வாயு தொல்லையை தடுக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்

663

குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாக சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி  குழந்தையை பாதிக்கும்.  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில்  குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சரும பிரச்னைகளை தீர்க்கலாம்.  மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்தது. இது குழந்தையின் தோலுக்கு நல்லது மட்டுமல்லாமல், நன்றாக  தூங்கவும் உதவுகிறது. 

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள்

பால் பருக்கள்: பால் பருக்களும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புதான். இதற்காக எந்த சிகிச்சையும் மேற்கொள்ள தேவையில்லை. ஒரு  சில நாட்களில் அது தானாகவே மறைந்துவிடும்.

பிறப்பு தழும்புகள்: பிறப்பு தழும்புகள் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுவதுதான். குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் இந்த தழும்புகள், சில  வாரங்களில் தானாகவே மறைந்துவிடும்.

தோல் தடிப்பு: தோல் தடிப்பு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சம்பந்தமான ஒரு பாதிப்பாகும். குடும்பத்தில் யாருக்காவது ஆஸ்துமா, அலர்ஜி  என இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். முகம், முழங்கை, மார்பு அல்லது தோள்பட்டைகளில் இந்த பாதிப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால்  மிகவும் நமச்சல் இருக்கும்.

வறண்ட தோல்: பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே வறண்ட தோலுடன் காணப்படும். பிறந்த சில நாட்களில் அவை அப்படியே உரிந்து,  மறைந்து விடும். இதனால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

வியர்வை பாதிப்பு: கழுத்து, அக்குள் பகுதிகளில் ஏற்படும் வியர்வை காரணமாக இளஞ்சிவப்பு நிறத்தில் சருமத்தில் திட்டுத்திட்டாக வரும். எனவே  வியர்வை வராமல் பார்த்து கொள்வது அவசியம். இந்த வியர்வை வராமல் தடுக்க 6மாதங்கள் வரை இறுக்கமான உடைகளையோ அல்லது அதிகம்  பவுடர் போடுவதையோ தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் சுரப்பிகள்:
 குழந்தைகளின் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அடைபடும்போது, சில இடங்களில் வெள்ளை வெள்ளையாகத் திட்டுக்கள்  தோன்றும். ஒரு சில நாட்களில் அந்தச் சுரப்பிகள் திறந்து கொள்ள, திட்டுக்கள் மறைந்து போகும்.

ஈஸ்ட் தொற்று: குழந்தைகளுக்கு சில சமயங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்கும் போது வாய்ப்பகுதிகளில்  இது ஏற்படும்.

விக்கலால் வேதனை: குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும்போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப்பார்த்தால்,   அம்மாக்களுக்கு பயமாக இருக்கும்.

தடுப்பது எப்படி?

* தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள்  அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை  மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏற்படாமல் இருக்கும்.

* தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது  வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

* குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும்போது அவர்களது முதுகுப்பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், விக்கல் நின்று விடும்.குழந்தைகளுக்கு  விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயு  தொல்லை என்றும் சொல்லலாம். எனவே குழந்தைகள் வாயுத்தொல்லையினால்தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள்  வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின்  குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.

மழைக்கால பாதுகாப்பு

கோடைகாலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மழை நேரத்தில் தேங்கியுள்ள  தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் அதிகமான நோய்கள் ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா, வைரஸ் போன்ற தொற்று  நோய்கள் ஏற்படும்.

நோய்களை தடுக்க…

குழந்தைகளுக்கு தரும் உணவு மற்றும் குடிநீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு  பயன்படுத்தும் பால் பாட்டிலை சூடான நீரில் கழுவி, பின் பாலை கொடுக்க வேண்டும்.  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நாப்கின்களை  மழைக்காலத்தில் ஈரமாக வைத்திருக்க கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு தடிப்பு, அரிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி வாரத்திற்கு  ஒரு முறை நகங்களை வெட்டி விட வேண்டும். முக்கியமாக வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.  ஏனெனில் தண்ணீர்  தேங்குவதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

SHARE