அத்துடன், விசாரணையாளர்களுக்கு மேலதிகமாக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விசாரணை செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை வரவுள்ள நான்கு விசாரணையாளர்களும் 15 நாட்கள் இலங்கையில் கள நடவடிக்ககைளில் ஈடுபடவுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் நேர்காணல்களையும் செய்யவுள்ளனர்.
அத்துடன் சிவில் சமூக பிரதிநிதிகள், அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்க்கின்றனர். மேலும் விசாரணைக் குழுவைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையில் மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவானது விரைவில் விசாரணை செயற்பாட்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது விசாரணைக் கட்டமைப்பு விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் ? எவ்வாறான முறைமைகள் பின்பற்றப்படும்? எந்தெந்த நாடுகளுக்கு விசாரணையாளர்கள் விஜயம் செய்வார்கள்? சாட்சிகள் எவ்வாறு பெறப்படும் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய செயற்பாட்டுத் திட்டமே விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணையாளர் 10 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த கண்காணிப்பையும் ஆவணப்படுத்தலையும் முன்னெடுக்கவுள்ளார்.
தகவல்களை ஆய்வு செய்தல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை சந்தித்து உரையாடுதல் போன்றவற்றையும் இவர் 10 மாத காலத்தில் முன்னெடுக்கவுள்ளார்.
விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட ஆலோசகர் 8 மாத காலத்தில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட்ஙகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாக உதவியாளர் ஒருவர் 10 மாத காலத்தில் பொதுவான விடயங்களை கவனிக்கவுள்ளதோடு நிர்வாக மற்றும் ஏனைய வசதிகள் குறித்து பார்க்கவுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய வகையில் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள தடய அறிவியல் நிபுணர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக் காட்சி போன்றவற்றை ஆய்வு செய்யவுள்ளார். பால்நிலை நிபுணர் நியுயோர்க்கில் இருந்தவாறு இரண்டு மாதங்கள் பணியாற்றவுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் பட்சத்தில் ஒரு மாத காலம் இலங்கையில் தங்கியிருப்பார்.
மேலும் இரண்டு விசேட நிபுணர்கள் ஜெனிவாவில் 21 நாட்களும் இலங்கையில் 5 நாட்களும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் 5 நாட்களும் பணியாற்றவுள்ளனர்.
அத்துடன் ஒரு விசேட நிபுணர் வட அமெரிக்காவுக்கு 5 நாட்களுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இவர்கள் தகவல் சேகரித்தல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுடன் நேர்காணல்களை செய்தல் ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதேவேளை விசேட நிபுணர்கள் அல்லாத விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள இரண்டு விசாரணையாளர்கள் ஐரோப்பாவுக்கு 7 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியாளர்களையும் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன் நான்கு விசாரணையாளர்கள் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கு 10 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு சாட்சியாளர்களை சந்திக்கவுள்ளதுடன் ஏனைய தகவல் மூலங்கள் குறித்தும் ஆராயவுள்ளனர்.
அந்தவகையில் விசாரணை செயற்பாடுகள் பிரயாணங்கள ஆவணப்படுத்தல் உள்ளிட்ட செலவுகளுக்காக 14,60,900 டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விசாரணையாளர்களின் பிரயாணச் செலவுக்காக 111,700 டொலர்களும் விசேட நிபுணர்களின் பிரயாணச் செலவுக்கு 84,000 டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசகர்களுக்கான செலவாக 49,600 டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகளின் விசாரணை நடவடிக்கைகள் குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்திலேயே இலங்கைக்கு வருவதற்கான அனுமதியையும் விசாரணைக் குழு கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாட்டின் எந்தவொரு நகர்வையும் ஏற்கப்போவதுதமில்லை என்றும் விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவும் மாட்டாது என்றும் அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டுவருகின்றது.
எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 27வது கூட்டத் தொடரில் இலங்கை விசாரணை செயற்பாடு குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமையினால் விசாரணைக் குழு சில வாரங்களில் விசாரணை செயற்பாட்டை ஆரம்பித்து விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
12 பேர் கொண்ட விசாரணைக் குழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்டது. விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று விசேட நிபுணர்களும் நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் பின்லாந்து அரசின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழுவில் விசாரணையாளர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், பால்நிலை சிறப்பு நிபுணர் , சட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு 10 மாதங்களில் இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 வது அமர்வில் குறித்த விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னர் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 27 ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2014 ம் ஆண்டு ஜூன் 15 ம் திகதி முதல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதியாகும் போது விசாரணைக் குழுவின் முழுமையான அறிக்கை தயார் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழு இலங்கைக்கு எதிராக பல நாடுகளுககும் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மற்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இது குறித்து அடிக்கடி தெளிவான அறிவிப்பை விடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க அனுமதிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் கடந்த மாதம் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.