5வது நாளாக இஸ்ரேல் தாக்குதல் பலி எண்ணிக்கை 127ஆக உயர்வு

464

பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ்க்கு எதிராக காசா மலைப் பகுதியில் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது இஸ்ரேஸ் ராணுவம். 5வது நாளை எட்டியுள்ள இந்த தாக்குதலில் இதுவரை 127 பேர் இறந்துள்ளனர். நேற்று நடைபெற்ற விமான தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 127ஆக உயர்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்கள் பதுங்கியுள்ள இடத்தை நோக்கி, இதுவரை 60 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஐக்கிய நாடுகள் சபை, பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி வருகிறது. இருப்பி னும் தொடர்ந்து இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

எந்த நெருக்கடிக்கும் பணியப் போவதில்லை. நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதே எங்களுடைய நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நேதான்யாகு கூறியுள்ளார். நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அமைப்பு இயங்கிவரும் கட்டிடம் சேதமடைந்ததாகவும், அதில் 2 பேர் பலியானதாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமான தாக்குதலில் காசா மலைப் பகுதியில் உள்ள மசூதிகள் சேதமடைந்ததாக ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால், அங்கு பயங்கர ஆயுதங்களுடன் ஒரு பிரிவினர் பதுங்கியிருந்ததால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுவரை பலியானவர்களில் 77 சதவீதம் பேர் பாலஸ்தீன அப்பாவி மக்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுவரை 1,160 விமான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல் ஹமாஸ் அமைப்பு 689 முறை ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

SHARE