இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்கள், பொதுவாக அதன் பிராந்திய நல னின் பாற்பட்டதாக விளங்கினாலுங்கூடச், சிறப்பாகத் தேசத்தில் 1948இல் பிரித்தானியர் சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறிச் சென்ற காலப்பகுதியில் ஆரம்பித்து 1972இல் நாடு குடியரசாக்கப்பட்டபோதான காலப்பகுதி இடையிட்டு இன்றுவரை பெரும் பூதாகாரமான நிலையில் இழுபறிப்பட்டுவருவதும், பெருஞ்சாபக்கேடாக விளங்குவதுமான தேசிய சிறுபான்மை இனப்பிரச்சினையை மையமாக வைத்தே இடம்பெற்று வருகின்றன எனலாம்.
இலங்கை ஏற்கனவே சர்வதேசப் பார்வையிலே சிங்களவர்-தமிழர் ஆகிய இரு இனங்களும் குரோதத்துடன் மோதிக்கொள்ளும் நாடு என்னும் உள்ளீர்ப்பே பிரதானமான நிலையிலுள்ளது. இம்மோதலானது வழமையான தொன்றாகவுள்ளதென உலகம் கணித்து வைத்துள்ளது.
இதனால் இக் கணிப்புக்கு இயைபாக உலக நாடுகள் இலங்கை யின் பிராந்திய நலன்களை இன நெருக்கடியோடு இணைத்து நோக்கியே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
உலகநாடுகள் இலங்கையின் பிராந்திய நலன்களையிட்டுப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்போது பிராந்திய நலன்களுக்கு அடுத்தபட்சமாகவே இலங்கையின் பிராந்திய நலன்களை முன்னிட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றனவெனலாம்.
உதாரணமாகப் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற ஒப்பந்தம் இந்திய தேச நலனை முன்னிறுத்தியே அமைந்த ஒன்றெனலாம். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கைத் தமி ழர் பிரச்சினை தொடர்பிலான தாக்கம் 1958ஆம் ஆண்டு இனக்கலவரம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்தே தொடங்கியிருந்ததெனலாம். இத் தாக்கத்தின் வலுவானது படிப்படியாக அதிகரித்து ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் உச்சநிலையடைந்தது.
இலங்கையில் தனித்தமிழ் நாடு கோரி ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோது இந்திய மத்திய அரசும், பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் அவ்வாயுதப்போராட்டம் தொடர்பில் இலங்கைத் தமிழர் நலன்கருதி அலட்டிக்கொண்டதைவிடத் தமது தேச நலன் தொடர்பிலேயே பெரிதும் அலட்டிக்கொண்டிருந்தார்க ளென்பதே உண்மையாகும். இந்தியா பிரித்தானியரிடமிருந்து 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த குறுகியகால நகர்வுக்குள்ளேயே ஈ.வெ. இராமசாமிப்பெரியார் அவர்களால் திராவிடர் கழகம் என்னும் அரசியற் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி திராவிடர் சுயமரியாதை, சுயாட்சி என்பவற்றைப் பின்னணியாகக்கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. திராவிடரின் முழுமையான விமோசனத்துக்குத் திராவிட நாடு ஒன்று மட்டுந்தான் சரியான மார்க்கமாக இருக்கமுடியுமென இக்கட்சி கருதியதனால் திராவிட நாடு என்னும் தனிநாட்டுக்கோரிக்கையை அன்றைய காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலை யில் முன்வைத்தது.
இக்கட்சியின் ஸ்தாபகர் ஈ.வெ. இராமசாமிப்பெரியார் அவர்களுக்கு அடுத்தபடியாக அக்காலப்பகுதியில் கட்சியில் முன்னணி வகித்த சி.என்.அண்ணாதுரை அவர்கள் ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் மணியம்மையார் அவர்களோடு கொண்டிருந்த திருமணம் தொடர்பில் அதிருப்தியடைந்து திராவிடர் முன்னேற்றக்கழகம் என்னும் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பித்திருந்தார். இக்கட்சியும் தமிழர் விமோசனம் தொடர்பில் ஆரம்பத்தில் திராவிட நாடு கோரிக்கையையும் பின்னர் தனித் தமிழ்நாடு கோரிக்கையையுமே முன்வைத்திருந்தது. எனினும் பின்னாளில் இக்கோரிக்கைகள் வலுவிழந்து இக்கட்சிகளினால் கைவிடப் பட்டிருந்தனவென்பதுந் தெரிந்ததே.
இக்கட்சிகளினால் மேற்படி கோரிக்கைகள் கைவிடப்பட்டிருந்தபோதுங்கூட இக் கோரிக்கைகளினால் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த தாக்கம் தொடர்ந்தும் நீடிக்கத்தான் செய்தது. இவ்வாறாகத் தனித் திராவிட நாடு, தனித் தமிழ்நாடு போன்ற தமது தேசத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தினால் தத்தளித்துக் கொண்டிருந்த பாரததேசம் தமிழ் ஈழம் என்னும் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை இலங்கைத் தமிழ் மக்களின் வெகுஜனத் தெரிவாகி அதை வென்றெடுப்பதற்காக வியத்தகு, அசாதாரணமான ஆயுதப் போராட்டமும் பிறப்பெடுத்தபோது விழிப்படைந்தமையும், அவ்விழிப்பின் விளைவாகப் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் அவர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டமையும், இவ்வொப்பந்தம் ஜே.ஆர்.ராஜீவ் ஒப்பந்தமென உலகப்புகழ் பெற்றமையும் அறியப்பட்டவொன்றே. எனி னும் இவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்ட பின்னணி இந்திய ஆரிய ஆதிக்கத்தையும், இலங்கையின் ஆரிய ஆதிக்கத்தையும் அழிவுறாமல் பாதுகாக்கவேண்டுமென்னும் மன எழுச்சியே என்பதற்கு அவ் வொப்பந்தத்திற்குப் பின்னாளில் ஏற்பட்ட கதியொன்றே கலங்கரைவிளக்கமாக நின்று இன்றும் சாட்சி பகர்ந்துகொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழருக்கென்று தனிநாடு அமைவது ஆரம்பத்தில் திராவிடக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுப் பின்னாளில் கைவிடப்பட்ட தனித் திராவிடத் தமிழ்நாட்டுக் கோரிக்கைகள் மீண்டும் எழுச்சியுறுவதற்குத் தூண்டுதலாக விருக்குமென பாரத ஆரிய ஆதிக்க சக்திகள் உணர்ந்ததன் பெறுபேறாகவே இலங்கைத் தமிழ்மக்களின் ஏகோபித்த தெரிவான தமிழ் ஈழம் என்னும் கோரிக்கை வெற்றிபெறுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே அன்றைய இந்தியப் பிர தமர் ரஜீவ் காந்தி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். மேற்குப் பாகிஸ்தான்-கிழக்குப் பாகிஸ்தான்(பங்களாதேஷ்) யுத்தத்தின்போது, தென்கிழக்கு ஆசியாவி லேயே இஸ்லாமிய பொதுவுடமை அரசு என்னும் புதிய இஸ்லாமிய அரசிற்கான எண்ணோட்டம் இஸ்லாமிய மக்களுக்குள் வலுப்பெறும் வாய்ப்பு உண்டென உணர்ந்து நின்ற அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் அத்தகைய எண்ணோட்டம் இஸ்லாமிய மக்களுக்குள் பிறப்பெடுப்பதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே அவசர அவசரமாகத் தனது படையினரைப் பங்களாதேஷ் சார்பிலே யுத்தமுனைக்கு அனுப்பிவைத்தமைபோலவே அவரது புதல்வரான ரஜீவ்காந்தி அவர்களும் இலங்கையின் அமையும் தனித் தமிழ் நாட்டினால், பாரதத்திலும் தனித திராவிட, தனித் தமிழ் எழுச்சி மீண்டும் எழக்கூடிய வாய்ப்பு உள்ளதென எண்ணியதனாலேயே தனித் தமிழ்நாடு இலங்கையில் உருவாகு வதைத் தடைசெய்யவேண்டும் என்னும் மன ஓர்மத்தோடும் மிகுந்த அக்கறையோடும் ஜே.ஆர் அவர்களோடு ஒப்பந்தஞ்செய்ய முன்வந்தார். எனவே, இரு தேசங்களினதும் ஆரிய ஆதிக்க சக்திகளின் அதிகாரத்துக்கான தக்கவைப்பே இவ்வொப்பந்தம் என்பது மிகையன்று.
1977ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களிடம் தனித் தமிழ் நாட்டுக்கான ஆணையை மிகுந்த பலத்துடன் பெற்றிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியினர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஐ.தே கட்சிக்கு அடுத்ததாக அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனால் எதிர்க்கட்சி ஆசனத்தையும் இலாகவகமாகத் தட்டிக்கொண்டதன் மூலம் தம்மால் விளம்பப்பட்ட ஸ்ரீலங்கா வேறு நாடு – தமிழ் ஈழம் இன்னொரு நாடு என்னும் புதிய அரசியல் கருத்தோவியத்தைத் துஷ்பிரயோகஞ் செய்தமைமட்டுமல்ல, தொடர்ந்தும் அவர்களின் நவீன தமிழ் அரசியல் இஷத்துக்கமைவான ஸ்ரீலங்கா அந்நிய நாடு என்னும் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் விரோதமாகத் தமிழர் விடுத லையை விரும்பாத, ஆயுதப்போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகளாவிய பயங்கரவாத அமைப்புக்களிலொன்றென எகத்தாளமாக முத்திரையிட்டு நிலையாக நின்ற அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சார்பாக ஜே.ஆர், பிரேமதாஷ தலைமைக்குச் சிறி தளவேனும் சளைக்காமல் தொடர்ந்தும் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆணையைச் சிறிதளவேனும் மனச்சாட்சியில்லாமல் துஷ்பிரயோகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதன் பெறுபேறாக முன்னணித் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இயற்கை மரணம் அமை யாமல் போனமையும் கண்கூடே.
இலங்கை இன நெருக்கடியை மையமாகவைத்து அத்தேசந் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் சர்வதேசப் பேச்சுக்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் தமிழர்விடுதலைக் கூட்டணியின் அன்றைய வகிபாகத்தின் அடிப்படையை ஒத்ததாகவே விளங்குகின்றது. அன்றைய ஆசன அணைவின் நிமித்தமாக ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலை வராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும், இன்றைய இட இணைவின் வாயிலாக இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுமாகத் தனிநபர் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்றதேயொழியத் தமிழ் மக்களின் சுயாட்சித் தாகத்தை அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புறக்கணித்துத் துர்ப்பாதையில் சென்றமைபோலவே, இன்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பார் அம் மக்களின் சுயாட்சித் தாகத்தை அப்பால் நகர்த்திவிட்டுக் கேடுசூழ் வழியிலேயே நகர்ந்துகொண்டுமிருக்கின்றார்கள்.
இலங்கை தொடர்பில் தமிழர் பிரச்சினையைப் பின்னணியாகவைத்து சர்வதேச நாடுகளினால் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இராஜதந்திரக் காய்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கும் இரா.சம்பந்தன் அவர்களும், வடமாகாண சபையின் முதலமைச்சராக விளங்கும் விக்னேஸ்வரனும் சர்வதேசத் தலைவர்களோடு இணைந்து எவ்வளவு தான் களிபேருவகையோடு அபி நயம் பிடித்தாலும், இன்று இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் என்னும் இராஜதந்திரக் காய்நகர்த்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுக ளில் எந்தவொரு நாடும் இலங்கையின் தேசிய நலனுக்கோ, அத்தேசத்தில் வதியும் தமிழ் மக்களின் தேசிய நலனுக்கோ சார்பாக எதுவுமே செய்துவிடப்போவதில்லை மாறாக இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போன புண்ணாக விளங்கும் தேசிய சிறுபான்மையினப் பிரச்சினை தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருக்கத்தக்கதான ஒரு நிலையை உருவாக்கித் தீவு முழுவதையுமே அமெரிக்க தேசம் வியட்நாமை விழுங்கிய பாணி யில் விழுங்குவதற்காகவே இந்நாடுகள் ஒவ்வொன்றும் நாவில் உமிழ்நீர் ஊறும் நிலையில் போட்டி போட்டுக் காத்திருக்கின்றனவெனலாம்.
எடுத்துக்காட்டாக அமெரிக்க தேசமானது, சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் ஆகியோரது தீர்க்கதரிசனமற்ற, தூரநோக்கற்ற இயல்பினால் இலங்கைத் தமிழ் மக்கள் தமது பாரம்பரியத் தாயகத்தை இழந்து நின்ற கவலைக்கிடமான காலப்பகுதியிலிருந்து ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களது இலங்கைத் தமிழரசுக்கட்சி என்வற்றின் நடவடிக்கைகள் இடையிட்டு, ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலம்வரை இலங்கை இனநெருக்கடியின் விளைவாக இலங்கை தீவில் பிரதிபலித்த ஒவ்வொரு அம்சத்தையும் அசாதாரணமான தந்தி ரோபாயங்களுடன் தனது நலனுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டதெனலாம். எடுத்துக்காட்டாகச் சேர்.பொன்.இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் பாரம்பரிய தமிழர் தாயகத்தைத் தமது அடிமுட்டாள்த்தனத்தினால் பறிகொடுத்த காலப்பகுதியின்போது அமெரிக்காவின் கழுகுப் பார்வை இலங்கையின் மீது மிகவும் வெறித்தனத்துடன் வட்டமிட ஆரம்பித்தது. இப் பார்வையானது இத் தலைவர்களுக்குப் பின்னர் தம்மைத் தமிழ்த் தலைவர்களாக்கிக்கொண்ட ஜி.ஜி, எஸ்.ஜே.வி போன்றவர்களுடன் சிங்கள முதலாளித்துவ அரசுக்கு முண்டுகொடுக்கும் விதமாக இலங்கைத் தமிழர் உரி மைகள் தொடர்பிலான மடைத்தனமான நடவடிக்கைகளினால் முன்னரைவிட அதிக வீச்சுடன் இடம்பெற்றது.
துரதிட்டவசமாக 1980களில் பலராலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத்தரும் என நம்பப்பட்ட ஆயுதப் போராட்டமும் கூட சேர்.பொன் இராமநாதனின் காலத்திலிருந்து ஜி.ஜி, எஸ்.ஜே.வி ஆகியோரின் காலம் இடையிட்டு அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் காலம் வரையிலான இலங்கைத் தமிழர் உரிமைகள் தொடர்பிலான நடவடிக்கைகள் இலங்கை தேசம் என்னும் நிலையிலும் சரி, சர்வதேச முகாமுக்குள்ளும் சரி ஏகாதிபத்திய முதலாளித்துவ வலைப்பின்னலுக்குள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இராணுவ இணைவு உருவாகி பிசுபிசுத்துப் போனமையுந் தெரிந்ததே.
இந்நிலையில் தான் அண்மைக் காலமாக அமெரிக்க இராஜ்ஜியப் பிரதி நிதிகள் அடிக்கடி இலங்கை வருவதால் கொழும்பில் அரச தரப்பினரோடு உரையாடு வதும் (தற்போதைய அரச தரப்பினர் அமெரிக்க தாசர்களென்பது வெள்ளிடைமலையே) போதாக்குறைக்கு அமெரிக்க நலன் பேண் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாரையும், முஸ்லீம் லீக் போன்ற இஸ்லாமிய அமைப்புக்களையும், மலையகத்தின் அமெரிக்க தாசர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிவிட்டுச் செல்வது வழமையானவொன்றாகவிட்டது. இச் சந்திப்புக்களின் தொடர்ச்சியாகவே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் அவர்கள் கொழும்புக்கு வந்திருப்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைக் சந்தித்துக் கலந்துரையாடுவதும் இன்றைய பிரதான ஊடகத் தகவலாக விளங்குகின்றது. மேலும், ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனப்போக்கு காட்டப்படுவது தொடர்பில் கூட்டமைப்புப் பிஸ்வாலுக்குச் சுட்டிக்காட்டுமெனவும், பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதுமே அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தொடர்பிலும் அவ்வமைப்பு எடுத்துக்கூறுமெனவும் தகவல் கசிந்துள்ளது.
சம்பந்தன் அவர்கள் மேற்படி முறைப்பாடுகளை நிஷா பிஸ்வால் அவர்களுக்கு அளித்தாலுங்கூட அவர் இலங்கை இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தை வழங்குவது அசாத்தியமான வொன்றேயெனலாம். இதே போலவே பொறுப்புக்கூறல் விடயத்திலும் சம்பந்தனின் முறைப்பாட்டுக்கு இயைபாக வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு நிஷா பிஸ்வால் அவர்களின் இலங்கை விஜயம் ஒருபோதும் பயனளிக்காது. இவ்வமெரிக்கப் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்வது இது முதற் தடவையல்ல. முன்னரும் இந் நபர் இலங்கைக்கு விஜயம் செய்து அரச தரப்பினரையும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரையும் சந்தித்துச் சென்றும் எதுவுமே உருப்படியாக நடந்ததில்லையென்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டியேயாக வேண்டும்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா அவர்களும் தமிழ் இனத்தைச் சேர்ந்த தலைமை நீதியரசர் சிறிபவனைச் சிங்கள அரசியல்வாதியாக நான் நம்புகின்றேன். ஏன் தமிழ் மக்கள் அவரை நம்ப முடியாது. தலைமை நீதியரசரே போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்குத் தகுதியான நீதிபதிகளை நியமிப்பார் எனவும் கருத்துவெளியிட்டுள்ளார். தமி ழர் என்னும் காரணத்துக்காக ஒருவரை நம்ப முடியுமாக இருந்தால் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களையும் தமிழ் மக்கள் நம்பியிருக்கலாமா? என மேற்படி அமைச்சரிடம் வினவுவது பொருத்தமானவொன்றாகவிருக்கும்.
இலங்கை தொடர்பிலான சர்வதேசப் பேச்சுக்கள் யுத்தம் நிறைவெய்தி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டபோதுங்கூடத் தொடர்ந்து நீடித்துக்கொண்டு வருகின்றதோடு அமெரிக்கா உட்படச் சர்வதேச இராஜ்ஜியப் பிரதிநிதிகள் அடிக்கடி நாட்டுக்கு விஜயம் செய்கின்றமையோடு அவர்கள் அரச பிரதிநிதிகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பாரையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றதோடு தமிழர் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்ந்தும்விடுகின்றது. இத் தற்காலிகத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பாரின் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் வகிபா கம் அசாதாரணமான அபிநயங்களுடன் முடிவடைந்தும் விடுகின்றது.
அத்தோடு சம்பந்தன் அவர்கள் 10.07.2016இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் தமிழ் மக்களின் பிரச்சினை பன்னாட்டு மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. பன்னாட்டுக் கண்காணிப்புத் தொடரவேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றோம் என அட்டகாசமாக வாய்மொழிந்தும் இருக்கின்றார்.
சம்பந்தன் அவர்களால் வாய்மொழியப்பட்ட பன்னாட்டுக் கண்காணிப்பு என்பது தமி ழர் பிரச்சினையின் தீர்வின் பாற்பட்டதா? அல்லது அப்பிரச்சினையின் முடிவற்ற இழுபறியின் பாற்பட்டதா? என எண்ணிப்பார்ப்பதன் மூலம் இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வகிபாகம் சினிமாப் பாணியில் அமைந்த வெறும் அபிநயங்களாக மட்டுமே உயிர்பெற்று நிலைக்குமென்பதே நிஜத்திலும் நிஜமாகும்.
கருணைக்கண்ணன்