இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஆட்சி செய்யும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேரை கடத்தி சென்று தீவிரவாதிகள் கொன்றனர்.
அதற்கு பழிவாங்கும் செயலாக பாலஸ்தீனிய இளைஞரை கடத்திய 3 யூதர்கள் அவர்களை உயிருடன் எரித்து கொன்றனர். இதனால் இஸ்ரேலுக்கும், காசா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
காசா பகுதியில் உள்ள நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 24 பேரும், 4 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பொதுமக்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 5 குழந்தைகளும் அடங்குவர். இந்த குண்டு வீச்சு காசா பகுதியில் 100 இடங்களில் நடத்தப்பட்டது. தாக்குதலில் 40 ஆயிரம் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் டெல்அவிவ் மீது ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் வீசினர்.
காசாவில் உள்ள ஆஷ்தாத், ஹைபா ஆகிய நகரங்களில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்படுகின்றன. இந்த தாக்குதலில் பலியானோர் மற்றும் சேத விவரம் இது வரை தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் கட்நத 7–ந்தேதி இரவு முதல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் 117 ராக்கெட்டுகளை வீசியுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற அச்சுறுத்தலை எந்த நாடும் சந்தித்து இருக்காது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து காசா பகுதியில் உள்ள தெற்கு இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காசாவில் இருந்து 40 கி.மீட்டர் தூர நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோடைகால முகாம்கள் மூடப்பட்டன.
வீடுகளில் இருந்து பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.