இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு

793

இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு அந்த விசாரணைகளில் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

விசாரணைகள் இலங்கை அரசுக்கெதிராக மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகளில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவா ஐநா பணிமனை சாட்சிகளின் விபரங்களை சேகரித்து வருகின்றது. அவற்றில் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பான சாட்சியங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததாக புலிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பதற்கான சில் சாட்சியங்கள் பதிவாகியுள்ளன.

ஒருசில வெளிநாட்டு இணையத்தளங்களில் இவை வெளியாகியுள்ளன. முள்ளிவாய்க்கால் வரை புலிகளுடன் வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பையே விரும்பினர்.

அதனால் இராணுவத்தின் அடக்குமுறையிலிருந்து தப்பவே தாம் புலிகளுடன் வந்தோம் என சாட்சிகள் குறிப்பிட்டுள்ளன. தங்களை ஒருபோதும் புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருக்கவில்லையென்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை புலிகளுடன் தங்கியிருந்து பின்பு இராணுவத்திடம் சரணடைந்த தமிழர்கள் சுமார் 3 லட்சம். அவர்களில் 90 சதவீதமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள்.

முக்கியமான பெற்றோர், சகோதர, சகோதரிகள் அவர்களில் உள்ளடக்கம். மேலும் 30 ஆயிரம் வரையிலான மலையக மக்கள் புலிகளின் பாதுகாப்பையே விரும்பினர். எனவே பணயக்கைதிகளாக தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைக்கப்படவில்லை என சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களே இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளனர். தமது நேரடியான அனுபவங்களை தாம் எதிர்கொண்ட சவால்களை விசாரணைக்குழுவிடம் தெரிவிக்க முன்னறிவித்தல் கொடுத்துள்ளனர்.

இராணுவத்திடம் சரணடைந்த போது தம் உறவுகள் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளனர்.

அகதி முகாம்களில் அதிகமான அவலங்களுக்கு உள்ளானதாகவும், சாட்சிகள் தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்கவுள்ளனர். அவர்களில் சில் பெண்கள் அங்கு தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து சாட்சியமளிக்கவுள்ளனர்.

அந்தச் சாட்சியங்களில் ஒருசில வெளிநாட்டு தொலைக்காட்சிகளிலும் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் கனடாவிலிருந்து வெளிவரும் வாராந்த சஞ்சிகையில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் சென்ற தமிழர்கள் விடுதலைப் புலிகளினால் சுடப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை மறுக்கும் சாட்சிகள் தற்போது விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக அந்தச் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் அனுமதியுடனேயே சிலர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குச் சென்றனர். அவர்களைச் சுட வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த எல்லைப் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடுகள் தமிழர்களை நோக்கி நடத்தப்பட்டது உண்மை. ஆனால் அதிலும் சதி இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புலிகளின் இராணுவ உடை அணிந்த சிலர் அங்கிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதை சல சாட்சிகள் அவதானித்துள்ளன. ஆனால் ஐநா நிபுணர் குழு முன் சாட்சியமளிக்கும் போது புலிகள் தம்மை நோக்கிச் சுட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதனால் அங்கு நேரில் அவதானித்த சாட்சிகள் தற்போது மேலதிகத் தகவல்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க இருக்கின்றனர்.

புலிளகளின் இராணுவ உடையில் இருந்தவர்கள் புலிகள் அல்ல, அவர்கள் துணைப்படையாகவோ, புலனாய்வுப் பிரிவினராகவோ அல்லது அக்காலகட்டங்களில் அங்கு நடமாடிய றோ உளவுப் படையினராகவோ இருக்கலாம் என அந்தச் சாட்சிகள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அதில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தச் சஞ்சிகை குறிப்பிடுகின்றது.

அவர் விடுதபை் புலிகளின் இராணுவத் தளபதி உடையில் காணப்பட்டார். அவர் தாக்குதல் நடத்திய இராணுவத்தினருக்கு உதவி புரிந்துள்ளதையும் சாட்சிகள் குறிப்பிடுவதாக அந்தச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

போரின் போதும், போரின் பின்பும் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் கனடாவிலேயே தஞ்சம் கோரியுள்ளனர். விசேடமாக முட்கம்பிவேலி முகாம்களில் சித்திரவதைக்குள்ளான தமிழர்களும் காணப்படுகின்றனர்.

அங்கு நடந்த கொடுமைகளை விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். விடுதலைப் புலிகளோடு ஏன் சென்றீர்கள் எனக் கேட்டு தாக்கப்பட்ட தமிழர்களின் சாட்சியங்களும் இடம்பெறவுள்ளன.

தமிழர்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டும், மனிதாபிமான அடிப்படையில் மக்களைக் காப்பாற்ற இடம்பெற்ற போர் ஆகிய இரு விடயங்களும் இந்தச் சாட்சியங்களின் பின் கேள்விக்குறியாகலாம் என அந்தச் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் நன்மதிப்பைப் பெற்ற மூவர் எவ்வித உதவித்தொகையும் பெறாமல் இந்த விசாரணைகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது அவர்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே சாட்சியங்களை வரிசைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் எழுத்துமூல சாட்சியங்கள் ஆராயப்படுகின்றன என ஜெனிவா மனித உரிமைப் பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் சில முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் சாட்சியங்கள், விசாரணைகளை ஒவ்வொரு பிரிவாக நடத்த திட்டமிடுகின்றன. அவற்றில் புலிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விவகாரம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அந்த விவகாரத்தில் ஐநா சபையும் சம்பந்தப்பட்டுள்ளதினால் அது தொடர்பான விசாரணைகளை விரைவில் நடத்தலாம் என விசாரணைக்குழு முடிவெடுத்துள்ளது. ஐநா பொதுச் செயலர் சரணடையுமாறு புலிகளுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்தே அவர்கள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா பொதுச்செயலரின் விசேட பிரதிநிதியாக அக்காலகட்டத்தில் விஜய் நம்பியார் கடமையாற்றினார். அவரின் நடவடிக்கைகளை இன்னர்சிட்டி பிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது.

இது தொடர்பாக ஐநா பொதுச்செயலர் உள்ளக விசாரணையொன்று நடத்தியது தெரிந்ததே. அதன்பின்பு இலங்கையில் இடம்பெற்ற போர்க்காலத்தில் ஐநா தவறிழைத்து விட்டதை ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருந்தார்.

ஐநா இவ்விடத்தில் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் பெரும்பாலான தமிழர்களின் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தவறில் ஒரு சில ஐநா அதிகாரிகளுக்கும் பங்குண்டு. இருப்பினும் அந்த அதிகாரிகள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

புலிகள் ஆயுதமௌனிப்பைச் செய்து சரணடையப் போவதாக ஐநா பொதுச்செயலருக்கு அறிவித்தனர். அதன்பின்பு புலிகளின் 12 சிரேஷ்ட தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைந்த தகவல்களும் வெளியாகின. ஆனால் அவர்கள் பின்பு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போரின் போது அவர்கள் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் அவர்கள் சரணடைந்ததின் பின்பே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை இலங்கை அரசு முற்றாக நிராகரித்தது. இருப்பினும் அவர்களின் மரணம் தொடர்பாக தொடர்ச்சியாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன. புதிதமாக ஐநா மனித உரிமை ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழு இது தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானப் பணிமனைப் பொறுப்பாளர் புலித்தேவன், கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ் உட்பட முக்கிய சிரேஷ்ட தலைவர்கள் இதில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக புதிய நிபுணர்குழு இரண்டு பேரின் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக ஜெனிவா ஐநா பணிமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டடக்குழுவின் விசாரணைகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. இலங்கை அரசு இந்த விசாரணைகளுக்கு கண்டிப்பாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக மிகப்பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனவே இலங்கை அரசு தமது தரப்பு செயற்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும். இல்லையேல் பாரதூரமான விளைவுகளை அது சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அனைத்தும் தற்போது மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகள் தொடர்ச்சியாக கோரி வருகின்றன.

அதனால் தற்போது சாட்சிகளைத் தேடிப்பிடித்து விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்துவதில் அவை அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. நேரடியாக பாதிக்கப்பட்ட பலர் தாமாகவே முன்வந்து சாட்சியமளிக்கவுள்ளனர்.

மிக மோசமான அவலங்களைச் சந்தித்த பலர் விசேடமாகப் பெண்கள் கூறும் சாட்சியங்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்வதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் அவலநிலையை உலகுக்கு அவை எடுத்துக் காட்டுகின்றன.

போரின் போது தமிழர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை துலாம்பரமாக அந்தச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. விசாரணை நிபுணர் குழு தமிழர்கள் கூடுதலாக வாழும் நாடுகளுக்கு நேரில் செல்லவுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும் சில நாட்கள் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்களும் செல்லவுள்ளனர். சுவிஸ் நாட்டிலுள்ள சாட்சிகள் ஜெனிவா பணிமனைக்கு வந்து தமது சாட்சியங்களை நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளைக்கொடி விவகார வழக்கிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படவுள்ளது. ஏனைய நாடுகளில் இயங்கும் ஐநா பணிமனைகளிலேயே விசாரணைகள் நடைபெறும். கூடுதலான சாட்சியங்கள் கனடாவிலும் பிரித்தானியாவிலும் இருப்பதனால் அந்த நாடுகளின் விசாரணைக்கான நாட்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெனிவா ஐநா பணிமனைக்கு வந்து சாட்சியமளிக்க சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அதற்கேற்ற வசதிகளை செய்து கொடுக்க பணிமனை முன்வந்துள்ளது. சாட்சிகளின் விபரங்கள் அவர்கள் அளிக்கும் சாட்சியங்கள் அனைத்தும் இரகசியமாக பாதுகாக்கப்படும். சாட்சிகளை கடுமையாக இலங்கை அரசு எச்சரித்துள்ளதினால் இந்த நடைமுறையை விசாரணைக்குழு கடைப்பிடிக்கவுள்ளது.

சாட்சியமளிப்பவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த தகவலை அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளதினால் சாட்சியங்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவசியமேற்படின் இது குறித்து ஐநா பொதுச்சபைக்கும் அறிவிக்க ஐநா மனித உரிமை ஆணையகம் முடிவெடுத்துள்ளது.எதிர்வரும் செப்டபடம்பர் மாதம் ஐநா பொதுச்சபைக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

வி.ஆர் வரதராஜா
ஜேர்மனி

 

SHARE