பின் சுமார் 9 மாதங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நான் அங்கம் வகித்தேன். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவராக நான் இருந்தேன். அக்காலப்பகுதியில் தீர்வு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அத்தீர்வு திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனைய கட்சி தலைவர்களுக்கும் தெரியாது. தமிழரசுக்கட்சியின் செயலாளராக இருந்த மாவை சேனாதிராசாவுக்கு கூட தெரியாது. தனியே சம்பந்தனுக்கு மட்டும் தான் அந்த தீர்வு திட்டம் பற்றி தெரிந்திருந்தது. சுமந்திரனுக்கும் அது தெரிந்திருந்தது என்பதை பின்னர் அறிந்து கொண்டோம். அவர்களிடம் வெளிப்படைத்தன்மை கிடையாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனால் தான் நாங்கள் வெளியேறினோம். சம்பந்தனும் சுமந்திரனும் தான் முடிவு எடுக்கிறார்கள், தாங்கள் நினைத்ததை செய்கிறார்கள். இவை மாவை சேனாதிராசாவுக்கு கூட தெரியாது.
கேள்வி இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என கருதுகிறீர்கள்?
பதில் இதில் தமிழ் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். உள்ளே இருந்து அவர்களின் ஜனநாயக விரோத செயல்களை மாற்ற முடியாது என கருதியதால் தான் நாங்கள் வெளியேறினோம். கூட்டமைப்பை பொறுப்பு கூற வைப்பதற்கோ அல்லது வெளிப்படைத்தன்மையாக செயல்பட வைப்பதோ எங்களால் முடியாது. மக்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழர் தரப்பின் செயல்பாடுகளில் திருப்தி கொள்கிறீர்களா?
பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடந்த இரு வாரங்களுக்கு முதல் ஜெனிவாவுக்கு வந்து ஐ.நா.மனித உரிமை ஆணையாளரையும் சில இராஜதந்திரிகளையும் சந்தித்து விட்டு சென்றதாக அறிகிறோம்.
இந்த சந்திப்புக்களில் சிறிலங்காவின் கொள்கை சரி என்றே ஆணையாளரிடமும் இராஜதந்திரிகளிடமும் சுமந்திரன் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கொள்கைகளை திருப்திகரமாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டைத்தான் அவர் முன்வைத்திருக்கிறார். சுமந்திரனின் சந்திப்பின் பின்னர் தான் ஆணையாளரின் அறிக்கை கூட மென்மைத்தன்மையாக வெளிவந்திருக்கிறது என நாங்கள் சந்தேகம் அடைகிறோம். அழுத்தத்தை கொடுக்காது காலஅவகாசம் வழங்கும் வகையில் சர்வதேசத்தின் முன் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தின் நல்ல பெயரை நிலைநாட்டுவதற்காகத்தான் உள்ளக விசாரணை என ஜனாதிபதி கூறியிருக்கிறார். இதுதான் சுமந்திரன் கூறும் சிறிலங்காவின் கொள்கை.
எங்களைப்பொறுத்தவரை சிறிலங்காவின் கொள்கையே பிழை என சொல்கிறோம். ஓற்றை ஆட்சியின் கீழ்தான் தீர்வு என்பதுதான் சிறிலங்காவின் கொள்கை.
கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை, சிறிலங்காவின் கொள்கை சரி என செயல்படுகிறார்கள், சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறீர்கள், அப்படியானால் மக்கள் ஏன் உங்களை தெரிவு செய்யவில்லை?
பதில் தேர்தல் காலத்தில் முக்கியமாக ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவை தரவில்லை, எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள் உதவவில்லை. தேர்தல் காலத்தில் எங்களை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய வாதத்தை முன்வைத்தார்கள். 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் சமஷ்டி தீர்வு ஒன்றை பெற்றுத்தருவோம் எமக்கு வாக்களியுங்கள் என பொய் வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்கள் அதனை நம்பி வாக்களித்தார்கள்.
தேர்தல் முடிந்த உடன் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, இனி உள்ளக விசாரணைதான் நடைபெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியது. அவர்கள் ஏமாற்றித்தான் வாக்குகளை பெற்றார்கள்.
அவர்கள் ஏமாற்று அரசியலை செய்கிறார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். சம்பந்தன் 2016 இறுதிக்குள் தீர்வு என சொல்கிறார். தீர்வு ஒரு போதும் வராது என சித்தார்த்தன் கூறியிருக்கிறார்.
கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி கொண்டவர்களால் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில் இது பற்றி அதன் தலைவராக இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் முடிவு எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையை இயங்கவிடாது சுமந்திரனின் எடுபிடிகளால் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஊடாக விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாக தமிழ் தலைமை இருக்க வேண்டும். வெளிநாட்டு முகவர்களாக இருக்க முடியாது. தமிழ் மக்களின் நலன்களை பேரம் பேசி விற்பவர்களாகத்தான் இன்று தமிழர் தலைமைகள் உள்ளன. எனவே புதிய தலைமையை உருவாக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.
கேள்வி உங்கள் கட்சியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இணைத்து கொள்ளும் நோக்கம் இருக்கிறதா?
அவர் விரும்பினால் இருகரம் நீண்டி வரவேற்போம். இனப்படுகொலை தீர்மானம் வடமாகாணசபையில் ஆரம்பத்தில் கொண்டுவந்த போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடுமையாக எதிர்த்தார். பின்னர் தானே அத்தீர்மானத்தை கொண்டு வந்தார். ஜனாதிபதியும் பிரதமரும் யாழ்ப்பாணம் வந்த போது அந்த மேடையில் வைத்து ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையை வலியுறுத்தி பேசினார். அக்கொள்கையை நாங்கள் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகிறோம். ஆகவே எங்கள் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தால் எங்கள் கட்சிக்கு தலைமை தாங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம்.
கேள்வி தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக உருவாக வாய்ப்பு இருக்கிறதா?
பதில் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பிற்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும். தமிழ் தேசிய வாதத்திற்கு உறுதியான மாற்று அணி ஒன்று வேண்டும். அந்த மாற்று அணி ஈ.பி.டி.பியாகவோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி சுதந்திரக்கட்சியாகவோ இருக்க முடியாது. தமிழ் தேசிய வாதத்தை கொண்ட அணி ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரணியாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களுக்கு உண்மையான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்றால் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும். முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
(இரா.துரைரத்தினம்)

SHARE