எனவே கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் பூர்வாங்க முடிகள் கடந்த 7ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.முதல் சுற்றில் இரண்டாமிடத்தில் இருந்த அஷ்ரப் கனி இந்த சுற்றில் 56.4 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத அப்துல்லா அப்துல்லா போலி வாக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டு மறுமுறை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்றார்.இந்தப் பிரச்சினை சுமூகமாக ஒரு முடிவுக்கு வர அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் ஐ.நா தலைவர் ஜான் குபிஸ் ஆகியோர் கடந்த இரு தினங்களாக இந்த வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர்.
இதன்முடிவில் ஐ.நாவின் மேற்பார்வையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் அதன் முடிவினை ஏற்றுக்கொள்வதாக இருவரும் அறிவித்துள்ளனர். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயும் இதனை வரவேற்றுள்ளார். மறுவாக்கு எண்ணிக்கை விரைவில் துவங்கும் என்றும் அதில் 100 சதவிகித தணிக்கை நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் புதிய அதிபர் தேர்வு செய்யப்படும்வரை கர்சாய் அதிபர் பொறுப்பில் நீடிப்பார் என்பதனையும் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.கடந்த 2001ஆம் ஆண்டு தலிபான்களின் பிடியிலிருந்து மீள ஆப்கானின் உதவிக்கு வந்த நேட்டோ துருப்புகள் இந்த ஆண்டு முற்றிலுமாக விலகத் துவங்கியுள்ள நிலையில் அங்கு மீண்டும் அவர்களின் வன்முறைகள் தொடர ஆரம்பித்துள்ளன.
எனவே அதிபர் தேர்வில் ஏற்படும் சுணக்கம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் தோன்றியிருந்தது.வேட்பாளர்களின் புதிய முடிவினால் அங்கு நிலைமை சீரடையக்கூடும் என்ற நம்பிக்கை தற்போது மக்களிடையே தோன்றியுள்ளது.